Tuesday 4 February 2014

உதவ நினைக்கும் உள்ளங்களுக்கு அழைப்பு விடுக்கும் ப்ரீத்தி..!



காலம் கருணை காட்டியிருந்தால், தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர முகமாகவும், தேசிய நீச்சல் சாம்பியனாகவும் நம்மிடையே அறிமுகமாகியிருக்க வேண்டியவர் இந்த ப்ரீத்திஸ்ரீனிவாசன்.ஆனால், இன்று முதுகெலும்பு செயலிழந்து போக, வாழ்க்கை, சக்கர நாற்காலியில் முடங்கிப் போக, தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி, நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அதிசயப் பிறவி. தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட சக உயிர்களுடன், அன்பையும், ஆதரவையும் பகிர, ‘சோல்ஃப்ரீ’ என்கிற அமைப்பை நிறுவியிருக்கிறார்.www.soulfree.org / soulfree@soulfreeorg.com இன்னும் 2 வருடங்களில் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெறப் போகிற கனவுகளுடன் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணித் தலைவியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போதுதான் ப்ரீத்திக்கு அந்தத் துயரம் நடந்திருக்கிறது.

‘‘கிட்டத்தட்ட 17 வருஷங்கள் கடந்தாச்சு. இப்பவும் அந்த அதிர்ச்சியை என்னால மறக்க முடியலை. தண்ணிக்குள்ள விளையாடிட்டிருந்தேன். திடீர்னு கை, காலெல்லாம் மரத்துப் போன மாதிரி ஒரு உணர்வு. வெளியே வரணும்னு நினைச்சா முடியலை. தண்ணிக்கடியில போயிட்டேன். கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஒரு நிமிஷத்துல எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்துதான் என்னை வெளியே கொண்டு வந்தாங்க. ஏதோ கடிச்சிருக்கலாம்… ரெண்டு, மூணு நாள் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்னு காத்திருந்தோம்… ‘இது நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண பிரச்னை இல்லை. தண்டுவட பாதிப்பு… உங்க பொண்ணு இனிமே எழுந்து நடக்கவே மாட்டா’ன்னு சொல்லிக் கையை விரிச்சிட்டாங்க டாக்டர்ஸ். அது வரைக்கும் கிரிக்கெட், ஸ்விம்மிங்னு துறுதுறுன்னு சுத்திக்கிட்டிருந்த ஒருத்தி, இப்படி திடீர்னு படுத்த படுக்கையா முடங்கிப் போனா, பெத்தவங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்? ஆனாலும், சோகத்தை வெளியில காட்டிக்காம, எங்கம்மாவும் அப்பாவும் எனக்கு பக்கபலமா இருந்தாங்க.

அப்பா எனக்காகவே வேலையை விட்டார். அவர் இறந்து போன பிறகு அம்மா, பாட்டி, ஃப்ரெண்ட்ஸ் உதவியோடதான் வாழ்ந்திட்டிருக்கேன். அம்மாவுக்கு 60 வயசு. பைபாஸ் ஆயிருக்கு. பாட்டிக்கு 84 வயசு. அவங்க ரெண்டு பேரும் இருக்கிற வரைக்கும் சரி… அப்புறம் எனக்கு ஏது போக்கிடம்? எனக்கும் என்னை மாதிரியே தண்டுவட பாதிப்பால அவதிப்படற லட்சக்கணக்கான மக்களுக்கும் ஆதரவு வேணும்… அதுக்கான தொடக்கம்தான் – சோல்ஃப்ரீ’’ என்கிற ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், இன்று மோட்டிவேஷனல் பேச்சாளர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ப்ரீத்தி, தனது ‘சோல்ஃப்ரீ’ அமைப்பின் மூலம், தண்டுவடம் பாதித்தோரை ஒருங்கிணைத்து, அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி காட்டுகிற மாபெரும் சேவையைச் செய்யவிருக்கிறார்.‘‘தமிழ்நாட்ல இன்னும் பல இடங்கள்ல தண்டுவட பாதிப்பு பத்தின விழிப்புணர்வு இல்லை. ஒரு பெண் வேலைக்குப் போயிட்டு களைப்பா வருவா. திடீர்னு உடம்புக்கு முடியலைன்னு மயங்கி விழுவா. அதுக்கப்புறம் அவளால எந்த வேலையும் செய்ய முடியாது. அவ இனிமே இருக்கிறதே பாரம், குடும்பத்துக்கே அசிங்கம்னு அவளை சித்ரவதை செய்து, தற்கொலை செய்துக்க தூண்டற அளவுக்கு அவளோட குடும்பத்தாரே கொடுமைகள் பண்றது நடந்துட்டுதான் இருக்கு. அவ முடங்கிக் கிடக்கற இடத்துல விஷத்தை வச்சிடுவாங்க. அதாவது, அவளே அதை சாப்பிட்டு செத்துடணுமாம். அதுக்குப் பேரு தற்கொலையா? கடலூர்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண் இருக்காங்க. அவங்களுக்கு இதே பிரச்னை.

அவங்களுக்கு சிகிச்சை கொடுக்கவோ, பக்கத்துல இருந்து பார்த்துக்கவோ அவங்க குடும்பத்தார் தயாரா இல்லை. அவ அப்படியே சாகட்டும்னு சொல்றாங்க பெத்தவங்க. மாசக் கணக்கா படுக்கையில கிடக்கிற அந்தப் பெண், இன்னும் கொஞ்ச நாள்ல செத்துடுவா. இந்த மாதிரி இன்னும் எத்தனை பேரை வேணா என்னால அடையாளம் காட்ட முடியும். தண்டுவட பாதிப்போட தீவிரம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கை, கால்களை அசைக்க முடியாததுலேருந்து, வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறவங்க, இயற்கை உபாதை கூட போக முடியாதவங்கன்னு வேற வேற நிலை பாதிப்புகளோட இருக்காங்க.

ஆனாலும், இந்திய அரசாங்கம், இந்தப் பிரச்னையை ஒரு டிஸ்எபிலிட்டியா அங்கீகரிக்க மறுக்குது. இந்தியா முழுக்க எங்கே தேடினாலும், இந்த பாதிப்புக்கான நீண்ட நாள் பராமரிப்பும், சிகிச்சையும் கொடுக்கற பிரத்தியேக மருத்துவமனைகள் இல்லை. ஆனாலும், என்னை மாதிரி ஆட்கள், வாழ்க்கையோட போராடித்தானே ஆகணும். ‘சோல்ஃப்ரீ’ மூலமா முதல்ல என்னை மாதிரி ஆட்களை அடையாளம் கண்டுபிடிச்சு இணைக்கப் போறேன். எனக்கு இந்தப் பிரச்னை வந்த பிறகு நான் மேல்படிப்பைத் தொடர படாத வேதனை இல்லை. எந்த காலேஜ்லயும் எனக்கு இடம் தரலை. பார்வையில்லாதவங்களுக்குக் கூட இடம் தரத் தயாரா இருந்தாங்க. ஆனா, என்னை நிராகரிச்சாங்க.

பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் மெடிக்கல் சோஷியாலஜி முடிச்சேன். இது என்னோட தனிப்பட்ட பிரச்னையில்லை. பாதிக்கப்பட்டவங்களோட தீவிரத்தைப் பொறுத்து, அவங்க வாழ்க்கைக்கான ஒரு ஆதாரத்தை அடையாளம் காட்டப் போறேன். உதாரணத்துக்கு இவங்களுக்கு கை, கால் செயல்படலைன்னாலும், குரலை வச்சு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவோ, பிபிஓ வேலையிலயோ, ஆடியோ புத்தகங்களுக்கு குரல் கொடுக்கவோ செய்யலாம். அதுக்காகவே ஃபேஸ்புக்ல ‘த்ரோட்ஃபோர்ட்’னு ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்கேன். தவிர தண்டுவட பாதிப்பு பத்தின விழிப்புணர்வு பிரசாரத்தையும் பெரியளவுல கொண்டு போகப் போறேன். இந்தப் பிரச்னைக்கு தீர்வே கிடையாது. வராம தவிர்க்கிறது மட்டும்தான் ஒரே வழி.

இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்டவங்க பெண்களா இருந்தா, அவங்க நிலைமை இன்னும் மோசம். அவங்களுக்கு ரொம்பவும் கீழ்த்தரமான சிகிச்சைதான் கிடைக்குது. அதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்கவும், ‘நீங்களும் நானும் தனியாள் இல்லை. நம்மகூட ஒரு பெரிய இயக்கமே இருக்கு’ன்னு சொல்லவும்தான் சோல்ஃப்ரீ…’’ உருக்கமாகப் பேசுகிற ப்ரீத்தி, உதவ நினைக்கிற உள்ளங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.‘‘எனக்கு கட்டில்லேருந்து எழுந்து, வீல் சேருக்கு மாறவே அத்தனை சிரமமா இருக்கும். வாரத்துல ஒரு நாள் என்னைக் குளிக்க வைக்க எங்கம்மா படற கஷ்டம் எனக்குத்தான் தெரியும். எத்தனையோ மாசம் வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்க்கக்கூட முடியாம அடைஞ்சு கிடந்திருக்கேன்.

அன்போடவும் அக்கறையோடவும் யாராவது என்னை பக்கத்துல உள்ள ஒரு ஆசிரமத்துக்குக் கூட்டிட்டுப் போனாலே அன்னிக்கெல்லாம் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். காசோ, பணமோ கொடுத்துதான் ஒருத்தருக்கு உதவ முடியும்னு இல்லையே… என்னை மாதிரி ஆளுங்களோட நேரம் செலவிடறது, எங்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களை நிறைவேத்தறது, எங்க தகுதிக்கும் திறமைக்கும் ஏத்த ஒரு வேலையைக் கொடுத்து ஊக்கப்படுத்தறதுன்னு அன்பைப் பகிர்ந்துக்க எத்தனையோ வழிகள் இருக்கு. தண்டுவட பாதிப்பு பத்தின விழிப்புணர்வை மக்கள் மத்தியில கொண்டு போகலாம்… இந்த பாதிப்புலேருந்து, வரப் போற தலைமுறையையாவது காப்பாத்தணும்னு நினைக்கிறேன்… உண்மையான அன்போட உதவ நினைக்கிற யாருக்கும் சோல்ஃப்ரீயோட கதவுகள் திறந்திருக்கு…’’ என்கிறார் தன்னலம் மறந்து.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா