Sunday, 9 March 2014

அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி பாடிய பாடல் ஆண்களுக்கு மட்டுமா என்ன..?



அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி பாடிய பாடல் ஆண்களுக்கு மட்டுமா என்ன? பெண்களுக்கும்தான். ஆனால், நம் நாட்டில் பெண்கள் அச்சமில்லாமல் நடு இரவில் மட்டும் அல்ல பகல் வேளையிலேயே சென்றுவர என்னென்ன தேவை என்பதைப் பார்க்கலாமா?

ஒரு பெண்ணை ஆணானவன் தப்பான எண்ணத்துடன் பின்தொடரும் பொழுது அவனைக் கண்டு அஞ்சாமல் தைரியமாக அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க பெண் தனது மனதைத் தயார்ப்படுத்த வேண்டும். பயம் உள்ளே இருந்தாலும் அதனை வெளியே காட்டக்கூடாது.

நம்மிடமிருந்து பொருளைப் பறித்துக் கொண்டு செல்லத் திட்டமிடும் பொழுதும், நம்மைக் கடத்தவோ அல்லது கற்பழிக்கவோ முயலும் போதும் பயத்தில் உறைந்து போய் அந்தத் தவறை நடப்பதற்கு அனுமதிக்காமல் அந்தச் சூழ்நிலையை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு மிகவும் சவாலான, ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது அதைச் சமாளிக்க, கராத்தையில் கருப்பு பட்டை வாங்கி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்காப்புக் கலைகளின் வகுப்புகளையோ அல்லது அதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையைப் பெண்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது போன்ற வீடியோக்களையோ பார்த்தாலே போதும்.

இக்கட்டான சூழ்நிலைகள் நமது உடலையும் மனதையும் திட்டமிட்டு செயல்படுத்தி நம்முடைய சக்தியைப் பிரயோகப்படுத்தி எதிரியைப் பலமிழக்கச் செய்ய முடியும். நம்முடைய சோர்வையோ, பயத்தையோ வெளிப்படுத்தாமல் இருப்பதே நமக்கு பெரிய பலமாகும். நம்முடைய சிறந்த ஆயுதம் நம்முள்ளே இருக்கும் ஆறாவது அறிவாகும்.

மிருகங்கள்கூட பிறக்கும் பொழுதே வாழ்வதற்குத் தேவையானவற்றை எதிர்த்துப் போராடிவெல்லும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. மனிதர்களாகிய நாம் ஒருவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கு முன் அவர்களைச் சரியாக மதிப்பிட்டோமா என்று பலமுறை யோசித்து நம் உள்ளுணர்வைப் பின்பற்றி நடப்பது நல்லது.

தொலைபேசியில் பொது இடங்களில் பேசும்பொழுது சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதில் கவனமுடன் இருப்பது அவசியம். யாராவது நம்மைப் பின்தொடர்வது போல் இருந்தால் உடனே ஏதாவது கடைக்குள் நுழைந்து அவர்கள் நம்மைப் பின்தொடர்வதை அங்கிருப்பவர்களிடமோ அல்லது காவல்துறைக்கோ தெரியப்படுத்தலாம்.

நம்முடைய முட்டிக்கை மிகவும் பலமானது. எதிரியின் கண்கள், தொண்டை, இடுப்பு மற்றும் முட்டிக் கால்கள் பலவீனமானது. எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலையில் இவற்றை மனதில் கொண்டு தாக்குதல் நடத்தினால் வெற்றி நிச்சயம். கூட்டமான இடத்தில் நம்மீது தாக்குதல் நடத்த எதிரிக்கு துணிச்சல் இருக்காது.

எனவே ஆள்அறவமற்ற இடத்திற்கு சென்றால்கூட நாம் துரத்தப்படுகிறோம் என்பது தெரிந்தால் ஜிக்ஜாக்காக ஓடி அவனைக் குழப்ப வேண்டும். இதனால் எந்தஒரு ஆயுதம் வைத்திருந்தாலும் அவனால் நம்மைக் குறிபார்த்துத் தாக்க முடியாது.

வீட்டிலிருந்தாலும், வெளி ஊர்களுக்குச் சென்று தனியாகத் தங்க நேரிட்டாலும் பெண்கள் மிகவும் கவனத்துடன் அறைகள் பூட்டப்பட்டிருக்கின்றதா, பாதுகாப்பு எப்படி இருக்கின்றது என்பவற்றை கவனிக்க வேண்டும்.

பெண்களின் கைப்பையில் எப்பொழுதும் சிறிய கத்தி, மிளகாய்ப்பொடி, சிறிய டார்ச் லைட் இவற்றை வைத்திருப்பது தற்காப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆட்டோ அல்லது காரில் தனியாக செல்ல நேரிட்டால் நம்முடைய கைபேசியில் நாம் பிரயாணிக்கும் வாகனம், நாம் எங்கிருக்கிறோம் என்பது போன்ற விவரங்களை நம் குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது நம் தோழிகளுக்கோ தெரியப்படுத்துவது நல்லது.

இதனால் வாகன ஓட்டுநர்களும் தவறான எண்ணத்துடன் நம்மை நெருங்க பயப்படுவார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்தச் சூழ்நிலையை நான் தைரியமாகச் சமாளிப்பேன் என்ற உறுதி பெண்ணுக்குள்ளே இருந்தால் அவளை எந்த ஒரு தீய சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது

No comments:

Post a Comment

 
நண்பேன்டா