Thursday 20 February 2014

சிறையில் பிறந்த குழந்தை 22வயதில் பெற்றோரை சந்திக்கப்போகிறது-நளினியின் மகள் அரித்ரா...!



ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என நேற்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், "நாம் நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? பிரதமரை கொன்றவர்களையே விடுவிக்கும் போது, சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும் போது எப்படி நீதி கிடைக்கும்?" என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது பெற்றோரை மன்னித்துவிடுமாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முருகன், நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தனியார் செய்தி சனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ராகுல் காந்தியிடம் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் விரும்பிய ஒருவரின் இழப்பை என்னால் புரிந்து கொள்ள முடியும். எனது பெற்றோர்கள் மன்னிக்கப்பட போதுமான தகுதி கொண்டுள்ளனர்.

என் பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் நான் பாதிக்கப்பட்டேன். எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்தும், அவர்களுடன் நான் இருந்ததில்லை. தற்போதும் நான் எனது பெற்றோர்களுடன் இருக்க விரும்புகிறேன். அவர்கள் குற்றம் செய்து இருந்தாலும் அதற்கான தண்டனையை போதுமான அளவு அனுபவித்துவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தான் இதனை சாதித்துள்ளார். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் வெளிபடுத்த முடியவில்லை. எனது பெற்றோர்கள் கண்டிப்பாக ஒரு வெளியே வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் நிரபராதிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நளினியின் மகள் ஹரித்திரா சென்னை வருகிறார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர்களில் ஒருவரான முருகன் - நளினி விடுதலையாக விருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து அவர்களது மகள் ஹரித்திரா லண்டனில் இருந்து சென்னை வருகிறார்.

காதலர்களான முருகனும், நளினியும், புதுமணத் தம்பதிகளாகியிருந்த நேரத்தில் தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை கைதியாக செங்கல் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நளினி 5 மாத கர்ப்பிணி. வயிற்றில் குழந்தையை சுமந்தபடியே கடுமையான வலியுடன் காலம் தள்ளினார் நளினி.

டாக்டர்கள் குறித்துக் கொடுத்த தேதிக்கு முன்னரே நளினி அழகான பெண் குழந்தையை சிறையிலேயே பெற்றேடுத்தார். அக் குழந்தைக்கு ஹரித்திரா என்று பெயரிட்டனர். சிறையில் பூத்த மலரான ஹர்த்திராவுக்கு 2 வயது இருக்கும் போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்போது பசுமாட்டையே கண்கொட்டாமல் ஆச்சரியமாக பார்த்திருக்கிறார் ஹரித்திரா.

இதற்கு மேலும் தங்களது குழந்தை வெளி உலகமே தெரியாமல் சிறைக்குள் வளர வேண்டாம் என்று முடிவெடுத்த அவர்கள் ஹரித்திராவை வெளியில் தங்களது உறவினர்களிடமோ அல்லது தெரிந்தவர் களிடமோ கொடுத்து வளர்க்கச் சொல்லலாம் என்று திட்டமிட்டனர்.

இதன் பின்னர், ராஜீவ் கொலை வழக்கில் சகசிறை வாசியாக இருந்த சுசிந்திரனின் தாயிடம் ஹத்திராவை ஒப்படைத்தனர். அவர் சிறிது காலம் கோவையில் வைத்து ஹரித்திராவை வளர்த்து வந்தார். பின்னர் ஈழத்துக்கு சென்ற அவர், தற்போது 22 வயது இளம் பெண்ணாக லண்டனில் வசித்து வருகிறார்.

மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து வரும் ஹரித்திரா, பெற்றோரின் விடுதலையாகப்போகும் தகவலால் மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார். நளினி�முருகனின் விடுதலைக்காக காத்திருக்கும் ஹரித்திரா அவர்களை சந்திப்பதற்காக சென்னை வருகிறார்.

நளினியும், முருகனும் விடுதலையாகும் தேதி தெரிந்த பின்னர், ஹரித்திராவின் பயண தேதி திட்டமிடப்பட உள்ளது.

சென்னை வரும் அவர் தனது பெற்றோரின் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். விவரம் தெரிந்த பின்னர் தனது தாய், தந்தையை சிறைக்கு வெளியில் வைத்து முதன் முதலாக சந்திக்க உள்ளார் ஹரித்திரா. எனவே, அவர் சென்னை வரும் போது சிறப்பான வரவேற்பு அளிக்கவும் தமிழ் ஆர்வலர்கள் திட்மிட்டுள்ளனர்.

விடுதலையான பின்னர் நளினியும் முருகனும் மகள் ஹரித்திராவுடன் லண்டன் சென்று குடியேற திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

பாஸ்போர்ட், விசா எடுப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு மத்தியில் முருகனும், நளினியும் லண்டனில் குடியேறுவதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் பற்றியும் அவர்களது வக்கீல் புகழேந்தி ஆய்வு செய்து வருகிறார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா