Sunday, 16 February 2014

ஃபேஸ்புக் திருடர்கள் – ஆன்லைனில் எச்சரிக்கை தேவை..!



விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது. Personality and Individual Differencesஎன்ற ஆய்வின் மூலம் உளவியலாளர்களும் இதனை உறுதி செய்கிறார்கள். இந்த ஆய்வின் படி இரண்டு விதமான அடிப்படை சமூக தேவையே நம்மை ஃபேஸ்புக் நோக்கி இழுக்கிறது.

1. சார்புநிலை – அடிப்படையில் சார்ந்து வாழும் மனநிலை கொண்ட மனிதர்கள்.. தன் இருப்பை எப்போதும் உறுதிபடுத்த எத்தனிப்பார்கள். அதே நேரத்தில் தன்னை அங்கீகரிக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள்.

இந்தஉளவியலை ஃபேஸ்புக் அருமையாக பயன்படுத்திக் கொள்கிறது. அதாவது, முதலில் தனிமை படுத்தப்படாமல் இருக்க வேண்டி ஃபேஸ்புக் தளத்தில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது. பிறகு நட்புவட்டத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அங்கீகாரத்தை பெறமுடியும் என்ற முறையில் மேலும் பலரை இணைக்க வழிசெய்கிறது.

2. தனித்தன்மை –  அடிப்படையில் சார்புநிலை கொண்டவாராக இருந்தாலும் தனித்தன்மையை வெளிப்படுத்தவே அனைவரும் விரும்புவார்கள்.

இதனை ஃபேஸ்புக் சுய விவரம் (ப்ரொஃபைல்), நிலை தகவல், பின்னூட்டம் மற்றும் புகைப்படம் என பதிய செய்து தனித்தன்மையை தக்க வைக்க உதவுகிறது.

இந்த இரண்டு தேவைகளும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ நம்மைத் தூண்டி எப்போதும் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. நவீன உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கும் சூழலில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் இதற்கு வடிகால் அமைத்து தருகின்றன.

இந்த அடிப்படை தத்துவத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஃபேஸ்புக் 100 கோடிமக்களை தன்னுள் இணைத்து வைத்துள்ளது. எந்த ஒரு விசயத்திலும் நன்மைகள் இருப்பது போல சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையில் நாம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது நம்மை அறியாமல் பல்வேறு விதமான திருடர்களுக்கு மூட்டை சுமக்கும் பணியையும் செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Likejacking  and Clickjacking:



இந்த திருட்டைச் செய்பவர்கள் அதீத திறமை கொண்டவர்கள். பார்க்கவே மனம்விரும்பாத/வேதனை தருவது போன்ற படங்களை மருத்துவமனைகளில் திருடியோ அல்லது கிராபிக்ஃஸ் செய்தோ பதிவேற்றுவார்கள். பிறகு சோக கதையை எழுதுவார்கள்.அதாவது, இந்தப் படத்தில் இருப்பவர் ஏழை அவர் கால் விபத்தில் செயலிழந்துபொய்விட்டது. எனவே நீங்கள் இதை உங்கள் பக்கத்தில் பகிர்ந்தால் ஃபேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு பகிர்விக்கும் 1$ அந்தப் படத்தில் இருப்பவருக்கு தரும். நான் செய்துவிட்டேன் நீங்களும் பகிருங்கள் இல்லை என்றால் நீங்கள் மிருகம் என்று வேற வாசகம் இருக்கும்.

படத்தில் இருப்பவர் யார்? எந்த ஊர்? அது உண்மையா அல்லது பொய்யா என எந்தக் கேள்வியுமின்றி நாம் உடனடியாக ‘ஷேர்’ லிங்கை கிளிக் செய்து விடுவோம் ( நான் மிகவும் இரக்க குணம் கொண்டவன்.. நல்லவன்).

ஃபேஸ்புக் ஒவ்வொரு பகிர்வுக்கும் 1$ படத்தில் உள்ளவருக்கு தரும் என்பது எவ்வளவு அபத்தமான விடயம்! அப்படி தருவதால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு என்ன லாபம்? உண்மையில் இப்படி செய்வதால் ஃபேஸ்புக் சர்வர்களுக்கு தேவை இல்லாத சுமை தான். சரி அப்படியே இலாப நோக்கம் இல்லாமல் உதவி அடிப்படையில் ஃபேஸ்புக் பணம் கொடுக்கும் என்று சொன்னால் அதை அப்படியே தருமல்லவா? விளம்பர நோக்கில் என்றால் ஒருவரின் சோகத்தைக் கொண்டா ஃபேஸ்புக் விளம்பரம் தேடும்? அவ்வளவு கீழான நிறுவனமா அது!??

உண்மையில் என்ன நடக்கும் என்றால்.. நீங்கள் பயன்படுத்தும் Browser பொருத்து திருடர்களால் உருவாக்கப்பட்ட சில Hidden Script வேலை செய்ய ஆரம்பிக்கும். அது எதாவது ஒரு நிலைதகவலையோ அல்லது எதாவது தளத்தின் சுட்டியையோ உங்கள் Wall-இல் எழுதி வைக்கும் அது உங்களுக்கு தெரியாது. உங்கள் நண்பர்கள் பார்க்கும்படி இருக்கும். எந்தவித செலவில்லாமல் உங்கள் மூலமாக திருடர்களின் பொருளுக்கோ அல்லது தளத்துக்கோ விளம்பரம் கிடைத்துவிடும்.

இதேபோல பலவிதமான முறையில் Clickjacking and Likejacking-ஐப் பயன்படுத்துவார்கள். எல்லாமே உணர்வைத் தூண்டும் தொனியிலே இருக்கும்.

–>>ஒரு மாற்றுத்திறனாளி கடுமையான வேலை செய்வது போல இருக்கும் படத்தைபகிர்ந்து 1 share = 1 salute என வாசகம் எழுதப்பட்டிருக்கும். நாமும் உடனே Share செய்து சல்யூட் அடித்து விடுவோம். இதனால் அந்த மாற்றுத்திறனாளிக்கு உண்மையில் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. மாறாக திருடர்கள் தான் பயன் அடைவர்கள். உணர்வை தூண்டி காசு பார்க்கும் திருடர்களுக்கு நாம் உடந்தை!!

–>> சமீபத்தில் நடந்த டெல்லி கோர சம்பவத்தை பயன்படுத்தி போலியான படத்தைப் பகிர்ந்து இதையே தான் செய்தனர்.அந்தப் படத்தில் இருந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்த பின் அதை நீக்கினார்கள்.


திருடர்களின் பிரதான  நோக்கம்:

* வதந்திகளை பரப்புதல் ( உலகம் அழிய போகிறது, சைவ உணவு சாப்பிட்டால் நோய்வரும், etc)

* உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுதல்

* வைரஸ் பரப்புதல்

* உங்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்துக் கொள்ளுதல்

இதுகுறித்து Business Week வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மாதத்திற்கு சுமார் 2,80,214 பேர்களை இந்த மாதிரியான திருடர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவும் அதன் மூலம் அவர்கள் சுமார் 1.2 மில்லியன் டாலர் சுருட்டுகிறார்கள் எனவும் தெரிவிக்கிறது.

பணம் திருடுவது நோக்கமாக இல்லாத உளவியல் சிக்கல் உள்ளவர்கள் வேறுவிதமாக சுகம் காண்பார்கள். உதாரணம்:

இது போன்ற நிலைதகவலை தங்களது பக்கத்தில் பதிவதன் நோக்கம் என்னவென்று சற்று ஆய்வுச் செய்வோம்

“If no one reads my wall.  I’m afraid no one cares I’m here, please prove me wrong. Leave one word on how we met.”   இதன் நோக்கம் நான் மிகவும் முக்கியமானவர் என பிறர் உணரவேண்டும்

“Only one word”  ஒரு வார்த்தையில் மட்டும் இருக்க வேண்டும் என சொல்லும் நோக்கம் அப்போது தான் தமக்கு தேவையானது போல வார்தையை வாங்கலாம்.

“Then copy this to your wall.” இதன் மூலம் பிறரை தம் கட்டளைக்கு பணிய செய்ய வைக்கும் உத்தி.

“Please don’t add your word and then not bother to copy.”  அப்போது தான் மற்றவர்களும் தன்னை போல பாதுகாப்பு உணர்வில்லாமல் இருக்கிறார்கள் என்பதைகணித்து மகிழ முடியும்.

சரி இது போன்ற முட்டாள்த்தனமான வேலைகளில் இருந்து எப்படி தப்புவது/ என்ன செய்வது?

உணர்வைத் தூண்டி லாபம் பார்க்கும் இது போன்ற விசயங்களை பகிர்வதையும், லைக் செய்வதையும் தவிர்ப்பதன் மூலம் நாமும் நமது நண்பர்களும் இது போன்ற ஒரு இழிசெயலுக்கு உடந்தை ஆகாமல் தவிர்க்க முடியும். மேலும் Report spam எனும் சுட்டியைப் பயன்படுத்தி புகார் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா