Friday, 7 February 2014
குழந்தைகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா..?
"உனக்கு ஏன் கார்ட்டூன் பிடிக்கும்?"
இந்தக் கட்டுரையை எழுதும் முன் என் மகளிடமும் அவளது தோழிகளிடமும் நான் கேட்ட கேள்வி இது.
பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டவை... கார்ட்டூன் காமெடியாக இருக்கும், விதவிதமான கேரக்டர்கள் வரும், எப்போதும் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க, கார்ட்டூன் முடிவில் நீதி (Moral) சொல்வாங்க...
இவற்றை சொல்லும்போதே குழந்தைகளிடம் அவ்வளவு பரவசம். அந்தப் பட்டாம்பூச்சித்தனம் அவர்களுக்கே உரித்த அடையாளம் - ரசனை.
பிறந்த 6 மாதத்தில், ஒரு குழந்தை கண் முன் நிழலாடும் கார்ட்டூன் அதே குழந்தை மூன்று வயதை எட்டும்போது அதை முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறது என்கிறது ஆய்வுக் குறிப்பு ஒன்று.
குழந்தைகள் எப்போதும் திறந்த மனதுடன் இருப்பார்கள். இது உளவியல் உண்மை. அதனாலேயே குழந்தைப் பருவம் ஒரு மனிதனை ஆக்குவதில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
இங்கே நிற்காதே, இதை செய்யாதே, அங்கே விளையாடதே, இப்படித்தான் இருக்க வேண்டும்... இத்தகைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கொண்டே இருக்க குழந்தைகள் விரும்பவதில்லை. மாறாக, அவர்கள் தாங்கள் பார்ப்பதை பிரதிபலிக்க விரும்புகிறார்கள், பிடித்ததை செய்து பார்க்க தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்றல் அவ்வளவு ருசிகரமானது.
எனவே, கார்ட்டூன் படங்களில் பார்ப்பவற்றை நடைமுறைக்கு புறம்பானது என உணராமல் அவற்றை செய்து பார்க்க முயல்கின்றனர். பல நேரங்களில் அது விஷப் பரீட்சையாக முடிகிறது.
இருக்கட்டும். கற்றலில் கார்ட்டூனின் பங்கு என்ன என கேட்கிறீர்களா? நகர வாழ்க்கை பரபரப்பில் நமக்கு சற்று ஓய்வு தேவைப்படும் போது நாம் உடனே குழந்தைகளிடம் சொல்வது, 'தொந்தரவு செய்யாமல் கொஞ்ச நேரம் கார்ட்டூன் பாரு' என்பது தான்.
குழந்தைகள் தனியாக, சுதந்ததிரமாக தெருவில் விளையாட பாதுகாப்பான சூழல் இல்லை என்ற மற்றொரு சமூக அவலத்தின் அடையாளம் அது. அதை பற்றி இங்கு பேச வேண்டாம்.
அப்படி குழந்தைகளை கார்ட்டூன் பார்க்கச் சொல்லும் நாம் அவர்கள் எந்த மாதிரியான கார்ட்டூனை பார்க்கிறார்கள் என கவனிப்பதில்லை.
ஒரு பூனை, எலியை அடித்து துவம்சம் செய்வது, பதிலுக்கு எலி திட்டம் தீட்டி பூனை தலை வீங்கும் அளவுக்கு அடிப்பதும், பின்னணி இசையுடன் பரபரப்பாக, கலகலப்பாக, கலர்ஃபுல்லாக இருக்கலாம் அதை பார்க்கும் குழந்தைக்கு, ஆனால் அதில் ஒரு 'ஏ' சர்ட்டிபிகேட் படத்தைவிட அதிக அளவில் வன்முறை இருப்பதை நாம் உணர்ந்திருக்கோமா?
சூழ்ச்சி செய்து, தனது வேலைகளை மற்றவரை வைத்து முடித்துக்கொண்டு ஹீரோயிஸம் செய்யும் ஒரு குட்டிப் பையன், அதை பார்க்கும் குழந்தைக்கு பொய் சொல்லுதல், வேலையை தள்ளிப்போடுதல் ஆகியவற்றை கற்றுத் தருகிறான் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறோமா?
ஒரு ஒல்லி பிச்சான் பெண்ணுக்காக இரண்டு பேர் போட்டி போட்டு, சாகசங்கள் செய்வதும். அவர்களில் யார் அதிகம் சாகசம் செய்கிறார்களோ, அவர்களோடு அந்தப் பெண் டூயட் பாடுவதும், எந்த மாதிரியான கருத்தை குழந்தைகள் மனதில் விதைக்கும் என ஊகிக்க முயற்சி செய்திருக்கோமா?
இன்னும் பல ஹீரோயிஸம்களும், தாதாயிஸம்களும் சினிமாவுக்கு நிகராக கார்ட்டூன் ரூபத்தில் குழந்தைகள் மனதில் பதிகின்றன. பஞ்ச் டயலாக்குகளும், சில நேரங்களில் கெட்ட வார்த்தைகளும் கூட கார்ட்டூன் பொம்மை பேசுவதால் குழந்தைக்கு அது தனக்கான வார்த்தை என்று அர்த்தப்படுகிறது.
ஒரு நிமிடம்... உடனே, கார்ட்டூன் பார்ப்பது தவறு, குற்றம் என உங்கள் குழந்தைக்கு கட்டுப்பாடு விதிக்காதீர்கள். குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதில் தவறில்லை. அது அவர்களது பக்கவாட்டுச் சிந்தனைகளை தூண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் என்ன மாதிரியான கார்ட்டூன் அவை என்பது தான் முக்கியம். குழந்தைகள் பார்க்க வேண்டிய கார்ட்டூன் இவை தான் என்பதை பெற்றோர்கள் தணிக்கை செய்வது நலம். பாப்புலர் கார்ட்டூனை விட இது ஏன் சிறந்தது என்பதை அவர்களிடம் பேசி புரிய வைக்கலாம். சிறிது காலம் அவர்களுக்கு அது பழக்கப்படும் வரை அவர்களுடன் நாமும் ஒன்றாக அமர்ந்து அந்த கார்ட்டூனை பார்க்கலாம். அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து ஆலோசிக்கலாம்.
கார்ட்டூன் பார்த்து உலக கலாசாரத்திற்கு ஒரு சிறு அறிமுகமும் குழந்தை பெறலாம், டப்பிங் கார்ட்டூன்களில் மொழிபெயர்ப்பு தரமாக செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மொழியும் கற்றுக் கொள்ளலாம்.
இந்த இரண்டுக்குமே ஒரு சிறு உதாரணத்தை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தொலைக்காட்சி சேனலில் வெளிநாட்டு இனிப்பு வகையை ஒருவர் செய்து கொண்டிருந்தார். எதேச்சையாக அதை ஏரிட்டுப் பார்த்த குழந்தை அம்மா இது 'ரைஸ் கேக்', (Japanese Snack) ஜேப்பனீஸ் ஸ்நாக் என்றது. அது உண்மைதான். உணவின் பெயர் கீழே ஸ்க்ரால் ஆகிக் கொண்டிருந்தது. எப்படித் தெரியும் என கேட்க, இதை நான் கார்ட்டூனில் பார்த்திருக்கிறேன் என்று குழந்தை சொன்னது.
இப்போது தான் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ள நண்பரின் குழந்தை ஒன்று, தந்தை ஏதோ சொல்ல... அப்பா நான் அமைதியாகத் தானே இருக்கிறேன் என தெளிவாக கேட்டுள்ளது. பொதுவாக நம்மூர் சிறு குழந்தைகள் சும்மா தான் இருக்கேன் என்று வழக்கு தமிழில் தான் சொல்வார்கள். ஆனால், ஒரு கார்ட்டூனில் இருந்தே அந்தக் குழந்தையும் அப்படி தெளிவாக தமிழ் பேச கற்றுக் கொண்டிருப்பதை குழந்தை பார்க்கும் கார்ட்டூனை கவனித்த தந்தை உணர்ந்துள்ளார்.
இவை அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வன்முறையை கற்றுக் கொள்வதை விட சின்னச் சின்ன நல்ல விஷயங்களை கற்பது நன்றல்லவா?
இப்படி பெற்றோர் உதவியுடன் அர்த்தமுள்ள கார்ட்டூன்களை பார்த்த ஒரு குழந்தை அந்த கார்ட்டூனில் சொல்லப்படும் நீதி தனக்கு ஈசாப் கதைகளை நினைவூட்டுவதாக தெரிவித்தது.
இது கற்றலினால் விளைந்த பயனன்றோ!
ஒரு வாசகத்தை விட, ஒரு காட்சி குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சக்தி வாய்ந்தது. பள்ளிக்கூடம் செல்லும் முன்னரே கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் குழந்தைகள். நாளடைவில் அது அவர்களது நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இது குழந்தைகள் ஏறிச் செல்லும் படிக்கட்டின் முதல் படி. எனவே தெரிந்தெடுத்த கார்ட்டூனை குறிப்பிட்ட நேரம் குழந்தைகள் பார்ப்பது நலமே என நம்புகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment