Friday 14 February 2014

காதலர் தினம் இதயங்களை இணைக்கும்...!

காதலர் தினம் இதயங்களை இணைக்கும் முதல் சந்திப்பு


காதல் பூக்கும் தருணம் என்பது யாராலும் கணிக்க முடியாதது. கண்ணசைவில் காதல் மொழிகள் பரிமாறப்பட்டு விடும். கோயில் திருவிழா, உறவினர் இல்லம், பஸ் நிலையம் என முதலில் பார்த்தவுடன் பிடித்துப்போன பெண்ணின் இதயத்தில் இடம் பிடிப்பதற்கு இளைஞர்கள் என்னவெல்லாமோ செய்து பார்ப்பர். நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழம்புகிறீர்களா?

உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்:


« முதல் சந்திப்பு ஒரு பரீட்சை மாதிரி. முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து கொள்ள வேண்டும். சாதாரணமான கேள்விகளுக்கு இடமளிக்காமல் சுவையான, தனித்தன்மையான கேள்வி பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!

« மிக எளிமையான வழி என்னவென்றால் காதலிக்க நினைக்கும் பெண்ணைப் பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்தி வருகிறது என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது?

« அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.

« அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

« கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.

« கொஞ்சம் அன்றாடச் செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவாரசியமான செய்திபற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.

« முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும்.

« அவர்களின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா!

« அவர்கள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை, கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளாரா என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள்.

« அவர்கள் நாய், பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்!

« அவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.

«  இருவருக்கும் பொதுவான விஷயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விஷயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விஷயங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது


இளசுகளின் எண்ணம் என்ன?

சுகன்யா: காதலர் தினம் என்பது வெளிநாட்டில் இருந்து வந்த கலாசாரம். இதற்காக கடற்கரை, பூங்கா என காதலர்கள் சுற்றாமல் திருமணத்துக்கு பிறகு இருவரும் காதலிப்பதும், அப்போது இந்த தினத்தை கொண்டாடினால் சிறப்பாக இருக்கும்.

கார்த்திகை சுடர்: தற்போது உள்ள யூத், பெற்றோருக்கு தெரியாமல் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது. காதலிக்க ஆரம்பித்து விட்டால் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் காதல், திருமணத்தில் முடிவடையும். இந்த தினத்தின்போது காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்.

ரஞ்ஜித்: மானிட சமூக வளர்ச்சிக்கு காதல் அவசியம். சாதி மதம் வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்வதற்கு அவசியமாகிறது. இதனால் நாம் காதலர் தினத்தை கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.

இது இவங்க கருத்து

பாஜ இளைஞரணி மாநில செயலாளர் மகேஷ்: நமது கலாசாரத்தில் காதலர் தினம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து வந்த கலாசாரம். இந்த தினத்தின் பெயரில் பள்ளி சிறுவர்கள் கூட இந்த மயக்கத்துக்கு ஆளாகின்றனர். காதல் என்பது புனிதமான விஷயம்தான். இப்போது அந்த காலத்து புனிதமான காதல் இல்லை. காதல் என்ற பெயரில் காமத்தை வெளிப்படுத்துகின்றனர். காதல் காமமாக மாறும்போதுதான் எதிர்க்கிறோம்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் பொறுப்பாளர் சிவா: பெண்களை கடவுள்களின் உருவாக வணங்கி போற்றுகின்ற பூமி. ஆனால் பெண்களை ஆபாசமாகவும், போதை பொருளாகவும் சித்தரிக்கும் காதலர் தினத்தை கொண்டாடுவது வேதனையாகும். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஈவ்டீசிங் செய்யப்படுகின்றனர். எனவே காதலர் தினத்தை எதிர்க்கிறோம்.

காதலை வசப்படுத்தும் வர்ணங்கள்:

பச்சை: காதலிக்க நான் ரெடி. உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்.

ரோஸ்: இப்பொழுதுதான் காதலில் விழுந்தேன்.

நீலம்: என் இதய அறை இன்னும் காலியாகவே உள்ளது.

வெள்ளை: நான் ஏற்கனவே காதலிக்கிறேன்.

செம்மஞ்சள்: காதலிப்பது மட்டுமல்ல, நான் நிச்சயம் செய்யவும் ரெடி.

சிவப்பு: காதல் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது.

கறுப்பு: காதலை ஏற்க விரும்பவில்லை.

மஞ்சள்: காதல் பரீட்சை எழுதி பெயிலானவர்கள்.

பிங்க்: கணக்கற்ற காதல் கனவு உள்ளது.

பெற்றோர் சம்மதத்துக்கு சில ஐடியாக்கள்....

இருமனம் மட்டும் இணைந்த காதலை அனைத்து மனங்களும் ஏற்றுக் கொண்டால்தான் திருமண வாழ்வு இனிதாய் அமையும். பல காதல் பெற்றோரின் சம்மதம் கிடைக்காததாலேயே கருகிப் போய் விடுகிறது. அவர்களின் சம்மதம் பெற இதோ சில ஐடியாக்கள்.

1. உங்கள் காதலனையோ, காதலியையோ பெற்றோர் வெறுக்கும் காரணம் என்ன என்பதை கண்டுபிடியுங்கள்.

2. உங்களின் காதலின் தீவிரத்தையும், அன்பின் ஆழத்தையும் அவர்களும் புரிந்து கொள்ள சிறிது காலம் கொடுங்கள்.

3. ஆனால் இதைப்பற்றி உங்கள் காதல் இணையிடம் தகவல் தெரிவித்து விடாதீர்கள்.

4. உங்கள் காதலின் நிலை, எதிர்கால திட்டங்கள் குறித்து குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

5. அவர்களின் இடத்திலிருந்து நீங்கள் யோசியுங்கள்.

6. உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையும் பெற்றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.

சில நேரங்களில் இவை உபயோகப்படாமல் போகலாம். வறட்டு கவுரவம், அந்தஸ்து காரணங்களுக்காக உங்கள் காதலை எதிர்க்கும்போது, உங்கள் காதலின் மீது கலைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் நன்கு சிந்தித்து உங்களின் வாழ்வை தேர்ந்தெடுங்கள்.

காதல் ராசி:

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்  என்று ஜோதிடங்கள் கூறுவதையும் பார்த்து கொள்ளுங்கள்.

மேஷம்: இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்: காதலில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.

மிதுனம்: தங்களை தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே.

கடகம்: இவர்களுக்கு காதல் ஒத்து வராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம்.

சிம்மம்: காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக, மிக விரும்புவர்.

கன்னி: அன்பு மட்டுமின்றி கடமை உணர்வும் கொண்டவர்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது.

துலாம்: இவர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார்.

விருச்சிகம்: காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர்.

தனுசு: காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பர். காதல் வெற்றிக்கு அதிக கஷ்டப்படுவார்.

மகரம்: உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

கும்பம்: காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது.

மீனம்: அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். நேசிக்கின்றவர்களை இவர்கள் அதிகம் நேசிப்பார்கள்.

காதலை வெளிப்படுத்த டிப்ஸ்:

ஒரு காதலனாக உங்கள் காதலியிடம் அன்பின் அறிகுறிகளையும் சிக்னல்களையும் நிச்சயமாக நீங்கள் காட்ட வேண்டும். காதல் என்ற வார்த்தையை அவளிடம் சொல்வதற்கு சரியான நேரமும் பயிற்சியும் அவசியமாகும்.அப்படிப்பட்ட நேரம் வரும் வரை நீங்கள் நிச்சயமாக வேறு பல வழிகளில் உங்கள் காதலை வெளிபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். காதலியிடம் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பது தான் நீங்கள் தொடங்க வேண்டிய முதல் செயலாகும். பரிவாகவும், தீர்க்க சிந்தனையுடனும், ஆதரவாகவும் மற்றும் அவளுக்கு தேவைப்படும் நேரத்தில் அவளுடன் இருப்பதுமே உங்கள் அன்பின் அறிகுறியாக இருக்கும். ஒரு மலர் கொத்தை கொடுத்தோ அல்லது கடிதத்தின் மூலம் உங்களது அன்பை பிரதிபலிக்க வைக்கலாம். இவைகள் யாவும் காதலிக்க முன்பு செய்ய வேண்டும்.

இருவரும் நேருக்கு நேராக பார்க்க முடியாது. பிரிந்திருக்கும் காலமும் உண்டு. அந்த சமயத்தில்  உங்களது காதலைப் பற்றி, கவிதையாவோ கடிதமாவோ வரைந்தால் அது உங்கள் அன்பை மிகுதி படுத்தும். அழகை புகழ்ந்து பேசுங்கள் இதற்காக முன் கூட்டியே திட்டமிட வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அவளுடைய அழகை நல்ல முறையில் புகழ்ந்து பேசுங்கள்.  உண்மையும்.. மரியாதையும்.. நீங்கள் எந்த அளவிற்கு அவளை விரும்புகிறீர்கள் என்று உங்களுக்கு மிக அதிக மதிப்பெண்களை பெற்று தரும். ஒரு உறவில் எல்லா நேரங்களிலும் உண்மையாக இருப்பதும் மற்றும் அவளை மிகவும் மரியாதையுடன் நடத்துவதும் மிகவும் அவசியம். நீங்கள் உண்மையான காதலுடன் காதல் வார்த்தைகளை சொன்னால், அது கண்டிப்பாக வேலை செய்யும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா