Wednesday 5 February 2014

ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது - பகீரங்க குற்றச்சாட்டு...!



மக்களுக்கு பயன்தரும் சமூக நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என உத்தரவிட்ட சில நாட்களிலேயே சட்ட விரோதமாக அந்நியர்கள் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கு தான் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு ஆதார் அட்டை எந்த வகையில் பயன் தருகிறது என்பது குறித்த விவாதத்தின் போது சுப்ரீம் கோர்ட் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

நீதிபதி பி.எஸ்.சவ்கான், எம்.ஒய்.இக்பால் உள்ளிட்டோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், ஆதார் அட்டை தேசிய பாதுகாப்பிற்கு பயன்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அப்போது அவர்கள் கூறியதாவது : புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியாவில் சட்ட விரோதமாக அந்நியர்கள் குடியேறி வருவது அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது; ஆதார் அட்டையால் இந்த சட்ட விரோத குடியேற்றங்கள் குறையவில்லை; 

ஆதார் அட்டையை பயன்படுத்தி பலர் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது; கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் 10 மில்லியன் பேர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர்; வெளிநாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்; வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி வருபவர்களால் எல்லையோற மாநிலங்களான அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் கலாச்சாரங்கள் சீரழிந்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டால் அவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதாகவும், தாங்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அல்ல எனவும் கூறுகின்றனர்; அத்தகைய குற்றவாளிகளை உரிய ஆதாரங்கள் சமர்ப்பித்து நாட்டில் இருந்து வெளியேற்ற இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்படும்; சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இத்தகைய பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆதார் அட்டை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஆதார் அட்டைகளும், தேசிய அடையாள அட்டைகளும் இந்த 10 மில்லியன் பேர்களுக்கும் வழங்கப்பட்டது எதன் அடிப்படையில் என்பது புரியாத விஷயமாகவே உள்ளது; இவர்கள் நாட்டின் குடியுரிமை பெற்றதற்கான ஆதாரங்கள் எவ்வாறு பெற்று, ஆதார் அட்டைகளை பெற்றார்கள் எனவும் புரியவில்லை; இந்த ஆதார் அட்டைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது; இதனால் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் எனவும், அனைவரும் ஆதார் அட்டை பெறுவது அவசியம் எனவும் மத்திய அரசு வற்புறுத்தி வந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நலத் திட்டங்களை பெறுவதற்கு ஒருவர் அவரை பற்றிய அனைத்து விபரங்களையும் தர வேண்டியது அவசியமா என கேள்வி எழுப்பியது. இருப்பினும் இது மற்றொரு வகையில் சர்ச்சைக்குள்ளானது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் உள்ள பணத்தின் அடிப்படையிலேயே பாதுகாப்பை உறுதி செய்கின்றன; நலத் திட்டங்களுக்கு வேண்டுமானால் ஆதார் அட்டை திட்டம் சரியானதாக இருக்கலாம்; ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இது சட்டவிரோத நடவடிக்கைகளையே ஊக்குவிக்கிறது எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா