Wednesday, 19 February 2014
விண்வெளி குப்பைகளை அகற்ற ஜப்பானின் புதுப் பிளான்..!
உலக நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சி காரணமாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுப்பொருட்களின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்களில் இருந்து, மக்கிபோகாத நெகிழிப் பொருட்கள் வரை பயன்படாத கணினிகள், அவற்றின் உதிரிபாகங்கள் என பல வகையான மின்னணு சாதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மலைமலையாக குவியத் துவங்கியுள்ளன. இந்த கழிவுகளை வெற்றிகரமாக கையாளும் வழிகளை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் வாங்குகின்ற பொருட்களில் பலவற்றை பயன்படுத்திய பின்னர் காயிலாங் கடையில் போட்டு சிறு தொகையாவது பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அவற்றை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என பிரித்து கையாளும் முறைகள் நிறையவே உள்ளன. தொழில் நுட்பவளர்ச்சில் மேம்பாடு அடைந்துள்ள இன்றும் கழிவுப்பொருட்களை கையாளும் வசதியில்லாமல் பல நாடுகள் அல்லல் படுகின்றன. புவியிலேயே இப்படியிருக்க விண்வெளியில் குவிந்துள்ள குப்பைகளை பற்றி என்ன சொல்வது?இந்நிலையில்தான் விண்வெளி ஆராய்ச்சியின் மற்றும் ஏனைய செயற்பாடுகள் காரணமாக விண்வெளியில் தங்கியுள்ள கழிவுகளை அகற்ற புதிய திட்டம் ஒன்றினை ஜப்பான் செயற்படுத்தவுள்ளது.
விண்வெளியில் குப்பைகளா? என்று வியப்படைய வேண்டாம். விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் விண்வெளியில் தான் உள்ளன. இப்படி மனிதரால் தேவையின்றி விண்வெளியில் விடப்பட்ட பொருட்களை தான் விண்வெளி கழிவுகள் அல்லது விண்வெளி குப்பைகள் என்று கூறுகின்றோம். ராக்கெட்டை முன்னோக்கி தள்ளுகின்ற எரிபொருள் கலன்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள்களிலிருந்து வெடித்து சிதறிய பகுதிகள், துண்டுகள், துகள்கள், ராக்கெட் இயந்திர பட்டைகள், சிறிய திருகாணி, குறடு மற்றும் பிற சிறிய பொருட்கள் அனைத்தும் விண்வெளிக்கழிவுகளே.
இதைக் கவனத்தில் கொண்டு முன்னாள் சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கியது முதல் எண்ணிக்கையில்லா கழிவுகள் அல்லது குப்பைகள் பரந்த விண்வெளியில் கொட்டப்பட்டுள்ளன என்று தான் குறிப்பிட வேண்டும். இவ்வாண்டு தொடக்கத்தில் கண்களால் காணக்கூடிய அளவில் 17,000 கழிவுகள் விண்வெளியில் உள்ளதாக Houston னிலுள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின், நாசாவின் விண்வெளிக்கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியியலாளர் நிக்கோலாஸ் ஜான்சன் தெரிவித்தார்.
அப்படியானால் கண்காணிப்பு கருவிகளால் பார்க்க முடியாத கழிவுகளின் எண்ணிக்கை தெரியவில்லை. கடந்த எப்ரல் திங்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்க சமூக மாநாட்டில் பங்குபெற்ற அறிவியலாளர்கள் 150 மில்லியன் துண்டுகளுக்கு மேலாகவே விண்வெளியில் கழிவுகள் உள்ளதாக குறிப்பிட்டனர். இவற்றில் பெரும்பாலானவை விண்வெளி வீரர்களால் வீசப்பட்டவை. இதற்கு முந்தைய புள்ளிவிபரங்கள் 45 விழுக்காடு விண்வெளி கழிவுகள் அமெரிக்காவாலும், 48 விழுக்காடு ரஷியாவாலும் குவிக்கப்பட்டவை என்று தெரிவிக்கின்றன. 1.2 விழுக்காடு மட்டுமே சீனாவால் உருவாக்கப்பட்டது.
பொதுவாக, மிதந்து கொண்டிருக்கும் விண்வெளிக் கழிவுகளின் சராசரி வேகம், நொடிக்கு 10 கிலோமீட்டராகும். அதிகபட்ச வேகம் நொடிக்கு 16 கிலோமீட்டர். சீருந்திலோ, பேருந்திலோ செல்லுகின்றபோது 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாக சொன்னால் ஒரு மணிநேரத்திற்கு 80 கிலோமீட்டர் என்று பொருள். இந்த வேகத்தில் சென்றாலே பறந்து போகிறார் பாருங்கள் என்று கூறுவதுண்டு. அப்படியானால் ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக 57,600 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவரும் விண்வெளி கழிவுகள், ஒன்றோடு ஒன்று மோதினாலோ அல்லது ஆராய்ச்சிகளை மேற்கோண்டிருக்கும் செயற்கைக்கோளோடு மோதினாலோ ஏற்படும் விளைவை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
10 கிராம் எடையுள்ள சிறிய கழிவுப்பொருள் மோதினாலே, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சீருந்து மோதினால் ஏற்படுகின்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீன விண்வெளி கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியலாளர் Du Heng கூறியுள்ளார்.எனவே விண்வெளி ஆய்வில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் விண்வெளியில் பெருகி வரும் கழிவுகளை பற்றி அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இதன்படி தற்போதுய் காந்த தன்மை கொண்ட வலைகளை விண்வெளியில் நிறுவுவதற்கு Japan Aerospace Exploration Agency (Jaxa) தீர்மானித்துள்ளது.ராக்கெட் மற்றும் சாட்டிலைட்டுடன் இணைத்து நிறுவப்படவுள்ள இந்த காந்த வலை தொழில் நுட்பத்தினை Kagawa பல்கலைக்கழகம் முதன் முறையாக பரிசோதனை செய்துள்ளது.இந்த வலையானது 300 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 30 சென்டிமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் இருப்பதுடன் முக்கோண வடிவத்தை உடையவையாக காணப்படுகின்றன.
வீடியோ லிங்க்: http://www.youtube.com/watch?v=8ZsmC6v1Qug
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment