Monday, 3 March 2014
கல்யாணம் செய்யாமலே கலக்கும் வாழ்க்கை..!
‘திருமணம் கடினமானது. செலவுமிக்கது. சிக்கலானது' என்ற கருத்து இளம் பெண்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதனால் திருமண சிந்தனையை தூக்கி தூரவைத்துவிட்டு, படிப்பது, வேலை பார்ப்பது, சம்பாதிப்பது என்ற எண்ணத்தோடு இளம் பெண்கள், வாழ்க்கை பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் களைத்து திரும்பிப் பார்க்கும்போது அவர்கள் வயது 30-ஐ தொட்டுவிடுகிறது. அதன் பின்பு, ‘இந்த வயதுக்கு மேல் நமக்கு சரியான வரன் அமையுமா? அமைந்தாலும் அந்த மணவாழ்க்கை நன்றாக ஓடுமா?’ என்ற எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்குகின்றன.
அப்போதே இன்னொரு புறத்தில், ‘ஏன் ஊரைக்கூட்டி திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கவேண்டும்? திருமணம் செய்யாமலே ஒருவரோடு சேர்ந்து வாழ்ந்துவிடலாமே!’ என்ற சிந்தனை ஓட்டம் ஆரம்பிக்கிறது.
திருமணம் செய்யாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் விஷயம், இப்போது அடிக்கடி நீதிமன்றங்களின் கதவுகளையும் தட்டுகிறது. அந்த அளவுக்கு அது சமூகத்தில் வளர்ந்துவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம். இந்த ‘லிவ் இன் டுகெதர்’ வாழ்க்கை பற்றி இருவேறு கருத்துக்கள் உண்டு.
ஒருசிலர் கலாசார கேடு என்று எதிர்க்க, ‘இன்றைய சூழலில் இதைவிட்டால் வேறு வழியில்லை’ என்றும் சிலர் ஆதரவு கொடுக்கிறார்கள். ‘மற்றவர்களுக்கு தெரிந்தால் அது அசிங்கம்’ என்று சொல்பவர்களும் உண்டு. ‘சிலர் அந்த பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் நாமும் போனால் அது தவறில்லை’ என்றும் சிலர் கருதுகிறார்கள். அன்பு என்ற அற்புதமான வட்டத்திற்குள் அடங்குவது தான் இல்லறம். அதற்கு அடிப்படை நம்பிக்கை. நம்பிக்கைக்கு சமூக பிணைப்புகளும், சில சமய நடைமுறைகளும் அவசியம்.
ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமலே நம்பிக்கைக்கும், அன்பிற்கும் முரணாக, ஏதோ இன்னொரு தேவைக்காக சேருவதுபோல் இருக்கிறது. ‘இவர், இன்னாருடைய மனைவி’ என்பது ஒரு சமூக அந்தஸ்து. அதுபோல் ‘இவர், இன்னாருடைய கணவர்’ என்பதும் சமூக அந்தஸ்தே.
அந்த ‘இன்னார்’ என்பவர் மாறிக் கொண்டே போனால் அது சமூக அந்தஸ்தை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. அதனால் சமூக அந்தஸ்து கிடைக்காது. வெளிநாட்டு பண்பாடு, கலாசார இறக்குமதிகளுக்கு பின்னும் இந்தியா தன்னுடைய கலாசார பண்பாட்டை இழக்கவில்லை.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம் இதிகாசங்களின் வழிகாட்டல். சட்டங்களின் அறிவுறுத்தல். அதுதான் பாதுகாப்பும் கூட. அதையெல்லாம் மீறி ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்க நினைத்தால் சுற்றியிருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள தயங்கத்தான் செய்வார்கள்.
திருமணத்திற்கு முன்பு ஒருவரோடு வாழ்க்கை. திருமணத்திற்கு பின்பு இன்னொருவரோடு வாழ்க்கை. இப்படி இரட்டை வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்கள், இரண்டாவது வாழ்க்கையை நடத்த தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிலையற்ற தன்மையோடுதான், ‘போகிறவரை போகட்டும்’ என்று மணவாழ்க்கைக்குள் அடி யெடுத்துவைக்கிறார்கள்.
ஆனால் கொஞ்ச காலத்திலே, ‘புதிய வாழ்க்கை வாழும்போது, பழைய அவரே பரவாயில்லை. இவர் அவரைப் போல் இல்லை’ என்ற எண்ணம் வந்துவிட்டால், வாழ்க்கை வண்டி ஓடாது. நின்றுவிடும். அது விரைவாகவே விவாகரத்து என்ற கோட்டை தொட்டு விடுகிறது.
இந்திய திருமணங்களுக்கு தனிமரியாதை உண்டு. திருமணத்திற்கு பின்பு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், அதன் பிறகு மறுமணம் செய்விக்க பெற்றோர்கள் முன்நிற்பார்கள். ஆனால் இதுபோன்ற 'லிவ் இன் டுகெதர்' வாழ்க்கையை ஏற்பதில்லை.
திருமணம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டது. ‘லிவ் இன் டுகெதர்’ வாழ்க்கை பாதுகாப்பை அல்ல, பாதிப்பைதான் உருவாக்குகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment