Tuesday 4 February 2014

புராணங்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை, ஆனால் வரலாறுகளுக்கு..?



புராணங்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை. வரலாறுகளுக்கு நிச்சயம் ஆதாரம் தேவை. மன்னர்கள் வரலாறு, இந்தியாவின் சுதந்திர வரலாறுகளை சொல்லும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆதாரமாய் கம்பீரமாய் நிற்கிறது வேலூர் கோட்டை.

வேலூர் மாநகரின் மையத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வேலூர் கோட்டை. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுக்கொண்டுயிருந்தபோது வேலூர், திருப்பதி, சென்னை போன்றவை விஜயநகர பேரரசுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. விஜயநகர பேரரசுவின் பிரதிநிதியாக 1566ல் இருந்த பொம்முநாயக்கர் என்ற குறுநில மன்னரால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது.

கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த கோட்டை வலிமையானது. கோட்டையை சுற்றி அகழியும் வெட்டப்பட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
நாயக்கர்களிடமிருந்து 1650ல் பிஜப்பூர் சுல்தானால் கைப்பற்றப்பட்டது. 25 ஆண்டுகால ஆட்சிக்கு பின் 1676ல் மராட்டியர்கள் கைப்பற்றினர். 30 ஆண்டு ஆட்சிக்கு பின் 1708ல் டெல்லியை ஆண்ட தௌத்கான் கைப்பற்றினார். அப்போது நவாப்களின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டையிருந்தது.

கர்நாடகா நவாப்கள் என அழைக்கப்பட்டவர்கள் வேலூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஆற்காட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் டெல்லி தௌத்கான் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக வெளியேறியபோது நவாப்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுதந்திர பகுதியாக மாறின.

நவாப்கள் ஆங்கிலேயரின் நண்பர்களாக இருந்தனர். நவாப் வசமிருந்த வேலூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. 1760ல் முதல் ஆங்கிலேயர் அதன் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வென்றயிடம் ஆற்காடு. அவர்கள் அங்கிருந்து ஆளும்போது அருகில் இருந்த வேலூர் கோட்டையை வெடிமருந்துகள், இராணுவ வீரர்கள் பாதுகாக்கும் இடமாக வைத்திருந்தனர்.

மராட்டிய புலி திப்புசுல்தான் இறந்தபின்னர் அவரது குடும்பத்தை இங்கு தான் முதலில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர்கள். அதேபோல் இலங்கை கண்டி மாகாணத்தின் கடைசியரசர் விக்கிரமராஜசிங்கன் மற்றும் அவரது மனைவி மக்களை இந்த கோட்டையில் தான் இறக்கும் வரை சிறை வைக்கப்பட்டனர். அதேபோல் விஜயநகர பேரரசின் அரசராக இருந்த ரங்கராயன் இந்த கோட்டையில் வைத்து தான் கொல்லப்பட்டார்.

சிப்பாய் புரட்சி

ஆங்கிலேயர் தென்னிந்தியாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின் வட இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள். அப்போது

ஆங்கிலேய இராணுவத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் பணியாற்றினர். இவர்கள் எத்தனை தியாகங்கள் செய்தாலும் அதனை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இது அவர்கள் மனதில் அனலாய் தகித்துக்கொண்டு இருந்தது. அந்த நேரம் வீரர்களுக்கு பசு, பன்றி நெய் தடவப்பட்ட வெடிகுண்டுகளை போர் களத்தில் பயன்படுத்த வேண்டும் என்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு இரு தரப்பு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை பயனபடுத்திக்கொண்ட திப்புவின் வாரிசுகள் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்ய திட்டம் வகுத்தனர். அதன்படி நீண்ட திட்டம் வகுத்து மக்களிடம் ரகசிய பிரச்சாரம் செய்யப்பட்டு நம்பிக்கையான படை வீரர்கள் மூலம் தகவல் பறிமாறப்பட்டு தயார் செய்யப்பட்டது.

806 ஜீலை 10ந்தேதி புரட்சிக்கான நாளாக ரகசியமாக குறிக்கப்பட்டது. அன்று திப்புசுல்தானின் மகன் ஒருவருக்கு திருமணம். விடியற்காலை புரட்சி தொடங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கோட்டையில் திப்புசுல்தானின் புலி கொடியேற்றட்டப்பட்டது. அடுத்த ஆறு மணி நேரத்தில் ஆற்காடு, சித்தூர் பகுதியில் இருந்து படைகள் வரவழைக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் கோட்டையை மீட்டனர். திப்புவின் வாரிசுகளின் பாதுகாவலர்கள், புரட்சியின் தளபதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அடுத்த சில நாட்களில் திப்புவின் வாரிசுகள் வடமாநிலங்களுக்கும், அவர்களது நம்பிக்கையான தளபதிகள் திருநெல்வேலிக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனுப்பி தங்களது பாதுகாப்பில் வைத்துக்கொண்டனர். இந்த புரட்சி தான் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட முதல் புரட்சியாகும்.

சர்வ மதம்

கோட்டைக்குள் நுழைந்ததும்மே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது.

கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம். அதேபோல் தென்னிந்தியாவின் முதல் அரபுக்கல்லூரியான ஜாமி ஆ பாக்கியத்துல்ல என்ற கல்லூரி இதன் அருகே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டைக்குள் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், அவரது குடும்பத்தார் பிரார்த்தனை செய்ய 1846ல் புனித ஜான் தேவாலயம் கட்டப்பட்டது.

அருங்காட்சியகம்

கோட்டைக்குள் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் உள்ள கட்டிடங்கள் திப்பு மகால், ஐதர் மகால், பேகம் மகால், கண்டி மகால், பாதுஷா மகால் என பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன.

காவல்துறை பயிற்சி கல்லூரி, வட்டாச்சியர் அலுவலகம், பத்தரப்பதிவு அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் உள்ளே இயங்குகின்றன.
கோட்டையின் தென்கிழக்கு மூலையில் கோட்டை உச்சியில் தேசியகொடி ஏற்ற 100 அடி கொடிமரம் அமைத்துள்ளனர். இந்த கோட்டை பற்றி 1650ல் வந்த ஜாக் டி கோட் என்ற ஐரோப்பிய பயணி, இது போன்ற கோட்டையை நான் எங்கும் பார்த்ததில்லை என வர்ணித்துள்ளார். வேலூர் கோட்டை வரலாற்றை போற்றும் வகையில் 2006ல் வேலூர் புரட்சி நடந்த 200வது ஆண்டை முன்னிட்டு தபால் தலை வெளியிடப்பட்டது.

படகு சவாரி

கோட்டை அகழியில் படகு சவாரி வசதியை சுற்றுலாத்துறையும் - தொல்பொருள் துறையும் செய்து தந்துள்ளது. தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை படகில் அகழியில் அரை வட்டமடிக்கலாம். கோட்டைக்கு வெளியே மூன்று இடங்களில் பூங்கா வசதி செய்து தந்துள்ளார்கள். விடுமுறை நாட்கள், மாலை நேரங்களில் உட்கார இடம்மில்லாத வகையில் கூட்டம் இந்த பூங்காக்களில் நிரம்புகிறது. குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட கண்டி மன்னன் விக்ரமராஜா அவனது மனைவிகள் இறப்புக்கு பாலாற்றங்கரையில் முத்து மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிப்பாய் புரட்சியின் போது இறந்த ஒரு தளபதியின் கல்லறை உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கோட்டைக்கு வெளியே வடக்கு
பகுதியில் சிப்பாய் புரட்சியில் இருந்த வீரர்கள் நினைவாக நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

புதர் மண்டிக்கிடக்கும் வேலூர் கோட்டை தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையை எப்போது வேண்டுமானாலும் சுற்றி பார்க்கலாம். அருங்காட்சியகம், மஹால்களை மாலை 5 வரை மட்டுமே பார்க்க அனுமதி. காதலர்களால் நிரம்பி வழிகிறது கோட்டை. ஒரு முறை சென்றால் இந்த கோட்டை தனக்குள் வைத்துள்ள வரலாறுகள் நமக்கு பல படிப்பினைகளை, வரலாற்று தகவல்களை வழங்குகிறது.

வழித்தடம்

சென்னை, பெங்களுரூ மட்டும்மல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நேரடியாக இங்கு வர பேருந்து வசதியுள்ளன. இரயில் சேவையும் உள்ளது. இரயிலில் வர விரும்புபவர்கள் காட்பாடியில் இறங்கி 10 ரூபாய் ஆட்டோ அல்லது 4 ரூபாய் டவுன் பேருந்தில் சென்றால் கோட்டை எதிரே இறக்கி விடுவார்கள். தங்கவும், உணவுக்கும் ஏகப்பட்ட விடுதிகள் உள்ளன. வேலூரில் சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா