Monday 10 March 2014

பறக்கும் படை அதிரடி தொடர்கிறது தேர்தல் ‘வேட்டை’யில் 30 லட்சம் சிக்கியது...!



தர்மபுரி:தர்மபுரி, நாமக்கல், கோவையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.30 லட்சம் சிக்கியது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 5ம் தேதி முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

நடத்தை விதிகளின் ஒருபகுதியாக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இன்று காலை தொப்பூர் டோல்கேட் பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது, உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. காரில் வந்த பெங்களூரைச் சேர்ந்த ராம்குமார் (39) என்பவரிடம் விசாரித்த போது, பெங்களூரில் ஜவுளி கடை வைத்துள்ளதாகவும், பனியன் வாங்குவதற்காக திருப்பூருக்கு பணம் கொண்டு சென்றதாகவும் கூறினார். உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 இதேபோல் மற்றொரு காரில் ரூ.3.5 லட்சத்துடன் வந்த பெங்களூர் ஜவுளிக்கடை அதிபர் உதயகுமாரை நிறுத்தி சோதனை நடத்தினர். உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்கோடு பைபாஸ் ரோட்டில் வேனில் சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.96 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி ஏரிகரையில் இன்று அதிகாலை பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து நாமக்கல் செல்வதற்காக சொகுசு ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அதிகாரிகள் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

பஸ்சில் வந்த சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த பயணி நெல்சன் (22) பையை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 800 இருப்பதை கண்டுபிடித்தனர். முறையான ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்று காலை காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். பஸ் நிலையம் அருகே கையில் டிராவல்ஸ் பேக்குடன் நடந்து வந்த ஒருவரிடம் சோதனை மேற்கொண்டனர். அவரிடம் இருந்த டிராவல்ஸ் பேக்கில் 1000 ரூபாய் கட்டுகளாக ரூ.15 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளாடையில் 500 ரூபாய் கட்டுகளாக ரூ.5 லட்சத்தை மறைத்து வைத்திருந்தார். இவற்றை கைப்பற்றி நடத்திய விசாரணையில், அவர் ராஜஸ்தானை சேர்ந்த விகாஷ் (32) என்பது தெரியவந்தது. துணி வியாபாரத்துக்காக பெங்களூரில் இருந்து பணத்தை கொண்டு வந்ததாக போலீசாரிடம் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா