Friday 21 February 2014

பேனா, நோட்டு வைத்து வழிபட்டால் அதிக மதிப்பெண் பெறலாம்..!



தமிழ்நாடு:- கடலூருக்கு பக்கத்தில் உள்ள திருவஹீந்திரப்புரத்தில், ஒளஷதகிரி எனும் அழகிய சிறிய மலையின் மீது எழுந்தருளியிருக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். கருட பகவான், உபதேசம் செய்த ஹயக்ரீவ மந்திரத்தை, ஸ்வாமி தேசிகன் ஜபித்து கொண்டிருக்க, ஸ்ரீஹயக்ரீவர் அவர் முன்னே காட்சி அளித்தார். அந்த நொடியில் உருவானதுதான்

`ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்.'

`ஜ்ஞாநாநந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
வித்யாநாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே'

என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்துதி.

இதை பாராயணம் செய்துவிட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் பரீட்சை பயம் என்பதே இருக்காது.

இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்: `ஸ்வரூபத்தில் ஞானமும், ஆனந்தமும் ஆனவரும் ரூபத்தில், சுத்த ஸ்படிகம் போன்ற வெண்மையை உடையவரும், ஞானத்தின் அதிஷ்டான தேவதையுமான ஹயக்ரீவனை உபாசிக்கிறோம்.

' கருடனால், கொடுத்தருளப்பட்ட யோகசனத்தில் அமர்ந்திருக்கும் ஹயக்ரீவமூர்த்தியை இன்றும் திருவஹீந்திரபுரத்தில் தரிசிக்கலாம். சரியாக வாய் பேச இயலாத பலரும், படிப்பே ஏறாது என முத்திரை குத்தப்பட்டவர்களும் இங்கே வந்து ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரை தரிசித்து நல்ல வாக்கு வன்மையும், புத்தி கூர்மையும் உடையவர்களாக திகழ்ந்து வருவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இங்கே ஹயக்ரீவருக்கு தேனை சமர்ப்பித்து அந்த தேனை குழந்தைகளின் நாக்கில் தடவி வந்தால், அக்குழந்தை கல்வியிலும் பல கலைகளிலும் சிறந்து விளங்கி வருவதையும் காணலாம். குதிரை முகம் கொண்டருளும் ஹயக்ரீவர், வேகமாக பேசுவதற்கும், வேகமாகவும், விவேகமாகவும் சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் அருளிக் கொண்டிருக்கிறார்.

எல்லா கடவுள்களுக்கும், பூக்களும், பழங்களும் சமர்பிப்பது வழக்கம் ஆனால், ஹயக்ரீவர் சன்னதியில் அவர் திருப்பாதங்களை எப்போதுமே அலங்கரிப்பது என்ன தெரியுமா? பேனாக்கள், பென்சில்கள், நோட்டுப் புத்தகங்கள், பரீட்சை நேரங்களில் ஹால் டிக்கட்டுகள்.

ஆம், கல்வி கடவுளின் காலடியில் கல்வி சம்பந்தப்பட்ட பொருட்களை சமர்பித்து, அதை தங்கள் இல்லங்களுக்கு திருப்பி எடுத்துச் சென்று, கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான மாணவமாணவிகள். வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவரின் கழுத்தை அலங்கரிப்பது பெரும்பாலும் ஏலக்காய் மாலையாகத்தான் இருக்கும்.

நம் மனம் மணக்க செய்பவனுக்கு ஏலக்காய் மாலையை சமர்பிப்பது நல்லதுதானே. ஹயக்ரீவரை சென்று தரிசிப்பவர்களுக்கும் சரி, அவரின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கும் சரி, நல்ல மேன்மையான எண்ணங்கள் தோன்றுவது உறுதி.

தீய எண்ணங்கள் எனும் இருள் நீக்கி, மனத்தில் தூய எண்ணங்கள் என்னும் ஓளியை ஏற்றக் கூடியவர், அந்த ஹயக்ரீவ மூர்த்தி! ஸ்ரீஹயக்ரீவனுடைய திருவடி துகள்கள் பிரம்மன் எழுதிய தலை எழுத்தையும்கூட மாற்றக்கூடிய சக்தி படைத்தது என்பதாலேயே, இவரின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட பூ மற்றும் துளசியை தங்கள் தலையில் பலரும் சூடி கொள்கிறார்கள்.

கடலூரிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது. தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார்; கோயில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில்ஒன்று; கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்புப் பெற்றவை.

இங்கே தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராக கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர்.

அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது. தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார்.

ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா