Tuesday, 11 February 2014
பேஸ்புக் "விருப்பங்கள்" உங்களை அடையாளம் காட்டிவிடும்..!
பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து, கட்டுரை, புகைப்படம் அல்லது காணொளியை விரும்புகிறார் என்றால் அதை தெரிவிப்பதற்கு லைக் என்கிற பொத்தானை அழுத்தினால் அவர் அதை விரும்புகிறார் என்று பொருள். இப்படி ஒருவர் தனது முகநூலில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப்பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆளுமையை காட்டும் அல்கோரிதம்
இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்திஎட்டாயிரம் முகநூலர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் முகநூலில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும்
உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.
அடுத்ததாக, இந்த முகநூலர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள்.
உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள்.
இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற முகநூலர்களில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. அதேபோல முகநூலர்களின் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.
இவர்களின் மத அடையாளங்களை கண்டுபிடிப்பதில் கிறித்தவர்கள் யார், முஸ்லீம்கள் யார் என்பதை 82 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. ஒருவருக்கு திருமணமானதா இல்லையா என்பதையும், ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தனிமனித அந்தரங்கத்துக்கு ஆபத்து
இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் விரும்பிய விஷயங்களில் வெளிப்படையாக பாலியல் விவரங்களை அடையாளப்படுத்தும் விவரங்கள் எவையும் இல்லை. மாறாக இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பொதுவான விஷயங்களை இவர்கள் விரும்பியிருந்த விதத்தை வைத்தே இந்த அல்கோரித கணக்கீட்டின் படி இவர்களின் அடையாளங்கள் சரியாக கணிக்க முடிந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இது விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளித்தாலும், தனிமனித அந்தரங்கத்தை பாதுகாப்பதில் இது மிகப்பெரிய சவால்களை தோற்றுவிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.
உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும்.
இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம். அதேசமயம், தனிமனிதரின் முகநூல் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.
இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, முகநூலில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் முகநூலில் இருக்கும் பிரைவசி செட்டிங்குகள் எனப்படும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்கள் பார்க்கதபடி செய்ய முடியும் என்று கூறும் அந்தரங்க பாதுகாவலுக்கான அமைப்புக்கள், தேவைப்படுபவர்கள் அதை செய்துகொள்வது நல்லது என்றும் பரிந்துரை செய்கிறார்கள்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், முகநூலில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும்.
Labels:
அனுபவம்,
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment