Thursday, 6 March 2014
‘பலான’ வெப்சைட்டுகளில் இருந்து எஸ்கேப் ஆக உதவும் தளம்..!
டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பிடித்த தளம் என தோன்றலாம். இணைப்பு தராதீர்கள் என்று பொருள் படும் இந்த பெயரே கூட இணையத்தின் பகிர்வு கலாச்சாரத்திற்கு எதிரானதாக தோன்றலாம்.இணைப்பு தருவதால் அந்த தளத்திற்கு தேடியந்திர பலன் கிடைத்து விடாமல் இருக்கும் வகையில் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுக்க வழி செய்வதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது என்ன அநியாயம் என்று கேட்க தோன்றலாம்.
எந்த ஒரு இணையதளத்திற்கும் இணைப்பு தரும் போது அதை பலரும் சென்று பார்ப்பதும் இப்படி பலர் வருகை தருவதால் அந்த தளம் தேடியந்திர தேடல் முடிவுகள் பட்டியலில் முன்னிலை பெறுவதும் இயல்பானது தானே. ஒரு விதத்தில் இணைப்புகள் தருவதன் நோக்கமும் இது தான்.
அப்படியிருக்க , இணைப்பு தருவதன் பலன் அந்த தளத்திற்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே துவக்கப்பட்டுள்ள சேவையை எப்படி புரிந்து கொள்வது என குழம்பலாம்.
நிற்க, நல்ல இணையதளங்கள் என்றால் பிரச்சனையே இல்லை. நல்ல இணையதளங்கள் என்றால் அதற்கு அவற்றுக்கு தாரளமாக இணைப்பு தரலாம். அவை பயன்பெறுவதை பார்த்து மகிழலாம்.ஆனால் மோசமான,வில்லங்கமான இணையதளங்களுக்கு இணைப்பு தர நேரிடும் போது என்ன செய்வது?
ஒவ்வொரு இணைப்பும் தேடியந்திர மதிப்பை கூட்ட பயன்படும் என்பதால் மோசமான இணையதளங்களுக்கு இணைப்பு தரும் போது அவை அந்த இணைப்பால் பயன் பெற்று விடும். சரி மோசமான இனையதளங்களுக்கு இணைப்பு தராமலே இருந்து விடலாமே!
லாம் தான்!.ஆனால் சில நேரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மோசடி தளங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது அல்லவா? அப்போது அந்த தளம் மோசமான வகையிலேனும் பிரபலமாகி இன்னும் கூடுதலான தேடியந்திர அங்கீகாரத்தை பெற்று விடுகிறது.விளைவு அந்த தளம் மேலும் பலரை ஏமாற்றலாம்.
இது சிக்கலானது தான் அல்லவா? இந்த சிக்கலுக்கான அழகான தீர்வு தான் டூ நாட் லிங்க் தளம் . அங்கீகாரம் பெற விரும்பாத தளங்களை சுட்டிக்காட்ட விரும்பும் போது அவற்றுக்கு நேரடியாக இணைப்பு தருவதற்கு பதிலாக அந்த தளத்தின் முகவரியை டூ நாட் லிங்க் தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே இந்த தளம் அதன் முகவரியை வேறு இணைப்பாக மாற்றித்தரும்.
இந்த இணைப்பை கட்டுரையிலோ பதிவிலோ பகிர்ந்து கொண்டால் அதை கிளிக் செய்து பார்க்கலாம்.ஆனால் அந்த கிளிக் தேடியந்திர கணக்கில் வராது. அதே போல தேடியந்திர சிலந்திகள் வலை வீசி வரும் போதும் அந்த தளம் கண்ணில் படாது. காரணம் தேடியந்திரங்களை திரும்பி அனுப்பும் வகையில் அந்த இணைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தான்.
ஆக,மோசமான இணையதளத்தை அடையாளம் காட்டியது போலவும் இருக்கும். ஆனால் அந்த தளத்திற்கு தேவையில்லாத தேடியந்திர வெளிச்சம் கிடைத்து விடாமலும் செய்து விடலாம்.
வில்லங்கமான இணையதளங்களுக்கு இணைப்பு தரும் போது டூ நாட் லிங்க் மூலமே இணைப்பு தாருங்கள்.
இதற்கான தேவை பல விதங்களில் ஏற்படலாம். உதாரணத்திற்கு ஒரு விதம்: உங்கள் அபிமான அரசியல் தலைவர் பற்றி தரக்குறைவான விமர்சனம் கண்டு ஆவேசம் கொள்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அந்த விமர்சனத்தை அம்பல்படுத்த அதை சுட்டிக்காட்டி உங்கள் எதிர்வினையை பதிவு செய்கிறீர்கள். நீங்கள் ஆணித்தரமாக வாத்தை வைத்தது ஒரு புறம் இருக்க, உங்களை அறியாமல் அந்த விமர்சனத்திற்கு தேடியந்திர அங்கீகாரத்தையும் பெற்று தந்து விடுகிறீர்கள். ஆனால் டூ நாட் லிங்க் இணைப்பை பயன்படுத்தினால் இதை தவிர்க்கும் அதே நேரத்தில் அந்த விமர்சனத்தின் உள்நோக்கத்தையும் அம்பலமாக்கலாம்.
எளிமையான சேவை தான்.ஆனால் எப்படி எல்லாம் நுட்பமாக யோசித்து உருவாக்கி உள்ளனஎ இல்லையா?
இணைப்பில்லாமல் இணைப்பு கொடுக்க: http://www.donotlink.com/
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment