Sunday 9 February 2014

கோமாவில் ஞாபகசக்தி இழந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம்..!



லண்டன்: திடீர் இருதய கோளாறால் பழைய நினைவுகளை இழந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளம்பெண் அமந்தா கார்த் (27). இவருக்கும் கோடி கார்த் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

முதலிரவு அன்று அமந்தாவுக்கு புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினார். திடீரென மயங்கி விழுந்த அமந்தாவை பார்த்து கோடி கார்த் அதிர்ச்சி அடைந்தார். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று மனைவியை தட்டி எழுப்பினார். ஆனால், அவரிடம் எந்த சலனமும் இல்லை.

உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அமந்தாவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், அமந்தாவுக்கு மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டுள்ளது. மிக மிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இதுபோல் ஏற்படும். அந்த நேரத்தில் மாரடைப்பு போல் இருக்கும். இருதயம் சரிவர செயல்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் அமந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நான்கு நாள் கோமாவில் இருந்த பிறகு அமந்தா கண் விழித்தார். அருகில் இருந்த கோடி கார்த் மற்றும் டாக்டர்களை பார்த்து, நான் யார்... எங்கிருக்கிறேன் என்று அமந்தா கேட்டார். அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் மூலம் கோமா ஏற்பட்டு, பழைய நினைவுகள் அனைத்தையும் அமந்தா இழந்து விட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த இன்சைட் எடிஷன் என்ற செய்தி இதழ் நிர்வாகம், 10 மாதங்களுக்கு பிறகு இப்போது அமந்தா, கோடி கார்த், அவர்களுடைய உறவினர்கள், அமந்தாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. நட்சத்திர ஓட்டலில் அமந்தா & கோடி கார்த்துக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. என்னுடைய திருமண நாளில் நடந்த விஷயங்கள் ஒன்று கூட நினைவில்லை. அதனால் உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து எங்களுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று அமந்தா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா