Sunday, 2 March 2014
உடல் எடையை குறைக்கும் காட்டன் டயட்…? - பின்னணி பயங்கரம்..!
கொழுக் மொழுக் தோற்றத்துடன் நடிகையாக அறிமுகமானவர் அவர். அவரது முதல் படப் பாடலை இப்போது பார்த்தாலும், பிதுங்கி நிற்கிற தனது வயிற்றை சேலையால் இழுத்து மறைத்துக் கொண்டு, கவனமாக நடனமாடியிருப்பதைக் கவனிக்கலாம். எந்த வயிறு வெளியே தெரிந்தால் அசிங்கம் என நினைத்தாரோ, இன்று அதே வயிறுதான் அந்த நடிகையின் மிகப்பெரிய பிளஸ். திரையுலகில் தனது மூன்றாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கி, முன்னணியில் இருக்கிற அவர், இப்போதைய படங்களில் வயிறும் இடுப்பும் தெரிகிற மாதிரியான காஸ்ட்யூம்களையே அதிகம் விரும்புகிறார். இருக்கா, இல்லையா என்கிற அளவுக்கு அவர் இடை மெலிந்ததே காரணம். நடிகைகளின் எடைக் குறைப்புக்குப் பின்னணியாக காலங்காலமாக சொல்லப்படுகிற அறுவைசிகிச்சையோ, மணிக்கணக்கான உடற்பயிற்சியோ இந்த நடிகைக்கு உதவவில்லை. பின்னே? காட்டன் டயட்..! யெஸ்… சாட்சாத் பஞ்சேதான்..!
காலை உணவுக்கு ஒரு கப் பஞ்சு, மதிய உணவுக்கு இன்னும் கொஞ்சம் பஞ்சு, இரவு உணவுக்கும் அதே மாதிரி கொஞ்சம் பஞ்சு. ஆரஞ்சு ஜூஸில் முக்கியெடுத்த பஞ்சை இப்படி மூன்று வேளைக்கும் முழுங்கியதே அந்த நடிகை, கொடியிடையாளாக மாறியதன் ரகசியமாம். நம்மூர் நடிகைகளுக்குத்தான் இது புதுசு. ஹாலிவுட்டில் காட்டன் டயட்டை பின்பற்றி, ஒல்லிக்குச்சி உடல்வாகுக்குத் திரும்பிய நடிகைகளும் மாடல்களும் ஏராளம்!
டயட்டீஷியன்களும் எடைக் குறைப்பு ஆலோசகர்களுமே இந்த காட்டன் டயட்டை தமது வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள் என்பது தான் ஜீரணிக்க முடியாத சேதி. அதென்ன காட்டன் டயட்? அது அப்படி என்னதான் செய்யும்? நல்ல தரமான பஞ்சாக வாங்கிக் கொள்ள வேண்டுமாம். அதை சின்னச் சின்ன பந்துகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம். கூடவே கொஞ்சம் ஜெலட்டின் அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு. அதில் பஞ்சு உருண்டைகளை முக்கியெடுத்து அப்படியே ‘லபக்’க வேண்டியதுதான்!
காட்டன் டயட்டிலேயே இரண்டு வகைகள் உண்டு. வேறு எந்த உணவையுமே கண்ணால் கூடப் பார்க்காமல், 3 வேளைகளுக்கும் இதையே உணவாக உட்கொள்கிறவர்கள் ஒரு ரகம். இது சைஸ் ஸீரோ உடல்வாகு வேண்டுமென்போரின் சாய்ஸ். சைஸ் ஸீரோவெல்லாம் வேண்டாம். உடல் மெலிந்தால் போதும் என்போர், ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கு முன்பும், கொஞ்சம் பஞ்சு உருண்டைகளை விழுங்க வேண்டுமாம். அப்படி உள்ளே போகிற பஞ்சானது, இரைப்பையின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வதால், ஆசைப்பட்டாலுமே ஒரு வாய் சாப்பாடு கூட அதிகமாக உள்ளே இறங்க வாய்ப்பில்லை.
விருப்பமான உணவைத் தியாகமும் செய்யத் தேவையில்லை, அதே நேரம் அதிகமாகவும் எடுத்துக் கொள்ள முடியாததால், தானாக உடல் மெலியத் தொடங்கும். பஞ்சு என்பது நார்ச்சத்து அதிகமுள்ள ஒரு பொருள் என்பதால், எடைக்குறைப்புக்கு உதவும் என்பது பலரது நம்பிக்கை. கலோரி உடலில் சேராது. வயிறும் நிறைந்த உணர்வு ஏற்படும். உடலை வருத்தாமல் எடையைக் குறைத்துக் கொள்ளலாம் என்பதுதான் இந்த பஞ்சு உணவின் பின்னணி ரகசியம்.
வெளிநாட்டு அழகிகளிடம் இருந்து, நம்மூர் பெண்கள் வரை பிரபலமாகிவிட்ட இந்த பஞ்சு டயட் ஆரோக்கியமானதுதானா? கல்லைத் தின்றாலும் கரைகிற வயதில், பஞ்சைத் தின்று கொழுப்பைக் கரைக்க நினைப்பது சரிதானா? இரைப்பை சிகிச்சை மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணரான நேஹாவிடம் பேசினோம்.
‘‘பஞ்சு என்பது உடுத்தத்தான் இதமானதே தவிர, உண்பதற்கு அல்ல. பஞ்சை உருட்டி அப்படியேவோ, பழச்சாறில் முக்கியோ விழுங்குவதைப் பற்றிக் கேள்விப்படுகிற போதே நமக்கெல்லாம் உடம்பு நடுங்குகிறது. உலர்ந்த பஞ்சை விழுங்குவோருக்கும் சரி, பழச்சாற்றில் நனைத்து விழுங்குவோருக்கும் சரி… இது நிச்சயம் பேராபத்துகளைத் தரும். அப்படியே விழுங்கும் போது, பஞ்சின் துகள்கள் நுரையீரலுக்குள் செல்லலாம். அதை வெளியேற்றும் முயற்சியில் இருமல் வரும். அதன் தொடர்ச்சியாக சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு, நிமோனியா, மூச்சுக் குழல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம்.
ஒருவேளை வெற்றிகரமாக பஞ்சு உருண்டைகளை விழுங்கி விட்டார் என வைத்துக் கொண்டாலும் பிரச்னைதான். குடல் அடைப்பு, பெருங்குடல் முறுக்கிக் கொள்வது, குடல் அழுகிப் போவது போன்றவை ஏற்படலாம். இவற்றின் தொடர்ச்சியாக கடுமையான வயிற்றுவலி, அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு அதன் தீவிரம், அடுத்தடுத்து பக்க விளைவுகள் என தொடர் பிரச்னைகளுக்கு வித்திடலாம். சில நேரங்களில் பிளீச் செய்யப்பட்ட பஞ்சை உட்கொள்ளும் போது, அதன் தீவிரம் இன்னும் மோசமாக இருக்கும்.
கலோரிகள் ஏதுமில்லாததால், பஞ்சு உணவை உட்கொள்வோருக்கு சத்துக் குறைபாடு ரொம்பவே அதிகமாக இருக்கும். அவர்களது வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் பாதிப்படையும். காட்டன் டயட்டை பின்பற்றியதால், உயிரையே இழந்திருக்கிறார் வெளிநாட்டில் ஒரு பெண். எடைக்குறைப்பு என்பது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கிற சமாசாரமில்லை என்பதை முதலில் எல்லோரும் உணர வேண்டும். கஷ்டப்படாமல் எந்த விஷயத்திலும் பலனை எதிர்பார்க்க முடியாது.
பருமன் அதிகமுள்ளோர், மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தான் எடைக் குறைப்புக்கான பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத தீர்வுகள். அவை பலனளிக்காத பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களின் உடலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா எனத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்…’’
Labels:
உடல்நலம்,
எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment