Sunday, 9 February 2014
அல்சர் - அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்..!
சிறு குழந்தைகளுக்கும் 'அசிடிட்டி’ ஏற்படுவது அதிர்ச்சியான விஷயம். அல்சர், அசிடிட்டி போன்ற வயிறு மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், என்ன சாப்பிடலாம் என்பதை விளக்குகிறார், சென்னை ஹெயின்ஸ் நியூட்ரிலைஃப் கிளினிக்கின் உணவு ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.
''பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண்ணுக்கும் 'அசிடிட்டி’ என்ற வயிற்றில் சுரக்கும் அமிலப் பிரச்னைக்கும் மூல காரணம், 'ஸ்ட்ரெஸ்’. அடுத்தது, முறையற்ற உணவுப் பழக்கம். சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, உணவைத் தள்ளிப்போடுவது, அதிகமான இடைவெளிவிட்டுச் சாப்பிடுவது போன்ற சீரற்ற உணவுப் பழக்கங்களால் அல்சர் வரலாம்.
இப்போது அல்சர், அசிடிட்டியை விட, அதிகமான அளவில் மக்களைப் பாதித்து வரும் பிரச்னை, 'Acidity'என்ற 'நெஞ்சைக் கரித்தல்’ அல்லது 'எதுக்களித்தல்’தான். உணவைச் செரிப்பதற்காக வயிற்றில் சுரக்கும் அமிலம் மேலேறி வருவதுதான், 'நெஞ்சைக் கரித்தல்’ என்கிறோம். இதற்கு முக்கியமான காரணங்கள், ஏதேனும் ஒருவேளை உணவைச் சாப்பிடாமல் விடுவது மற்றும் டென்ஷன்தான்.
அல்சர் வந்துவிட்டால், உடனடியாக உணவுப் பழக்கத்தைச் சீராக்க வேண்டும். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருப்பவர்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு, காரம் மற்றும் மசாலா இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதும்'' என்றார்.
தாரிணி கிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி, அல்சருக்கான சில உணவுகளை இங்கே செய்து காட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.
பூசணி உலர் திராட்சை ராய்த்தா
தேவையானவை:
பூசணித் துருவல் - 2 கப், உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், புளிக்காத தயிர் - ஒரு கப்.
செய்முறை:
பூசணித் துருவலில் உள்ள தண்ணீரை, நன்றாகப் பிழிந்துவிடவும். தயிரில் தண்ணீர் இருந்தால், அதை வடிகட்டிவிட்டு, பூசணித் துருவல் மற்றும் கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் தயிரில் சேர்த்துக் கலக்கவும். குளிரவைத்துச் சாப்பிட்டால், சுவை கூடும்.
மணத்தக்காளிக் கீரை மண்டி
தேவையானவை:
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 6, கெட்டியான முதல் தேங்காய்ப் பால், இரண்டாம் பால், அரிசி கழுவிய தண்ணீர் (மண்டி)- தலா அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, வெந்தயம் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். குக்கரில், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளாமல் போட்டு, தோல் உரித்து இரண்டாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும், இரண்டாம் பால், அரிசி மண்டியைச் சேர்த்து, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் கீரையைப் போட்டு, மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலைச் சேர்க்கவும்.
குறிப்பு:
இந்த மண்டியை, சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண்ணுக்கும் இது நல்லது.
வாழைத்தண்டு மோர்
தேவையானவை:
புளிக்காத மோர் - ஒரு டம்ளர், நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, பூண்டு - பாதி, சின்ன வெங்காயம் - 1.
செய்முறை:
எல்லாப் பொருட்களையும் மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.
குறிப்பு:
பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.
ஒரு நாள் உணவுப் பட்டியல்:
காலையில் எழுந்ததும் பால் அல்லது 'லைட்’ காபி/டீ.
காலை:
இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள். தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.)
11 மணி:
புளிக்காத மோர்.
மதிய உணவு:
நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக் கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன் அல்லது மீன் கிரேவி.
மாலை 4 மணி:
பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் ஏதாவது பழங்கள்.
இரவு:
இரண்டு இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு, மோருடன் சாப்பிடலாம். கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட், தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த ஸ்ட்யூ வகைகள் சேர்க்கலாம்.
சேர்க்க வேண்டியவை:
மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.
கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க் காய்கள்.
காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம்.
தயிர்ப் பச்சடியில் காய்கள் அதிகமாகவும் தயிர் குறைவாகவும் சேர்க்கவேண்டும்.
நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு, 2 மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இரு வேளை உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியவை:
வறுத்த, பொரித்த உணவுகள், கடின உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பருப்பு உசிலி, சென்னா மசாலா, வறுத்த மீன், கடலைமாவில் செய்த பஜ்ஜி, பக்கோடா, மிக்சர் மற்றும் அதிகச் செரிவான சாக்லேட்டுகள், 'ஸ்ட்ராங்’ காபி, கருப்புக் காபி தவிர்க்கலாம்.
ஃப்ரூட் சாலட் செய்யும்போது, க்ரீம் போன்ற செரிக்கக் கடினமான பொருட்களைச் சேர்க்க வேண்டாம்.
வெஜ் அண்ட் ஃப்ரூட் சாலட்
தேவையானவை:
வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா - தலா 1, விதை இல்லாத திராட்சை - 100 கிராம், மாதுளை முத்துக்கள் - அரை கப், எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கொத்து.
செய்முறை:
வெள்ளரிக்காயைக் கழுவி, தோல் சீவி (பிஞ்சு எனில் தோல் சீவத் தேவை இல்லை), மெல்லிய அரை வட்டத் துண்டுகளாக நறுக்கவும். கொய்யாப் பழத்தின் விதைகள் நீக்கி, அதே வடிவில் நறுக்கவும். ஆப்பிளைத் தோல் சீவி நறுக்கவும். ஆரஞ்சுச் சுளைகளை விதை, நார் நீக்கி எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய், பழத் துண்டுகளைச் சேர்க்கவும். இதில் கொத்தமல்லி, புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
பீர்க்கங்காய் இளங்கூட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், பீர்க்கங்காய் - 150 கிராம், சின்ன வெங்காயம் - 5, தக்காளி - 1, மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: பீர்க்கங்காயைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை முக்கால் பதமாக வேகவிட்டு, வெந்ததும், பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து, அதிலேயே மிளகாய்த் தூள், உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் இறக்கவும். கடுகு தாளித்துச் சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கலக்கவும்.
குறிப்பு: மிளகாய்த் தூளுக்குப் பதிலாக, இரண்டு காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கலாம். சிறிது கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், நன்றாக இருக்கும். சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment