Thursday 20 February 2014

தமிழர்களின் வரலாற்றுச் சுவட்டில் மறக்க முடியாத நாள் - பாரதிராஜா



ராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய 7 பேரை விடுதலை செய்ததன் மூலம் உலகத் தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துவிட்டீர்கள் என முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

என் இனிய தமிழ் மக்களே..!

22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை. 22 வருட அனைத்துல தமிழர்களின் போராட்டத்திற்குப் பின் விடுதலை. உலகத் தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துள்ளீர்கள் - பாரதிராஜா செங்கொடியின் மரணத்திற்குப் பின் விடுதலை.

இந்த 22 வருடங்களாய் என்னென்னவோ பார்த்தாயிற்று. ராமேஸ்வரத்து மீனவர்களின் இடர் இறுதி யுத்தம் எல்லாவற்றிற்கும் மேலாய் தாங்கொண்ணா வலியும், வேதனையையும் தமிழர் வாழ்வில் வீசிப் போயிற்று.

இத்தனை பேரிடரை சமன் செய்யாவிட்டாலும் எம் தமிழ் வாழ்வும், தமிழ் மானமும் இந்த 2014 பிப்ரவரியில் முதல்முறையாக தன்னிறைவு அடைந்த்து. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து என்பதன் மூலமாக..

இத்தனை பெரிய இந்தியக் கண்டத்தில் தமிழர்கள் முன் வைக்கும் நீதியை நம்புவதற்கும், கோரும் கருணையை புரிந்து கொள்வதற்கும் ஜனாதிபதிகளாலேயே முடியாதபோது, தமிழர்களின் உயிர் வலியை உணர்ந்த நீதியரசர் சதாசிவம் மற்றும் அவர் குழுவினர், இந்த நாட்டின் மீதும் நீதியின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளனர்.

இந்த நேரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கண்ணீரால் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவருக்கும் குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தண்டனை நிறைவேறும் தருவாயில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தீர்கள்.

இருந்தும் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மத்திய அரசு, உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கை, உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியது.

மூவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நேரத்தில், நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் நேற்று தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யும் பொறுப்பினை தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சிறப்புமிக்கத் தீர்ப்பு அளித்து மகிழ்ச்சி கொண்டாடும் இவ்வேளையில், மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தாய்மையுள்ளத்தோடு ஒரே நாளில் உங்களுடைய ஒற்றை வார்த்தையில் வாழ்க்கை கொடுத்தது மட்டுமல்லாமல், 23 ஆண்டுகள் சிறைச்சாலையிலேயே தங்களது வாழ்க்கையைக் கழித்து, வாழ்க்கையே கேள்விக்குறியாய் நின்று கொண்டிருந்த நளினி, ராபர்ட் பயஸ், ஜே.குமார், ரவிச்சந்திரன் ஆகிய அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டு உலகத் தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துள்ளீர்கள். இந்த நாள் பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான நாள். தமிழர்களின் வரலாற்றுச் சுவட்டில் மறக்க முடியாத நாள்.

மேலும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டப் பிரிவு 432-ஐ பயன்படுத்தி உடனே விடுதலை செய்வேன் என்று மரண அடி கொடுத்து மாநில சுயாட்சியை நிலை நிறுத்தியது உங்களால் மட்டும்தான் முடியும். நாங்கள் விதைத்தோம். தங்கள் ஆட்சியில் துளிர்விட்டுள்ளது. மலரும் நம்பிக்கையோடு இருக்கிறோம். மனமார்ந்த நன்றி.

 -இவ்வாறு தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா