Tuesday 4 February 2014

மேரி லீக்கி- ஆதி மனிதனின் பிறப்பைக் கண்டறிந்தவர்...!




 இந்த உலகில் மனித இனம் எங்கே தோன்றியது? பூமிப் பந்தின் மூதாய் தோன்றிய இடம் எது? கிழக்கு ஆப்பிரிக்கா. இதைக் கண்டறிந்தவர் ஒரு பெண். அவர் மேரி லீக்கி. மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் அறிவியல் பின்புலத்தைக் கண்டறிந்ததற்காகப் புகழ்பெற்றவர்.

"நான் பொருள்களைத் தேடித் தோண்டுகிறேன். நான் அதிகம் அறியும் ஆர்வத்துடன் இருக்கிறேன். அதன் பிறகு நான் கண்டறிந்ததை வரைய விரும்புகிறேன்" என்று தனது பணி பற்றிச் சுருக்கமாக அவர் விவரித்தார். நிலத்தைத் தோண்டி ஆராய்வதுதான் மேரி லீக்கியின் பணி.

அவர் உலகின் மிகச் சிறந்த புதைபடிம (அல்லது தொல்லுயிர் எச்சம்-Fossil) வேட்டையாளர், பண்டைய மானிடவியலாளர். அவரது முக்கியக் கண்டறிதல்கள், அவரது அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த ஆராய்ச்சிப் பணி காரணமாக மனிதக் குலத் தோற்றம் தொடர்பான பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.

தொடக்கக் காலம்

புகழ்பெற்ற நிலக்காட்சி ஓவியர் எர்ஸ்கைன் நிகோல், சிசிலியா ஃபெரேரேயின் மகளாக 1913 பிப்ரவரி 6ஆம் தேதி லண்டனில் அவர் பிறந்தார். சின்ன வயதிலேயே கலை, தொல்லியலில் அவருக்கு ஆர்வம் இருந்தது. குழந்தையாக இருந்தபோது, பெற்றோருடன் அடிக்கடி ஃபிரான்ஸுக்குச் சென்றார். அங்கு உள்ள வரலாற்றுக்கு முந்தைய கால அருங்காட்சியகத்துக்குச் சென்று வர ஆரம்பித்த அவர், அந்த அருங்காட்சியகத்தின் தொல்லியல் அகழாய்வுகளிலும் பங்கேற்றார். பண்டைய கற்கால ஆயுதங்களை அப்போது அவர் கண்டறிந்திருக்கிறார். வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் நிறைந்த ஃபிரெஞ்சு குகைகளான ஃபான்ட் தி காம், லா மூத் ஆகியவற்றையும் அவர் பார்த்தார். பிரிட்டன் டெவானில் உள்ள ஹெம்பர்ரியில் புதிய கற்காலம் தொடர்பான தொல்லியல் ஆய்வில் அவர் பங்கேற்றார்.

1926இல் அவரது தந்தை இறந்ததன் காரணமாக, அவரும் அவருடைய அம்மாவும் லண்டன் திரும்பினர். அப்போது தான் படித்து வந்த கத்தோலிக்கப் பள்ளிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேரி எதிர்த்தார். அதனால் இரண்டு பள்ளிகளில் இருந்து அவர் வெளியேறினார்.

1930களில் 17 வயதில் தொல்லியல், மண்ணியல் பற்றி படிக்க ஆர்வம் கொண்டார். அது சார்ந்த அடிப்படை விஷயங்களில் சீக்கிரமே அவர் வல்லுநர் ஆனார், அறிவியல் விளக்கப்படங்கள் வரைவதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1933இல் அவருடைய கணவராக மாற இருந்த லூயி லீக்கியின் அறிமுகம் கிடைத்தது. ஆப்பிரிக்காவில் தான் கண்டுபிடித்திருந்த கற்கால ஆயுதங்களின் அடிப்படையில் ஆடம்ஸ் ஆன்செஸ்டர்ஸ் என்ற புத்தகத்துக்காக வரைவதற்கு வருமாறு மேரியை லூயி அழைத்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் லூயி லீக்கி தனது முதல் மனைவி ஃபிரிடாவை விவாகரத்து செய்த பின், மேரியைத் திரு மணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜோனதான், ரிச்சர்ட், பிலிப் என மூன்று மகன்கள். மூன்று பேரும் பண்டையவியல் ஆராய்ச்சியாளர்கள்.

அறிவியல் சாதனைகள்

1948இல் விக்டோரியா ஏரி பகுதியில் உள்ள ருசிங்கா தீவில் புரோகான்சல் ஆஃப்ரிகானஸ் என்ற 2.5 கோடி பழமையான மனிதன், மனிதக் குரங்கு இடையிலான பொது மூதாதையை மேரி கண்டறிந்தார். கச்சிதமாகப் பாதுகாக்கப்பட்ட ஆரம்பக் கால மனிதனின் மண்டையோடு அது.

1959இல் தான்சானியாவில் உள்ள ஓல்துவாய் பள்ளத்தாக்கில் மனிதக் குலத்தின் ஆரம்பக் கால மண்டையோட்டை அவர் கண்டறிந்தார். முதலில் அது கிழக்கு மனிதன் (ஸின்ஜான்த்ரோபஸ்) என்ற பொருள்படும்படி பெயரிடப்பட்டாலும், தற்போது அதன் பெயர் தெற்கு மனிதக்குரங்கு (பிரான்த்ரோபஸ்) என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்தத் தொல்எச்சமே லூயி குடும்பத்துக்கு உலகப் புகழ் பெற்றுத்தந்தது. அதுவே குரங்குக்கும் மனிதனுக்கும் இடையிலான இணைப்புக்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது.

அவர்களது பெரும்பாலான ஆராய்ச்சிகள் கென்யா, தான்சானியாவிலேயே நடைபெற்றன. மேரி கண்டறிந்த தொல்எச்சங்களின் பின்னணி பற்றி விளக்குவதிலும், அவற்றைப் பிரபலப் படுத்துவதிலும் லூயி லீக்கி ஈடுபட்டார். 1972இல் கணவர் லூயி காலமான பின்னும், ஆப்பிரிக்காவில் மேரி களப்பணியைத் தொடர்ந்தார்.

நடக்க ஆரம்பித்த தருணம்

1979இல் லாடோலியில் 89 அடி நீளம் கொண்ட ஆதி மனிதனின் காலடித்தடங்களை மேரின் குழு கண்டறிந்தது. இதுவும் ஓல்துவாய் பள்ளத்தாக்கிலேயே கண்டறியப் பட்டது. ஆரம்பக் கால மனிதர்கள் எரிமலை சாம்பலில் கால் பதித்து நடந்தது அங்குப் பதிவாகி இருந்தது. அவை 36 லட்சம் ஆண்டுகள் பழமையானவை. இந்தக் கண்டறிதல் மூலம் நமது மூதாதையர்கள் அந்தக் காலத்திலேயே இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்தது உறுதிப்பட்டது. அதுவரை நம்பப்பட்டு வந்த காலத்துக்கு முன்னதாகவே மனிதன் இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்ததும் தெரிய வந்தது. இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு.

1983இல் களப்பணியில் இருந்து ஓய்வு பெறுவதுவரை, மேரியும் அவரது குழுவும் ஆதிமனிதனின் ஹோமினிட்டின் தொல்எச்சங்கள், வரலாற்றுக்கு முந்தைய தொல்லுயிர் எச்சங்களை கண்டறிதலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.

களப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவரது பல்வேறு கண்டு பிடிப்புகள் நிகழ்ந்த நைரோபியில் உள்ள ஓல்துவாய் பள்ளத்தாக்கு பகுதிக்கே மேரி குடிபெயர்ந்தார். அங்கு 20 ஆண்டுகளுக்கு வாழ்ந்தார். தொடர்ச்சியாக அறிவியல் சார்ந்தும், தனது முக்கியமான கண்டுபிடிப்புகள் குறித்துப் பொதுமக்களுக்கு விளக்கும் எளிய கட்டுரைகளையும் எழுதி வந்தார். அவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஓல்து வாய் கார்ஜ்: மை சேர்ச் ஃபார் எர்லி மேன் (1979) டிஸ்குளோஸிங் தி பாஸ்ட் (1984)- சுயசரிதை.

மேரி முறைசார்ந்த பட்டப் படிப்பையோ, பட்ட மேற்படிப்பையோ படிக்காவிட்டாலும், மானிடவியல் துறையில் அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கும் அவரது வாழ் நாள் பணிக்கும் பல்வேறு விருதுகளும், கௌரவப் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. 1996இல் 83 வயதில் அவர் காலமானார்.

அவருடைய கணவர் லூயி லீக்கி பெரும் புகழைப் பெற்றிருந்தாலும், மேரி சுயமான ஒரு விஞ்ஞானியாக மதிக்கப்பட்டார். அவருடைய மேதமை நிறைந்த சாதனைகள் தொல்லியலில் அவருக்கு உயர்ந்த இடத்தைத் தருகின்றன.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா