Sunday 23 March 2014

திருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்...!



திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் தாம் தெளிவாக இருப்பதுபோல காட்டிக் கொள்வதற்காக ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மண வாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

இன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வைக்கிறார்களேத் தவிர, உண்மையான – பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.

பிரம்மச்சாரிகளைவிட குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியே செய்து நிரூபித்து இருக்கிறார்கள் என்பதை எல்லா தம்பதியரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மனிதப் பிறவி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். சொத்து, பணத்துக்காகவே வாழ்வதற்கும், எதற்கெடுத்தாலும் ‘ஈகோ’வால் கோபப்பட்டு ஆனந்தத்தை தொலைப்பதற்கும் யாரும் பிறவி எடுக்கவில்லை.

முடிந்தவரை எல்லோரும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஆனந்தமாக இருந்தால், மற்ற எல்லாவித ஆனந்தங்களும் வந்து சேரும். இதையும்கூட ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்து விட்டு ”எனக்கு இவர் வேண்டாம்” என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டி விடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.

திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.

குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.

நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண ஜோக்குகளும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின் போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன் என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்து விடும்.

மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர் தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்.

இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்து கொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டு வேலைகளை அதிகம் சுமத்துவது, குறை கூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜவாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.

வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.

திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்-மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.

உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறை வேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினை களுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.

தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நகச்சுற்று (Paronychia) பற்றிய அதிர்ச்சி தகவல்கள்...!



நகத்தின் வெளி ஓரமாகவோ அன்றி நகத்தைச் பக்கங்களிலும் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித் தொற்றுத்தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படலாம்.

இது ஒரு வகையில் சிறிய கட்டுப் (Abscess) போன்றதுதான்.

பின்னர் பழுத்து வரும்போது சற்று மஞ்சள் நிறமாக மாறும்.

பக்றிரியா, பங்கஸ், மற்றும் ஈஸ்ட் போன்ற கிருமிகள் தொற்றுவதால் ஏற்படுகிறது.

எவ்வாறு ஏற்படுகிறது?

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே ஏற்படுவது மிக அதிகம்.
கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளிடமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதாலும் ஏற்படலாம். அவ்வாறான செய்கைகளின் போது ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றிச் சீழ் பிடிப்பதால் இது ஏற்படுகிறது.

சமையல் வேலை, தோட்ட வேலை, தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக் கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.

சில சருமநோய்களால் ஏற்படலாம். பெம்பிகஸ் (Pemphigus Vulgaris)போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித் தொற்று ஏற்பட்டும் வரலாம்.

நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Hang Nail என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும்போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடிக்கலாம்.

பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும் பின்னர் முன் கூறியதுபோல சீழ்ப்பிடித்து வீங்கும்.

மருத்துவம்

வீட்டு மருத்துவமாக ஆரம்ப நிiலையில் வெந்நீரில் 10-15 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைப்பதன் மூலம் சுகம் கிட்டலாம். தினமும் 3-4 தடவைகள் அவ்வாறு செய்யலாம்.

மருத்துவரிடம் சென்றால், கிருமியெதிர் மருந்துகளை (antibiotics)உபயோகிப்பதன் மூலம் ஆரம்பத்தில் குணப்படுத்த முடியும். சற்று அதிகமானால் அவ்விடத்தை மரக்கச் செய்வதற்கு ஊசி மருந்து போட்ட பின் கீறி சீழை அகற்றுவதன் மூலம் சுகப்படுத்தலாம்.

ஏற்படாமல் தடுத்தல்

நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது தடுப்பதே இதைத் தவிர்க்க ஒரே வழியாகும்.

நகம் கடிப்பதை முற்றாகத் தவிருங்கள்.

நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் அக்கறையுடன் பேண வேண்டும்.

நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்டுங்கள்.

குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.

நல்ல கூரான நகவெட்டியை மட்டுமே உபயோகியுங்கள்.

கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும் கால் நகங்களினது
நேராகவும் இருக்குமாறு வெட்டவும்.

நகங்களை ஒட்ட வெட்டுவது கூடாது.
 
நண்பேன்டா