Sunday 2 February 2014

தற்கொலையும், அதன் விளைவுகளும்..!


கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற ஒருவர் தான் புரிந்த கொலையின் பயங்கரத்தையும், தான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து, அவை திரும்பத்திரும்ப நிகழ்வது போன்ற கற்பனையில் ஈடுபட்டிருந்து கொண்டு அதே துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெரும் தீவிபத்தில் உயிர்நீத்த பெண்மணியொருவர், இறந்து ஐந்து நாட்களின் பின்னரும் தீயின் கோரப்பிடியில் தான் சிக்குண்டதையும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தான்பட்ட அவஸ்தைகளையும் திரும்பத் திரும்ப மனக்கண்முன் நிறுத்தி அவை மறுபடியும் மறுபடியும் நிகழ்வது போன்ற மனப்பிரமையில் இருக்கக் காணப்பட்டார் என்று கூறப்படுகின்றது.

தனது குழந்தையை மார்போடு அணைத்துப் பால் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தூய உள்ளம் படைத்த பெண்மணியொருவர், கடலில் ஆழ்ந்து போன கப்பலின் அடித்தளத்தில் இருந்தவாறு சடுதியாக மூழ்கிப்போனார். இறந்தபின் அவர் தன் கணவனையும் குழந்தைகளையும் பற்றிய இன்ப நினைவுகளுடன் அமைதியாக உறங்குவது போன்ற உணர்வு நிலையில் இருக்கக் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இங்கு வாழ்ந்தபொழுது தொழில்துறைகள், சமூகத் தொடர்புகள், குடும்ப உறவுகள் ஆகிய காரியங்களில் மிதமிஞ்சிய ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் சடுதி மரணம் அடைந்தவுடன் இத்தொடர்புகளை அறுத்துக் கொள்ள முடியாது தவிப்புடன் காணப்படுவர்.

மறு உலகத் தொண்டர்களின் என்னதான் இவர்களைச் சாந்தப்படுத்த முயன்றாலும் அநேகர் நிம்மதியற்ற நிலையிலேயே சிலகாலம் இருந்துகொண்டிருப்பர். பின்னர் மெது மெதுவாக இந்த நிலையிலிருந்து விடுபட்டு காமலோகத்தில் ஏனையோர் போன்று சஞ்சரிக்க ஆரம்பிப்பர்.

இவ்வுலகில் கொடிய பாவமான காரியங்களைப் புரிந்து கொண்டிருந்த கீழ்த்தர மனிதர்கள், சடுதி மரணமடைந்தவுடன் எதிர்கொள்ளும் நிலை மிகப் பரிதாபத்துக்குரியது. இம்மனிதர்கள் இறந்தபின் தமது கீழ்த்தர ஆசைகளையும், பாவச்செயல்களையும் தொடருவதற்கு இயலாத அங்கலாய்ப்பில் அதே செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு பூவுலகில் வாழ்பவர்களை “பிசாசு”களாக பின்தொடர்ந்து (Obsession) அவர்களை மேலும் மேலும் பாவகாரியங்களைச் புரிவதற்கு ஊக்குவித்து அவர்கள் சீரழிவதைப் பார்த்து (Vicarious Gratification) திருப்தியுறுவர்.

மதுபானச்சாலைகளிலும், இறைச்சிக் கடைகளிலும் “வேள்வி” என்ற பெயரில் ஆடுகள்,கோழிகள், பலியிடப்படும் இடங்களிலும், விபசார விடுதிகளிலும், கொலைஞர்கள் கொள்ளையர்கள் மத்தியிலும் இவைகள் தமது ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சுற்றித்திரிவதை சித்த புருஷர்கள் கண்டு உரைத்திருக்கிறார்கள். குடிப்பவர்கள் பெருங்குடிகாரர்கள் ஆவதற்கும், கொலை செய்தவர்கள் மேலும் மேலும் கொலைபுரிவதற்கும் கெட்ட ஆவிகளால் பீடிக்கப்படுவதும் ஒரு காரணமாகின்றது.

சுயநலம் காரணமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொள்பவர்கள் மிகப் பரிதாபத்துக்குரியவர்கள். ஒரு துன்பத்துக்கு முடிவுகட்டுவதாக நினைத்துக் கொண்டு தற்கொலையில் இறங்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதன் விளைவாக மறு உலகில் அனுபவிக்கும் துன்பமோ அதைவிடக் கொடுமையானது.

எந்தத் துன்பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைத்து தற்கொலை புரிந்தாரோ அதேதுன்பம் அவரது சிந்தனையில் விஸ்வரூபம் பெற்று சொல்லொண்ணாத் துயரத்தைக் கொடுக்கும். தாங்கமுடியாத உடல்வேதனை காரணமாக தற்கொலை புரிந்தவர் இறந்தபின்னும் சில நாட்களுக்கு அதேவேதனையை அனுபவிப்பது போன்ற பிரமையில் இருந்துகொண்டு அல்லல்படுவார். மேலும் தற்கொலை செய்ததற்கான கர்ம வினை அவரைச் சார்ந்து விடுவதோடு, அவர் எடுக்கப்போகும் மறுபிறப்பின் குணாம்சங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு விடுகின்றன.

சுயநலமற்ற தற்கொலைகளின் நிலையோ வேறு. பிறர் நலன்கருதி தியாக சிந்தனையோடு செய்யப்படும் தற்கொலையினால் இறந்தவர்களுக்கு தீயபாதிப்பு ஏற்படுவதில்லை. போர் முனையில் நாட்டிற்காக இறப்பவர்களும் சுயநலமற்ற இலட்சிய நோக்கத்திற்காக தமது உயிர்களை அர்ப்பணிப்பவர்களும் மறு உலகில் அதிக தீமைகளை அனுபவிப்பதில்லை.

மிகையான பூவுலக நாட்டம் உள்ள சிலர் சடுதி மரணமடைந்த சமயத்தில் தமது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஏதோவொரு பலம்வாய்ந்த இச்சை உணர்வு காரணமாக விரைவிலேயே மறுபிறப்பு எடுத்துவிடுகிறார்கள். இவ்வாறு மறுபிறப்பு எடுத்தவர்களில் சிலருக்கு முற்பிறப்பு நினைவுகள் இருப்பதுண்டு.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா