Wednesday, 12 February 2014
குளிர்பானங்கள் எல்லாமே விஷம்தானா...? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!
வெளிநாட்டு குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் அதிகமாக கலக்கப்படுகிறது என்ற சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அவற்றுக்கு தடை விதிக்க கோரிக்கைகள் எழுந்தன. உடனே அந்த கம்பெனிகள் குற்றச்சாட்டை மறுத்தன.
ஆனாலும் மக்கள், அந்த குளிர்பானங்கள் மீதான மோகத்தை குறைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, கிராமப்புற கடைகளில் குளிர்பானங்களை வாங்கி ஆண்டுக்கணக்கில் வைத்து விற்கின்றனர். அவை காலாவதியாகி விட்டதா, போலியா என்று தரம் பார்த்து வாங்கும் அளவுக்கு கிராம மக்களுக்கு விழிப்புணர்வு கிடையாது.
நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறாள். மேலும் 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி (49) என்பவர், என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளி. அவருக்கு லலிதா(10), அபிராமி(9), கவுசல்யா (6) என்ற 3 மகள்களும், பரமசிவம் (3) என்ற மகனும் உள்ளனர்.
அவர் நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள பெட்டிக் கடையில் பிரபல நிறுவனத்தின் அரைலிட்டர் குளிர்பான பாட்டில் வாங்கிச் சென்றுள்ளார். அதை குழந்தைகள் குடித்துள்ளனர். குடித்த சிறிது நேரத்தில் 4 குழந்தைகளும் வரிசையாக மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த அஞ்சாபுலி மற்றும் உறவினர்கள் அந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி அபிராமி இறந்து விட்டாள். மற்ற 3 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயிர்பலிக்கு காரணமான குளிர்பான பாட்டிலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். குளிர்பானம் விற்ற கடைக்கு சீல் வைத்து, கடைக்காரரை பிடித்து விசாரித்து வருகின்றனர். விற்கப்பட்டது காலாவதியான குளிர்பானமா அல்லது போலி குளிர்பானமா என்ற விசாரணை நடக்கிறது.
கிராமப்புறங்களில் விற்கப்படும் குளிர்பானங்கள் மட்டுமின்றி மற்ற உணவு பொருட்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதிப்பதில்லை. பெரும்பாலும் அவை போலியானதாகவோ, காலாவதியானதாகவோ, தரமற்றதாகவோ இருக்கின்றன. காரணம், பல பொருட்களில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி தயாரிப்புகள் வருகின்றன. அவை கிராமப்புறங்களில்தான் அதிகமாக விற்கப்படுகின்றன.
இதற்கு வியாபாரிகளை குறை சொல்ல முடியாது. சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த போலி தயாரிப்புகள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற உயிரிழப்புகள் தொடரவே செய்யும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment