Saturday, 1 March 2014
“savukku.net முடக்கப்பட்டால், நூறு தளங்கள் உருவாகும்..! - சவுக்கின் அதிரடி..!
’சவுக்கு’ இணைய தளத்தை அடுத்த பத்து நாட்களுக்குள் முடக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி சி.டி. செல்வம், சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.இப்படி ஹைகோர்ட் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக, சவுக்கு இணையதள வடிவமைப்பாளர் முருகையன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
அதே வேளை நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இத்தளத்தை, முடக்க, நூறு சி.டி.செல்வங்கள் வந்தாலும் அது முடியாது. savukku.net முடக்கப்பட்டால், இது போன்ற பெயரில் நூறு தளங்கள் தொடங்கப்படும் என்றும் .www.tasmactamil.com என்ற புதிய முகவரியிலும் சவுக்கு தளம் கிடைக்கப் பெறும் என்று சவுக்கு சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
”சவுக்கு தளத்தை நடத்துவது யார்?” என்பது குறித்து ஏற்கனவே நீதிபதி விசாரிக்கச் சொல்லி, சென்னை மாநகர காவல்துறை அதன் வடிவமைப்பாளரை கைது செய்தது குறித்த செய்தியும், அதன் பிறகான விசாரணைகளும் வாசகர்கள் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கைதாகியுள்ள இணைய தளவடிவமைப்பாளர் முருகையன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “நீதிபதி சி.டி.செல்வம் குறித்தே, சவுக்கு தளத்தில் பல்வேறு கட்டுரைகள் வந்திருப்பதால், சி.டி.செல்வம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனு நிலுவையில் இருக்கையில் சி,டி.செல்வம் இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல” என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த தளத்தை முடக்க வேண்டுமென்று நடந்த வழக்கில் சவுக்கு தளத்தினால் சுட்டிக்காட்ட பட்ட நீதிபதியான சிடி.செல்வமே இதற்கு தீர்ப்பு வழங்குவது வேடிக்கை என்றும் இம்மனுவை நீதிபதி சிடி செல்வம் விசாரிக்கவே கூடாது என்றும் எக்காரணம் கொண்டும் சவுக்கு தளத்தை முடக்க கூடாது எனவும் பேஸ்புக் ஃபேமஸ் கிஷோர் கே சாமி தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்தார்,
ஆனால் இந்த கோரிக்கைகளையெல்லாம் தான் விசாரணைக்கு ஏற்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி சி.டி. செல்வம், ”சவுக்கு இணைய தளத்தை சென்னை மாநகர காவல்துறை பத்து நாட்களுக்குள் முடக்கியே தீர வேண்டும். அத்துடன் சவுக்கு தளத்தால் பாதிக்கப்பட்டோர் யாராக இருந்தாலும், இது தொடர்பாக புகார் அளிக்கலாம். ஏற்கனவே ஐந்து வழக்கறிஞர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இனிமேல், www.savukku.net என்ற இணைய தளத்தைத் தவிர www.tasmactamil.com ,www.ctselvam.com, www.ctselvam.net போன்ற புதிய முகவரியிலும் சவுக்கு தளம் கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது.
“நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இத்தளத்தை, முடக்க, நூறு சி.டி.செல்வங்கள் வந்தாலும் அது முடியாது. savukku.net முடக்கப்பட்டால், இது போன்ற பெயரில் நூறு தளங்கள் தொடங்கப்படும். முன்னை விட பெரிய வீச்சோடு இத்தளம் செயல்படும். இது உறுதி. இத்தகைய நெருக்கடியான சூழலில், இத்தளம் தொடர்ந்து செயல்பட ஒரே காரணம், அன்பான உறவுகளான வாசகர்களின் தொடர்ந்த ஆதரவும் அன்பும் மட்டுமே.
இந்த அன்புக்கு, சவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இதற்கு பிரதிபலனாகத்தான், இத்தளம் தொடர்ந்து நடத்தப்படும். இது நீதிக்கான போர். இதில் நாம் நிச்சயம் வெல்வோம். இறுதி வெற்றி நமதே” – என்று சவுக்கு இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாகவும் சவுக்கு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment