Wednesday 26 February 2014

எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி..!



உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பல்கேஸ்வரா காலனியில் வசித்து வரும் விஜய் சர்மா உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி இவருடைய மனைவி நீலம் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், சர்மாவின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கிளி, சர்மாவின் மருமகன் அசுடோஷ் சர்மா கோஸ்வாமி தன்னுடைய வீ்ட்டிற்கு வரும்போதெல்லாம் உர்ரென்று இருந்தது. கிளியின் நடத்தையில் ஏற்பட்ட மாறுதலை சர்மா கவனித்தார். இது குறித்து சர்மாவின் தம்பி அஜய்யும் தனது சந்தேகத்தை அவரிடம் தெரிவித்தார்.

சந்தேகம் வலுவடைந்ததால், சர்மாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகிக்கும் நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கிளியின் முன் கூறினர். மற்றவர்களின் பெயரை கூறும்போது எதுவும் பேசாத அந்தக் கிளி அசுடோஷ் பெயரை கூறியதும், “இவன்தான் கொன்றான்... இவன்தான் கொன்றான்...” என்று பேசியது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அசுடோஷை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அசுடோஷ், ரோனி மசே என்பவருடன் சேர்ந்து சர்மாவின் மனைவி நீலத்தைக் கொன்றது தெரியவந்தது.

சம்பவத்தன்று சர்மாவின் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், நீலத்தை கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். நீலம் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று பயந்து அசுடோஷ் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். அதைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருந்த சர்மாவின் வளர்ப்பு நாயை இருவரும் கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர்.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட இருவரும், கொலை மற்றும் கொள்ளை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க கிளி பெரிதும் உதவியதாக ஆக்ரா காவல்துறை சூப்பிரண்டு சலாப் மதூர் தெரிவித்துள்ளார்.

கிளி ஒன்று கொலையாளியை காட்டிக் கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா