Tuesday 4 February 2014

2ஜி ஊழல் : தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளை வெளியிட்டது ஆம் ஆத்மி..!



இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடில்லியில் வெளியிட்டார்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்த சில தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் என கூறப்படும் ஒலிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டன.

மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் ரெட்டி, திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் உரையாடல்களைக் கொண்ட பதிவுகள் உட்பட பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், நீதிமன்ற விசாரணையின்போது ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி வரை நிதி வழங்கியுள்ளது தொடர்பாக சிபிஐ எழுப்பிய சர்ச்சைக்கு கலைஞர் தொலைகாட்சி தரப்பு மறுப்பு தெரிவித்தது.

அதோடு அந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டது இல்லை என்றும், கடன் தொகையாக பெறப்பட்டது என்றும் கூறி அதற்கு தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி ஏற்கனவே பிரசாந்த் பூஷனும் பொது நலன் மனுவை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், வாதிப் பிரதிவாதங்கள் முடிந்து குறுக்கு விசாரணை நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் இந்த ஒலிநாடா பதிவுகள் மூலம் வழக்கில் நீதி கிடைக்க வழிவகை செய்ய முடியும் என பிரசாந்த் பூஷன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டு இதன் மீதான விசாரணையை தொடங்க கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, வெளியிடப்பட்டுள்ள இந்த தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு நாடாக்களின் நம்பகத்தன்மை குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவை நீதிமன்றத்தில் தகுந்த முறையில் நிருபிக்கப்படும் எனவும் அவர் பதிலளித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழிக்கு எதிரான ஆதாரமாக சித்தரிக்கப்படும் விஷயங்கள் பொய் என்று கூறினார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா