Sunday, 9 February 2014

மரணத்திற்குப் பின்..? - சில உண்மை சம்பவங்களும் , அலசலும்..!



இறப்பு என்றாலே நமக்கு ஒரு அச்சம்; மனதிலே ஒரு பயம். அதுதான் நமது முடிவா? இல்லை, அதற்குப் பிறகும் இன்னொரு பிறப்பு அல்லது ஒரு வாசல் காத்திருக்கிறதா? விடைகாணமுடியாத ஒரு கேள்வி.

இறந்தவர்கள் யாரும் இதுவரை நம் முன் இறப்பிற்குப் பின் நடப்பது என்ன என்று சொன்னதில்லை. ஆனால், இந்தக் கேள்விக்கு விடையாக சாவின் விளிம்பைத் தொட்டுப்பார்த்து மீண்டவர்கள் சொல்லும் அனுபவங்கள் நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை அறியத் துணையாக இருக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்து அந்த சொர்க்கத்தின் அல்லது நரகத்தின் வாயில்களைத் தட்டும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிப் பலர் தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் சாவு என்பது ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே காட்டுகின்றன.

இந்த அனுபவம் பலருக்கு, இறப்பிற்குப்பின் வாழ்க்கை தொடர்கிறது என்பதை உறுதி செய்வதாகவே இருக்கிறது. உண்மையில் இறப்பைக்கண்டு அஞ்சிடும் பலருக்கு நமது உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் அதற்கு மரணமில்லை. தொடர்ந்து வாழ்கிறது என்ற எண்ணமே மரணபயத்திலிருந்து வெளிவர உதவியாய் இருக்கிறது. இதில் நம்பிக்கையில்லாதவர்கள், இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சொல்பவர்கள்கூட, இந்த நம்பிக்கையால் நிம்மதி அடையும் பெரும்பாலோரின் எதிர்ப்புக்களிடையேதான் தங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் முன் வைக்க வேண்டியுள்ளது.

ஜேம்ஸ் ஆல்காக் என்பவர் ஏன் மரணத்திற்குப் பிறகு ஆன்மா அழிவதில்லை என்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்குக் காரணம் கூறுகிறார். "அறிவுபூர்வமாக எப்படியும் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்லப்போகிறோம் என்று தெரிந்த மக்கள் அதை உணர்வுப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை. இறப்பிற்குப் பிறகும் ஒரு வாழ்வு இருக்கிறது. நாம் முற்றிலும் அழிவதில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒரு தெம்பைத்தருகிறது"

சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள் பற்றிய குறிப்புக்கள் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே நிலவி வருகிறது. இதைப்பற்றிய முதல் செய்தியாக ப்ளேட்டோவின் Republic என்ற நூ¢ல் இறந்தபிறகு உயிர் மீண்டு வருவதாகக் கூறப்படும் ஒரு வீரனைப் பற்றி குறிப்பிடுகிறது. பைபிளிலும் இறப்பிலிருந்து உயிர்ப்பிப்பதாகக் கூறப்படும் பல கதைகள் உள்ளன. மற்ற பல மதநூல்களும் இதே நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கைகள் இருந்துவந்தாலும் சமீபகாலத்தில் இதுபோன்ற அனுபவங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இந்த அனுபவங்களை ஒப்புக் கொள்வதில்லை. இவைகள் யாவும் இறக்கும்போது செயலிழக்கும் மூளையில் ஏற்படும் பிரமைகள் என்றும், ஒருவிரிந்த கனவு என்றுமே அவர்கள் கருதுகிறார்கள்.

அப்படி என்றால், எது சரியான விளக்கம்? இந்த சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள், இறப்பிற்குப்பின் துவங்கும் வாழ்க்கையைக் குறிக்கிறதா? இல்லை, நாம் காற்றோடு காற்றாகக் கலக்குமுன்னர் ஏற்படும் இறுதி அனுபவத்தைக் குறிக்கிறதா?

இறப்பிற்குச் சற்று முன்னர் தாங்கள் பெற்றதாகப் பலர் கூறும் அனுபவங்கள் நமக்கு வரும் கனவுகளைவிடச் சுவையானவை. இவை நிஜம்போலவேத் தோன்றுகின்றன. சாவுக்குப் பின் ஏற்படும் அனுபவங்களைச் சொல்லும் எந்த ஆராய்ச்சியும் இவற்றை மனதில் கொள்ளவேண்டும். இந்த அனுபவங்களையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தேடும்போது, மனங்களைப் பற்றியும், சுய உணர்வுகள் பற்றியும் கேள்விகள் எழுகின்றன.

சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம், வலியே இல்லாத ஒரு நிலை. இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்போது தாங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு மேலே மிதப்பதாக அறிகிறார்கள். அங்கிருந்து அவர்களால் கீழே படுத்திருக்கும் 'அவர்களைப் ' பார்க்கமுடிகிறது. தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது, கூடி நிற்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

 பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறும் விஷயங்கள் மிகவும் சரியாகவே அமைகின்றன. இந்த செத்துப் பிழைக்கும் அனுபவத்தை உடலைத் தாண்டிய அனுபவம் (Out of body experience) என்றும் கூறலாம். இத்தகைய அனுபவங்களுக்குத் தகுந்த உதாரணமாக, சியாட்டில் நகருக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மரியா என்ற பெண்ணிற்கு நேர்ந்த நிகழ்ச்சியைக் கூறுவார்கள்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா