டெபிட் கார்டு' எனப்படும் ரொக்க அட்டை வாயிலாக பொருட்கள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் பல்வேறு சேவைகளை பெறும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வங்கிகள் வழங்கும்,'டெபிட் கார்டு'ஐ, வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, 'டெபிட் கார்டு' வாயிலாக ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பது மட்டுமின்றி, சில்லரை விற்பனை நிலையங்களில், பொருட்களை வாங்குவதற்கும் இதை அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
தற்போது, 'டெபிட் கார்டு'களில் பல்வேறு பாதுகாப்பு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான காலத்தில், 'டெபிட் கார்டு' வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், கடந்தாண்டின் இதே காலத்தை விட, 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், 'கிரெடிட் கார்டு' எனப்படும் கடன் அட்டை வாயிலான வர்த்தகம், 22 சதவீதம் என்ற அளவில் தான் வளர்ச்சி கண்டிருந்தது.கடந்தாண்டு அக்டோபர் இறுதி நிலவரப்படி, உள்நாட்டில், 37.42 கோடி, 'டெபிட் கார்டு' வாயிலாக, 5.49 கோடி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் வர்த்தக மதிப்பு, 8,686 கோடி ரூபாயாகும் என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, உள்நாட்டில், 30.68 கோடி, 'டெபிட் கார்டு'கள் புழக்கத்தில் இருந்தன. இவற்றின் வாயிலாக, அவ்வாண்டில், 6,779 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.99 கோடி வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெற்றன.கடந்தாண்டு அக்டோபர் வரையிலுமாக, 'டெபிட் கார்டு' வாயிலாக, ஏ.டி.எம்.,களில், 55.16 கோடி பரிவர்த்தனை மூலம், 1.71 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில், 'டெபிட் கார்டு' வாயிலாக, பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான விழிப்புணர்வு நல்ல அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனங்களும், 'டெபிட் கார்டு' மூலம், பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்து வருவதாக, வங்கி துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment