Saturday, 22 February 2014
சாப்பாட்டுக்கே வழியில்லாமல்.. வறுமையுடன் போராடிய.. 'வாட்ஸ் ஆப்' நிறுவனரின் திரில் கதை..!
சான் பிரான்சிஸ்கோ: உக்ரைனிலிருந்து ஒன்றுமே இல்லாமல் வெறும் கையுடன் அமெரிக்காவுக்கு வந்து, தனது நண்பர் பிரையன் ஆக்டனுடன் இணைந்து வாட்ஸ் ஆப்பை உருவாக்கி இன்று பேஸ் புக்கிடம் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடிக்கு விறறு உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம்-மின் கதை மிக உருக்கமானது.. காரணம், ஒரு காலத்தில் அவர் சாப்பாட்டுக்கு வழியி்ல்லாமல், வறுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆவார்.
உக்ரைனிலிருந்து வாழும் வழி தேடி அமெரிக்காவுக்கு வந்தவர்தான் ஜசன் கோம். மிக மிக வறுமையான வாழ்க்கையை சிறு வயதில் வாழ்ந்தவர்.
தனது தாயாருடன் சாப்பாட்டுக்கான டோக்கனை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர் இவர். ஆனால் இன்று இவர் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவருடன், பிரையன் ஆக்டனும் சேர்ந்து இன்று உலகத்தின் முகத்தையே திருப்பிப் போட்டவர்கள் என்பது சாதனைக்குரிய செய்தியாகும்.
தனது வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பிரையனுடன் இணைந்து பேஸ்புக்குக்கு விற்றுள்ள கோம், பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக இணைகிறார்.
பேஸ்புக்குடன் தனது நிறுவனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும் தனது தாயும் சிறு வயதில் வறுமையுடன் வாழ்ந்து வந்த இடத்தில் வைத்துக் கையெழுத்துப் போட்டுள்ளார் கோம். அந்த இடத்தில்தான் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோமுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமைதான் 38 வயதே பிறக்கிறது. இவ்வளவு சிறு வயதில் இவர் உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே தான் இவரது வீடு இருந்தது. கோம், யூத இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிறு வயதிலேயே தனது தாயாருடன் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தார். அப்போது இவருக்கு வயது 16தான். சோவியத் யூனியன் உடைந்த பின்னர் இந்த இடமாற்றம் நடந்தது.
ஆனால் கோமும், அவரது தாயாரும் மட்டுமே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். கோமின் தந்தை வரவில்லை.
உக்ரைனிலிருந்து வரும்போது கோமின் தாயார், தனது மகன் பயன்படுத்திய சில பேனாக்கள், நோட்டுப் புத்தகங்களையும் கூடவே கொண்டு வந்திருந்தார். கலிபோர்னியாவில் தனது மகனைப் பள்ளிக்குச் சேர்த்தபோது புதிய பேனா, நோட்டுப் புத்தகங்களை வாங்க முடியாததால் இவற்றையேப் பயன்படுத்திக் கொண்டாராம் கோம்.
படிக்கும்போதே, பலசரக்குக் கடை ஒன்றில் தரையைத் துடைக்கும் வேலையில் ஈடுபட்டு சம்பாதித்தார் கோம்.
பழைய புத்தகக் கடை ஒன்றை அணுகி அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பாராம் கோம். படித்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவாராம். இப்படித்தான் நெட்வொர்க்கிங் குறித்து படித்துத் தேறியுள்ளார்.
1997ம் ஆண்டு சிலிக்கான் வேலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்புக்காக சேர்ந்தார். மேலும் படிப்புச் செலவுக்காக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் யாஹு நிறுவனத்திற்காக ஒரு வேலைக்குப் போயிருந்தபோது பிரையன் ஆக்டனுடன் நட்பு ஏற்பட்டது.
இருவரும் ஒரே வருடத்தில் மிகச் சிறந்த , நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். யாஹு நிறுவனத்திலேயே என்ஜீனியராக வேலையில் சேர்ந்தார் கோம்.
யாஹு நிறுவன வேலை பிடித்துப் போனதால் படிப்பை விட்டு விட்டார் கோம். இந்த நிலையில் 2000மாவது ஆண்டு கோமின் தாயார் புற்றுநோயால் மரணமடைந்தார். அப்போது கோமுக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து உதவியர் ஆக்டன்தான்.
இந்த நேரத்தில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி டாட் காம் பூம் ஆக்டனுக்கு பெரும் பொருள் சேதத்தைக் கொடுத்தது. பலலட்சத்தை அவர் இழந்தார்.
2007ம் ஆண்டு இருவரும் யாஹு நிறுவனத்திலிருந்து விலகினர். ஒரு வருடம் ஜாலியாக ஊர் சுற்றிப் பார்த்தனர். அதன் பின்னர்தான் இருவரும் இணைந்து வாட்ஸ் ஆப் புரட்சிக்கு வித்திட்டனர்.. இன்று உலக இளைய தலைமுறையின் தகவல் தெய்வமாக மாறி நிற்கின்றனர்.
Labels:
அனுபவம்,
தொழில்நுட்பம்,
வாழ்க்கை வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment