Monday 3 February 2014

சினிமாவின் மறு பக்கம் ‘எம்.ஜி.ஆரின் சத்திய விலாசம்..!



எம்.ஜி.ஆரின் முதல் துணைவியாராக வாழ்க்கைப்பட்டு இரண்டே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் ‘தங்கமணி’ என்னும் ‘பார்கவி’.

எம்.ஜி.ஆர்.–தங்கமணி மண வாழ்க்கை குறித்து நெகிழச்செய்யும் நிகழ்ச்சிகளை சொல்கிறேன்...

எம்.ஜி.ஆர். இருபது, இருபத்திரண்டு வயதைக் கடந்த பின்னரும் ஊர் ஊராக அலைந்து திரிந்து நாடகங்களில் நடித்துக்கொண்டு வாழ்நாளை வீணாக்குவதாக தாய் சத்தியபாமா வேதனைப்பட்டார். காலாகாலத்தில் அவருக்குக் கல்யாணம் செய்து வைத்து குடும்ப ஈடுபாடு உண்டாக்க விரும்பி, அது சம்பந்தமாக அவ்வப்போது தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் எம்.ஜி.ஆரோ அதற்குப் பிடிகொடுக்காமல் தட்டிக் கழித்துக்கொண்டே வந்தார். ஆனாலும் அம்மா சும்மா இருப்பாரா? தன் பிள்ளைக்கு கல்யாணம் என்னும் ‘கால்கட்டு’ போடுவதற்கான அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எம்.ஜி.ஆர். 1939 வாக்கில் ‘மாயா மச்சீந்திரா’ என்னும் படத்தில் நடிப்பதற்காகத் தன் அண்ணன் சக்ரபாணியுடன் கொல்கத்தாவிற்குச் சென்றுவிட்டார். இந்த படத்தின் இயக்குனர் ராஜா சந்திரசேகர்.

தன் பிள்ளை கொல்கத்தா சென்ற சமயம் பார்த்து தாயார் சத்யபாமா தனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூலமாக பாலக்காட்டில் உள்ள ‘குன்னும்புரம்’ என்ற ஊரின் ‘தெக்கின்கூட்டில்’ என்னும் இல்லத்தில் வாழ்ந்த விஸ்வநாதய்யர் – லட்சுமிகுட்டி தம்பதியினரின் பதினெட்டு வயதுடைய அழகுப்பதுமையான ‘தங்கமணி’ என்ற பார்கவியை முறைப்படி பெண் பார்த்து, அவர்களும் சம்மதித்து இளைஞர் எம்.ஜி.ஆருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

திருமணம் என்றால் தன் பிள்ளை வரமாட்டான் என்பதால், தனக்கு உடல்நிலை சரியில்லை – உடனே வரவும் என்று தாயார் தந்தி கொடுத்தார். அதைப்பார்த்ததுமே அவர் புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தார். வந்த பிறகுதான் தெரிந்தது, தாயார் தன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, தன்னை கொல்கத்தாவிலிருந்து வரவழைப்பதற்காகத் தந்திரமாகக் கொடுத்த பொய்த்தந்தி அது என்ற விஷயம்.

‘ஒரு நிலையும் நிரந்தரமுமான வாழ்வு வருமானம் எதுவும் இன்றி, நாடக சினிமா நடிகனாக ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் எனக்கு இப்பொழுது எதற்காகக் கல்யாணம்?’ என்று கோபத்துடன் கூறியதுடன் பெண் பார்க்கச் செல்லவும் எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்.

தாயாருடன் உறவினர்களும் ஒன்று சேர்ந்து அவரிடம் அதை இதைக் கூறி சமாதானப்படுத்தி – வற்புறுத்தி பெண் பார்க்க அழைத்துச் சென்றனர்.

அழகிய தங்கமணியைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு அவரைப் பிடித்துப்போகவே, திருமணத்திற்கு சம்மதித்தார்.

தாயாரின் அன்பு – தங்கமணியின் அழகு இவ்விரண்டும் சேர்ந்து, திருமணமே வேண்டாம் என்ற எண்ணம் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் மனதை மாற்றிவிட்டது.

அந்த இளம் பருவத்திலேயே அன்புக்கும், அழகுக்கும் அடிமையாகக்கூடிய இயற்கையான ஓர் இயல்பை எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அக்காலத்தில் மகாத்மா காந்தி மீதும், காங்கிரஸ் இயக்கத்தின் மீதும் எம்.ஜி.ஆர். அதிகப் பற்றும், ஈடுபாடும் கொண்டிருந்தார். அதன் காரணமாக தன் திருமணத்தின் போது தூய கதர் ஆடைகளைத்தான் அணிவேன். பரம்பரையான வழக்கப்படி மணமகனுக்கான பட்டு உடைகளை உடுத்த மாட்டேன் என்று பிடிவாதமாக நிபந்தனை விதித்தார்.

அதற்கு அனைவரும் உடன்பட்டதன் பேரில், இளைஞர் எம்.ஜி.ஆர். 1940–ல் தனது 23 வயதில், தன்னைக் காட்டிலும் 5 வயது குறைவான 18 வயது தங்கமணியை அவர் பிறந்த பூர்வீக ‘தெக்கின்கூட்டில்’ இல்லத்திலேயே வைத்து திருமணம் புரிந்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர். அவரது அண்ணன் சக்ரபாணி குடும்பத்தினர் தங்கமணியை அவர்களோடு அழைத்துச் சென்றுவிட்டனர். வசதி படைத்த தங்கமணியின் தகப்பனார் தன் மகளுக்கு நிறைய தங்க நகைகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சி. சகோதரர்கள் நிரந்தர வருமானம் இல்லாத நிலையில், தொடர்ந்து இரண்டு வருட காலங்கள் குடும்பம் நடத்த சிரமப்பட்டு, வேறு வழியின்றி – தங்கமணியின் நகைகளை விற்கவேண்டிய தவிர்க்க முடியாத சங்கட நிலை ஏற்பட்டது.

இதை அறிந்த அவருடைய பெற்றோர் தங்களுடைய மகள் வசதி இல்லாமல் வாழ்வதைக்கண்டு மனம் வருந்தி, சிறிது காலம் எங்களுடன் இருக்கட்டும் என்று கூற, எம்.ஜி.ஆரின் தாயாரும், தமையனாரும் விருப்பம் இன்றி அவர்களுடன் தங்க     மணியை அனுப்பி வைத்தனர். அப்போது எம்.ஜி.ஆர். நாடகத்திலோ, சினிமாவிலோ நடிப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்.

திருமணமான 1940–லிருந்து 42 வரையில் எம்.ஜி.ஆருடன் வாழ்ந்த தங்கமணி, பிறந்த வீட்டிற்குத் திரும்பி வந்த மறுமாதமே, எதிர்பாராமல் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்துவிட்டார்.

அவருடைய மறைவுச் செய்தி தந்தி மூலமாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதை அறிந்து பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான எம்.ஜி.ஆர். உடனே ஊருக்குப்புறப்பட முயற்சித்தும் அப்பொழுது போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் தாமதமாகி மூன்று நாட்களுக்குப் பிறகு மாமனார் வீடு வந்து சேர்ந்தார். அதற்கு முன்பே தங்கமணியின் நல்லடக்கம் நடந்து முடிந்து விட்டது.

அவர் பெரிதும் நேசித்த அன்பு மனைவி மிகக்குறுகிய காலத்திற்குள் மறைந்த துன்பத்தைத் தாங்க முடியாமல், கடைசி முறையாக அவருடைய முகத்தை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று விரும்பி, அவரைப் புதைத்த இடத்தைத் தோண்டச் சொல்லி மிகவும் பிடிவாதம் பிடித்தார். அவருடைய தாயார், தமையனார் மற்றும் உற்றார், உறவினர், ஊரார் அனைவரும் ஒன்று சேர்ந்து படாதபாடு பட்டு எம்.ஜி.ஆரை சமாதானம் செய்து அமைதிப்படுத்தினர்.

எம்.ஜி.ஆரை மணந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தங்காமல் பறந்து சென்றுவிட்ட அந்தத் ‘தங்கக்கிளி’ தங்கமணி தன்னோடு இல்லை என்றாலும்கூட, அவரது உற்றார் உறவினர்களுக்கெல்லாம் அவ்வப்போது தேவைப்பட்ட பொருளுதவிகளை எம்.ஜி.ஆர். நீண்ட காலம் செய்து வந்தார்.

அவர்கள் எல்லோரும் தங்களுக்கு ஏதாவது பொருளாதாரப் பிரச்சினை என்றால் உடனே சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரிடம் வேண்டிய உதவிகளைப் பெற்றுச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர்.

காலப்போக்கில் தங்கமணி குடும்பத்தாருக்குச் சொந்தமான எம்.ஜி.ஆரின் வசதி மிக்க மாமனார் வீடான ‘தெக்கின் கூட்டில்’ என்று பெயர் கொண்ட அந்த இல்லம் இப்பொழுது சிதிலம் அடைந்து வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது.

இளம் பருவத்திலேயே திருமணமாகி தனது இனிய மனைவியை இழந்து துயருற்ற எம்.ஜி.ஆர். ‘இனி திருமணமே செய்து கொள்வதில்லை’ என்று முடிவு செய்தார். தன் நாடக சினிமா நடிப்புத் தொழிலுக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் ஒத்துவராது என்று எண்ணிய எம்.ஜி.ஆரை மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி சத்யபாமா அம்மையார் எவ்வளவோ வற்புறுத்தி, எடுத்துக்  கூறியும்கூட அவர் மறுத்து தனியாகவே வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் எம்.ஜி.ஆர். நாடகங்கள் மற்றும் சினிமாவிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் செலவு போக மீதியைச் சேமித்து வைத்து அதைக்கொண்டு முதன் முதலாக வாங்கிய சொத்து– கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தன் தாயார் சத்யபாமாவின் சொந்த ஊரான வடவனூரில் இருந்த அவருடைய பூர்வீக மருதூர் இல்லத்தின் அருகில் ‘கவுண்டன்தரா’ என்ற இடத்தில் வீட்டோடு கூடிய சுமார் 2 ஏக்கர் இடமாகும்.

குறிப்பிட்ட இந்தப் பகுதியில் இந்த வீட்டையும், இடத்தையும் எம்.ஜி.ஆர். வாங்கக் காரணம் அன்னை சத்யபாமாவிற்கும், அவருடைய உடன் பிறந்த சகோதரர்களுக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக மனவேதனையுடன் இருந்த தாய்க்கு ஆறுதல் தரும் பொருட்டு, தனது கடின உழைப்பின் மூலம் கிடைத்த ஊதியத்தில் சேர்த்து வைத்திருந்த அந்தத் தொகையைக்கொண்டு இந்த இடத்தை சொந்தமாக வாங்கி, மராமத்துப் பணிகள் செய்து முடித்து அதற்கு ‘சத்திய விலாசம்’ என்று தன்னைப் பெற்றெடுத்துப் பாடுபட்டு வளர்த்து ஆளாக்கிய தாயின் பெயரையே வைத்து மகிழ்ந்த எம்.ஜி.ஆர். வீட்டோடு சேர்ந்திருந்த கிணற்றின் மேல் பகுதியிலும் அந்தப் பெயரையே செதுக்கி வைத்தார்.

பிற்காலத்தில் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் முதன் முதலாக பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமனின் தந்தையாரிடமிருந்து விலைக்கு வாங்கிய கதவிலக்கம் 160 கொண்ட அந்த இல்லத்திற்கும் ‘தாய் வீடு’ என்றுதான் பெயர் வைத்தார்.

அதன் பிறகு 1959–60 வாக்கில் சென்னை பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்த ராமாவரத்தில் வாங்கிய நஞ்சை புஞ்சைகளுடன் கூடிய பெரிய தோட்டத்தில் அவர் கட்டிய வீட்டின் தெற்கு முகம் நோக்கிய பிரதான வாசலுக்குக் கிழக்கில் ஒரு மண்டபம் எழுப்பி, அதில் தன் அருமை அன்னை சத்யபாமாவின் திருவுருவச்சிலையை கடவுள் விக்ரகம்போல பிரதிஷ்டை செய்து தீப, தூப, நைவேத்தியத்துடன் எம்.ஜி.ஆர். அன்றாடம் வழிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னைக்கு ஆலயம் அமைத்து வழிபட்ட ‘நடிகர்’ இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர். ஒருவர்தான்.

ஒரு பிள்ளை தன்னைப் பெற்றெடுத்து, பாலமுது ஊட்டித் தாலாட்டிப் பாசம் பொழிந்து வளர்த்து ஆளாக்கிய அந்தத் தெய்வத்தாய்க்கு என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என்பதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கின்ற அன்பிற்கோர் ஆசானாக அமைந்த எம்.ஜி.ஆர். என்னும் அந்தப் பொன்மனச் செம்மலை எப்படிப் புகழ்வது?

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் பார்த்துத் திருந்தி தாய் மீது பற்றும் பாசமும் அதிகம் கொண்ட இளைஞர்கள் லட்சோப லட்சம் பேர்!

பிறந்த பிள்ளைகளின் தாய்ப்பாசத்தைக் காட்டிலும், தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் மீது மிகுந்த புத்திரபாசம் கொண்டிருக்கும் புனிதத் தாய்க்குலத்தில் ஒருவரான சத்யபாமா அம்மையார், அப்பொழுது சென்னையில் குடும்பத்துடன் வசிக்கும் தன் பிள்ளை      களைப் பிரிந்து தனக்கென்றே இளைய மகன் கட்டிய சகல வசதிகளும் கொண்ட அந்த ‘சத்திய விலாசம்’ வீட்டில் தனியாக வாழ விரும்பாமல் அண்ணன் சக்ரபாணியாருடனும், தம்பி எம்.ஜி.ஆருடனும் சென்னைக்கு வந்து விட்டதால், அந்த வீடு பூட்டியபடியே இருந்தது.

வீடு வீணாகாமல் அதை ஒரு பள்ளிக்கூடமாக மாற்றிவிட எம்.ஜி.ஆர். எண்ணியிருந்த சமயத்தில், சத்யபாமா அம்மையாரின் பழைய மருதூர் இல்லத்தில் வேலை செய்த ‘கண்டு மேஸ்திரி’ என்பவர் தனது சிறு வயது மகளுடன் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரைச் சந்தித்து, புதிய ‘சத்திய விலாசம்’ வீட்டில் குடியிருந்து அதைப் பராமரித்துக் கவனித்துக்கொள்வதாகக் கூறி, அதற்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுப்பெற்று எம்.ஜி.ஆரின் சம்மதத்துடன் அங்கு வசித்து வந்தார்.

சில மாதங்கள் சென்றதும் மேற்படி கண்டு மேஸ்திரி மீண்டும் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரைச் சந்தித்து, ‘அந்த வீட்டில் நீ வசிக்கக்கூடாது என்று உறவினர் சிலர் தன்னிடம் பிரச்சினை செய்கிறார்கள்’ என்று கூறி மிகுந்த வேதனைப்பட்டார்.

உடனே எம்.ஜி.ஆர்., தனது தாய்க்காக முதன் முதலாகக் கட்டிய சத்தியவிலாசம் வீட்டையும், அதனுடன் சேர்ந்த 2 ஏக்கர் நிலத்தையும் கண்டுமேஸ்திரிக்கே தானமாக வழங்கி, பத்திரம் எழுதி, அதைப் பதிவும் செய்து சட்டப்பிரகாரம் அவருக்கே சொந்தமாக்கி விட்டார். எம்.ஜி.ஆர். என்ற கண்கண்ட கடவுள் தனக்குத் தானமாக வழங்கிய அந்தப் புண்ணிய பூமியில் கண்டு மேஸ்திரியின் மகள் ‘செந்தாம்ராட்டி’ அவருடைய மகள் வயிற்றுப்பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பிறக்கும்போதே சிவந்த தனது கரங்களை இல்லாதோருக்கு எடுத்துக் கொடுத்துக்கொடுத்து மேலும் மேலும் செங்கரங்களாக்கிக்கொண்டு ‘பொன்மனச்செம்மல்’ என்று ‘திருமுருக கிருபானந்த வாரி’யாரால் பட்டம் பெற்றுப் புகழ் பெற்ற எம்.ஜி.ஆர். மகாபாரதத்தின் தரும நாயகனான ‘தானவீரசூர கர்ணன்’ வழி வந்தவர் அல்லவா.

அன்னை சத்யபாமாவின் பூர்வீக ‘மருதூர் இல்லம்’ தகுந்த பராமரிப்பின்றி பாழடைந்து போய்விட்டதால், அவரது உறவினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, சுற்றுச்சுவருடன் (காம்பவுண்ட்) இப்பொழுது காலியாக இருக்கிறது. அந்த இடத்தின் அருகில் புதியதாக ‘மருதூர் இல்லம்’ கட்டப்பட்டு அதில் உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாலக்காட்டில் 1942–ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். அந்த நாடகத்தைக்காண ‘குழல் மன்னம்’ கிராமம் ‘ஏரகாட்’ குடும்பத்தைச் சேர்ந்த கடுங்க நாயர் தன் மனைவி மூகாம்பிகை அம்மாள், மகன் நாராயணன் மற்றும் சதானந்தவதி – மீனாட்சிகுட்டி என்ற இரு மகள்களுடன் வந்திருந்தார்.

நாடகம் முடிந்ததும் மேற்படி கடுங்க நாயரின் குடும்பத்தினர் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அப்பொழுது 14 வயது கொண்ட பருவப்பெண்ணான சதானந்தவதியின் அழகு எம்.ஜி.ஆரின் கண்களைக் கவர்ந்தது.

இனி திருமணமே செய்து கொள்வதில்லை என்றிருந்த எம்.ஜி.ஆரின் வைராக்கியத்தை சதானந்தவதியின் வசீகரத் தோற்றப்பொலிவு தகர்த்தெறியவே, அவர் மனம் மாறி, தனது தாயாரிடத்தில் அந்தப்பெண்ணைப் பற்றிக்கூறி, அவரை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத தாயார் சத்யபாமா அம்மையார் சந்தோஷங்கொண்டு, இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று உடனடியாக மேற்படி கடுங்க நாயரை அவருடைய இல்லத்தில் சந்தித்து முறைப்படி தன் பிள்ளைக்கு சதானந்தவதியைப் பெண் கேட்டார்.

100 ஏக்கருக்கு மேல் சொந்த நிலம், வீடு முதலிய வசதியும், அந்தஸ்தும் கொண்ட அவர், தன் மூத்த மகள் சதானந்தவதியின் விருப்பத்தையும் தெரிந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு அவரை இரண்டாந்தாரமாக மணம் செய்து கொடுக்கச் சம்மதித்தார். அப்பொழுது 25 வயதுடைய எம்.ஜி.ஆருக்கும், 14 வயது சதானந்தவதிக்கும் 1942–ல் அவர்களுடைய சொந்த ‘ஏரகாட்’ இல்லத்திலேயே திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

அக்காலத்திலேயே 6–ம் வகுப்பு வரை படித்து, கல்வி அறிவும், கண்கவர் அழகும், மென்மையான குணமும் கொண்டிருந்த தன் இளம் மனைவி சதானந்தவதியைப் பெரிதும் நேசித்து அன்பு செலுத்தினார் எம்.ஜி.ஆர்.

மாமனாரின் பூர்வீக ‘ஏரகாட்’ இல்லத்தின் பின்புறம் இருந்த காலி மனையில் தன் கையாலேயே ஒரு மாதிரி வடிவம் அமைத்து ‘பிளான்’ போட்டு தனது இதயங்கவர்ந்த இல்லத்   தரசிக்காகவே ஓர் அழகிய இல்லத்தை எழுப்பினார்.

ராமச்சந்திரன் என்ற தன் பெயரில் உள்ள சந்திரனையும், சதானந்தவதி என்னும் தனது மனைவியின் பெயரில் உள்ள ‘ஆனந்தம்’ என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக இணைத்து, ‘‘சந்திரானந்தா நிலையம்’’ என்னும் பொருள் பொதிந்த பொலிவான பெயரை அந்தப் புது இல்லத்திற்குச் சூட்டிய எம்.ஜி.ஆர்., வண்ணமலரும், அதன் வாசனையும் போல, தனது மனதிற்கினிய மனைவியுடன் வாழ்ந்து மகிழ்ந்து வந்தார்.

இந்த உண்மையான உண்மையை அறியும்போது எனக்கு அங்கே டெல்லி ஆக்ராவில் யமுனா நதி தீரத்தில் தன் காதல் மனைவி முழு நிலா முகத்தழகி மும்தாஜுக்காக மன்னன் ஷாஜகான் எழுப்பிய ‘தாஜ்மகால்’ நினைவுக்கு வருகிறது.

அந்த ஷாஜகான், தன் ஆசை மனைவி மும்தாஜ் இறந்த பின்னர் அவள் நினைவாக ‘தாஜ்மகால்’ எழுப்பினான்.

இந்த எம்.ஜி.ஆர். தன் அன்பு மனைவி சதானந்தவதி வாழும் காலத்திலேயே அவருக்கென்று ‘சந்திரானந்தா நிலையம்’ கட்டி முடித்து அதில் குடியமர்ந்து, தன்னுடன்கூட தன் இல்லத்தரசியும் அதனைக்கண்டு இன்புறச் செய்தார்.

அன்றைய இளம் பருவத்து ‘இன்ப நிலா’ எம்.ஜி.ஆர். என்னவெல்லாம் லட்சியம் கொண்டு எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு பெண்ணைக் காதலிக்கிறோம் என்பதைக் காட்டிலும், அந்தப் பெண்ணால் நாம் காதலிக்கப்படுகிறோம் என்பதை  அறிந்து கொள்வதில் சற்றுக் கூடுதல் சுகம் உண்டு அல்லவா!

அதைப்போன்று, தான் பிறர் மீது அன்பு செலுத்துவதைவிட, அவர்களால் அன்பு செலுத்தப்படுகிறோம் என்பதை அறிந்தால் எம்.ஜி.ஆர். அகம் மிக மகிழ்வார்.

காலங்கள் உருண்டோடின. திரைஉலகில் எம்.ஜி.ஆர். நட்சத்திரமாக மின்னத்தொடங்கினார். அவரது புகழ் வளர்ந்தது, சினிமாபட வாய்ப்புகள் குவிந்தன. அப்போது எம்.ஜி.ஆர்–சரோஜாதேவி நடித்து தேவர் பிலிம்ஸ் தயாரித்துக் கொண்டிருந்த ‘தாயைக்காத்த தனயன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டு இருந்தார். படத்தை தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒருநாள் முன்னதாக 13.4.1962–ல் வெளியிடுவதற்கான படப்பிடிப்பு வேலைகளில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.

இந்த நிலையில் 25.2.1962 காலை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை (இப்பொழுது ‘அவ்வை’ டி.கே.சண்முகம் சாலை) 160 ‘தாய்வீடு’ என்னும் பெயர் கொண்ட எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து தொலைபேசி வாயிலாக ஒரு துயரச் செய்தி வந்தது.

அது– எம்.ஜி.ஆரின் அன்புத் துணைவியார் சதானந்தவதி அம்மையார் காலமாகிவிட்டார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா