Thursday, 6 February 2014

மலைப்பாம்பு பிட்ஸா - 2 ஆயிரத்து 700 ரூபாய்..!




இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது.

இரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய்,வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு உருளைக்கிழங்குடன் சிறிதளவு பாலாடைக்கட்டி வைத்து விற்கப்படும் சைவ பிட்ஸாவும், உள்புறத்தில் காய்கறிகளுக்கு பதிலாக மாடு,ஆடு, கோழி இறைச்சி வகைகளை அடைத்து விற்கப்படும் அசைவ பிட்ஸாவும் உலகம் முழுவதும் பரவலாக விற்கப்படுகின்றன.

உடை, உணவு, நாகரிக வாழ்க்கை முறை போன்றவற்றில் அனைவருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் அமெரிக்க மக்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு அசத்தலான காரியத்தை செய்து வியப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.

அவ்வகையில், ஃப்ளோரிடா மாநிலத்தை சேர்ந்த மக்கள் தற்போது சத்தம் இல்லாமல் புதிய அசத்தலான காரியத்தை செய்து வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வெகு விரைவில் அமெரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் இந்த அசத்தல் பரவலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.

இதற்கு முன்பு வரை தவளை பிட்ஸா, முதலை பிட்ஸா ஆகியவற்றை தின்று சலித்து விட்ட மக்களுக்கு ஃப்ளோரிடாவில் உள்ள பிரபல பிட்ஸா நிறுவனம் தற்போது சுடச்சுட ‘மலைப்பாம்பு பிட்ஸா’க்களை பரிமாறி பரவசப்படுத்துகிறது.

இதற்காக பர்மா மலைப்பாம்பு என்ற வகை பாம்புகளை வெட்டி, அவற்றை அரை வேக்காடாக அவித்து, பின்னர் மசாலா பொருட்களுடன் கலந்து பொரித்து, ஒவ்வொரு பிட்சாவுக்குள்ளும் ஒரு மலைப்பாம்பு துண்டு இருக்கும் வகையில் ஃப்ளோரிடா மக்களை இந்நிறுவனத்தின் உரிமையாளர் இவான் டானியேல் மகிழ்வித்து வருகிறார்.

இந்த பிட்ஸாவுக்காக அவர் கொள்முதல் செய்யும் மலைப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் கொண்டவை என தெரிகிறது. இதற்கான மலைப்பாம்பு இறைச்சியை வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்வதாக பெருமையுடன் கூறும் இவர், தனது புது வகை பிட்ஸாவை 45 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 2 ஆயிரத்து 700 ரூபாய்) விற்பனை செய்கிறார்.

இதனால், இவரது கடையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. இந்த புதிய மெனுவை தொடர்ந்து ருசிக்க வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர், ‘பிட்ஸாவின் உள்ளே இருக்கும் இறைச்சி கோழிக்கறியைப் போல் சுவையாக உள்ளது. ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு மென்று தின்ன வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் மிருதுவாக அவித்தால் நல்லது’ என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா