Thursday 6 March 2014

உடற்செல்களுக்கு வலிமை தரும் கீரை..!



கீரை வகைகளில் முருங்கைக் கீரைக்கு தனி மவுசு உண்டு. 90 வகையான சத்துப்பொருட்களும், 46 வகை நோய் எதிர்ப்பு பொருட்களும் கொண்டது முருங்கைக் கீரை. ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது. முருங்கைக் கீரையின் சத்துக்களை பார்க்கலாம்...

* முருங்கைக் கீரை குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது. 100 கிராம் கீரையில் 64 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது. 100 கிராம் கீரையில் 8.28 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2 கிராம் நார்ப்பொருளும், 1.4 கிராம் கொழுப்புச்சத்தும் உள்ளன.

* புரதம் நிறைந்தது முருங்கைக் கீரை. 100 கிராம் கீரையில் 9.40 கிராம் புரதம் கிடைக்கிறது. மேலும் 78.66 கிராம் அளவில் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது.

* வைட்டமின்-ஏ, தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 47 சதவீதம் அதாவது 378 மைக்ரோ கிராம் காணப்படுகிறது. கண் பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமாகும். சரும பாதுகாப்பிலும் பங்கெடுக்கிறது. உலர்ந்த கீரையை விட பச்சைக் கீரையில் 10 மடங்கு அதிகமாக வைட்ட மின்-ஏ, கிடைக்கிறது.

* பி-குழும வைட்டமின்களான தயாமின் (வைட்டமின் பி-1), ரிபோபிளேவின் (பி-2), நியாசின்(பி-3), பான்டோ தெனிக் அமிலம்(பி-5), வைட்டமின்-பி6, போலேட்(பி-9)ஆகியவையும் சராசரி அளவில் காணப்படுகிறது. கிராம் கீரை தினசரி உடலுக்குத் தேவையான வைட்டமின்-சியின் 67 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. அதாவது 40 மைக்ரோ கிராம் வைட்டமின்-சி உடலுக்கு கிடைக்கிறது.

கிருமிகளின் நோய்த் தொற்றுகளில் இருந்தும், தீமை விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடியது வைட்டமின்-சி. ஆரஞ்சு பழத்தில் கிடைப்பதைப்போல 7 மடங்கு வைட்டமின்-சி கீரையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சளி, காய்ச்சலுக்கு எதிர்ப்பு சக்தி வழங்கக்கூடியது இது. 

* எலும்புகள், பற்களின் உறுதிக்கு துணைபுரியும் கால்சியம், 100 கிராம் கீரையில் 185 கிராம் என்ற அளவில் மிகுந்து காணப்படுகிறது.

* தாது உப்புக்களான இரும்பு (31 சதவீதம்), மக்னீசியம் (41%), மாங்கனீசு (17%), பாஸ்பரஸ் (16%), பொட்டாசியம் (7%), சோடியம் (1%), துத்தநாகம் (6%) போன்றவையும் முருங்கைக் கீரையில் உள்ளன. துத்தநாகம் ரோம வளர்ச்சிக்கும், சருமத்தின் நன்மைக்கும் உதவக் கூடியது. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும். பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்குத் துணை நிற்கும். உடற்செல்களுக்கு வலிமையைத் தரக்கூடியது முருங்கைக் கீரை தாதுக்கள்.

* தினமும் 3 கிராம் முருங்கைக் கீரை தூள் சாப்பிட்டு வந்தால் வலிப்பு மற்றும் பல்வேறு டிஸ்ஸார்டர் பாதிப்புகள் ஏற்படாமல் எதிர்ப்பு சக்தி தரும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா