Tuesday, 4 March 2014

உப்பைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்த சில அருமையான டிப்ஸ்..!



உணவில் சுவையை அதிகரிக்க உதவும் உப்பு, வீட்டை சுத்தப்படுத்த உதவும் பொருட்களிலும் முக்கியமான ஒன்று. இத்தகைய உப்பைக் கொண்டு வீட்டில் உள்ள பல பொருட்களை சுத்தப்படுத்த முடியும்.

உங்களுக்கு வீட்டிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது தெரியுமா? ஆம், உப்பு துர்நாற்றத்தைப் போக்குவதிலும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இதுப்போன்று யாரும் எதிர்பார்க்காத சில பொருட்களை சுத்தப்படுத்தவும் உப்பு உதவியாக இருக்கும். இங்கு உப்பைக் கொண்டு வீட்டில் உள்ள எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போம்.

உப்பு கலந்த நீரை டம்ளரில் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை கொண்டு தேய்த்து கழுவினால், டம்ளரில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் நீங்குவதோடு, டம்ளரும் பளிச்சென்று மின்னும்.

வீட்டில் உள்ள இஸ்திரி பெட்டியில் துரு இருந்தால், அவற்றைப் போக்குவதற்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் இந்த உப்பு நீரைக் கொண்டு ஒருமுறை சுத்தம் செய்தால் போதாது, துரு போகும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.

சில்வர் பொருட்கள் பளிச்சென்று மின்னாமல் இருந்தால், அப்போது அவற்றை உப்பு கொண்டு சுத்தம் செய்தால், சில்வர் பாத்திரங்களானது நன்கு பளிச்சென்று மின்னும். அதற்கு சில்வர் பொருட்களை வெதுவெதுப்பான உப்பு நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

ஒயின் கறைகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இந்த கறையை எளிதில் போக்க வேண்டுமெனில், கறைப்படித்த தரைவிரிப்பானை உப்பு நீரால் தேய்த்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, சோப்பு போட்டு துவைத்தால், உடனே போய்விடும்.

மைக்ரோ ஓவனை எளிதில் சுத்தம் செய்ய ஒரே சிறந்த வழியென்றால், அது 2 டேபிள் ஸ்பூன் உப்பை நீரில் கலந்து, அந்த நீர்மத்தை துணியால் நனைத்து, மைக்ரோ ஓவனை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் ஓவனில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசைகள் எளிதில் வெளிவந்துவிடும்.

ஜீன்ஸ் ஊற வைக்கும் போது, 1 கப் உப்பை சோப்பு நீரில் சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் துவைத்து, சுத்தமான நீரில் அலசினால், ஜீன்ஸில் உள்ள கறைகள் நீங்கி, புதிது போன்று காணப்படும்.

காபி பாத்திரத்தில் காபியின் கறைகள் படிந்து கருப்பாக இருக்கும். அப்போது அந்த பாத்திரத்தில் உள்ள கருப்பு கறைகளைப் போக்க, வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, காபி பாத்திரத்தை 3 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், கறைகள் சீக்கிரம் போய்விடும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா