Saturday, 8 February 2014
மாணவர்கள் வெற்றி பெற 10 அம்ச உறுதிமொழி ஏற்க வேண்டும்..! - அப்துல்கலாம்
பள்ளி மாணவர்கள் வெற்றி பெற 10 அம்ச உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார்.
முப்பெரும் விழா
சென்னை மகாஜன சபை 1884–ம் ஆண்டு மே மாதம் 16–ந் தேதி அன்று தொடங்கியது. சபையின் 130–ம் ஆண்டு விழா, காமராஜர் மற்றும் மகாகவி பாரதியார் நினைவு விழா ஆகிய முப்பெரும் விழா புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தங்க மாளிகையில் நடைபெற்றது.
சென்னை மகாஜன சபை தலைவர் டாக்டர் ஜி.செல்வகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கினார். காமராஜர் விருது டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஜுடீசியல் உறுப்பினர் பி.ஜோதிமணிக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி செட்டிக்கும், சிறந்த கல்வியாளர் விருது ஸ்ரீகிருஷ்ணா குழும கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஆர்.விவேகானந்தனுக்கும், சிறந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர் விருது டாக்டர் ஏ.சையத் அலிக்கும் வழங்கப்பட்டது.
பரிசு
சபை சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட சிறப்பு பேச்சு, கட்டுரை மற்றும் பாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் பரிசு வழங்கி அப்துல்கலாம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உழைப்பது நம் கடமை, தொழில் செய்வது நம் உரிமை. எனவே நல்ல முறையில் தொழில் செய்து நாட்டை வளப்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் ‘நான் விளக்காக இருப்பேன், படகாக இருப்பேன், ஏணியாக இருப்பேன், அடுத்தவர் துன்பத்தை துடைப்பேன், மனநிறைவுடன் வாழ்வேன்’ ஆகிய கொள்கைகளை மனதில் கொள்ள வேண்டும்.
10 அம்ச உறுதிமொழி
மாணவர்கள் உண்மைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாய் இருப்பது எப்படி? கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் வாழ்வது, மற்றவர்களை மதிப்பது, பாராட்டுவது எப்படி? பொறுமையாக செயல்பட்டு தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவது, பேச்சு திறனை வளர்த்து கொள்வது எப்படி? கூடி உழைத்து இலக்கை அடையும் விதம், திறனுடைய கடமையை பின்பற்றுவது, கோபத்தையும், சோம்பலையும் தவிர்ப்பது, சுயநலம் ஒழித்தல் ஆகிய 10 அம்ச உறுதிமொழியை ஏற்று வெற்றி காண வேண்டும்.
இவ்வாறு பேசிய அப்துல்கலாம் உறுதி மொழிகளை ஒவ்வொன்றாக கூற அதனை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
சபையின் கவுரவ பொதுசெயலாளர் சி.கே.மனோகரமூர்த்தி, கவுரவ பொருளாளர் கவுரிசங்கர், மனிதநேயர் வரதராஜன், கவுரவ இணை செயலாளர் மோகன் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா தொடக்கத்தில் மாணவ–மாணவிகளின் பரத நாட்டியம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment