Sunday, 16 February 2014
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்...!
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. நாம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை வாய்விட்டுச் சிரிக்கிறோம்? குழந்தைகள் ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்ட தடவை சிரிக்கின்றனவாம்.
ஆனால், பெற்றோர்கள் வெறும் 12 தடவைதான் சிரிக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. சிரிப்பதால் உடலில் உள்ள தசைகளில் அசைவேற்பட்டு, உடலிலும், மனதிலும் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைகிறது. இதனால் மனதிலிருந்து கவலைகள் வெளியேறி புத்துணர்வு கிடைக்கிறது.
சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்திருந்தும், அதை வெளிக்காட்டுவதில் பலருக்குத் தயக்கம் உண்டு. வீடு, அலுவலகம், வீதிகளில் தினமும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வின்போது இதுபோன்ற பலரை காண்பதுண்டு. அப்போது அவர்களைப் பார்த்து சிலர், சிடுமூஞ்சி என்று தமாஷாகக் கூறுவதுண்டு.
வீடு, அலுவலகம் என நாம் இருக்கும் இடத்தில் மனஅழுத்தத்துடன் (ஸ்டிரஸ்) இருப்பதை விட்டு, சிரிப்பை வெளிப்படுத்த வேண்டிய வேளையில், பணிக்குப் பாதிப்பில்லாமல் சிரிக்கலாம். நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சிரிக்க வைக்கலாம். இதனால், கவலைகள் நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். சிரிப்பதால் எதனையும் நாம் இழக்கப் போவதில்லை.
மகிழ்ச்சியோடு வேலை வாங்குவதிலும், அதிகாரத்தால் வேலை வாங்குவதிலும் கிடைக்கும் முடிவில் வேறுபாடு உள்ளது.
வீட்டில் குழந்தைகளிடம் அன்பாக சிரித்து கொண்டே, பேசியபடி அவர்களை படிக்க வைப்பதிலும், கையில் பிரம்பை எடுத்து விரட்டி படிக்க வைப்பதிலும் உள்ள வேறுபாடு குழந்தைகளின் தேர்வு முடிவில் தெளிவாகக் காணப்படும்.
இதுபோன்று அனைத்திலும் முடிவு சரியாக இருக்க வேண்டுமானால், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் தயக்கமின்றி வெளிப்படுத்துங்கள் (சிரியுங்கள்).
எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் “அ’, “ஆ’ என இரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுக்கும் உள்ள வகுப்பாசிரியர்கள் ஒரே தகுதியுடைவர்கள்தான். இருவரின் கற்பித்தலும் சிறப்பாகத்தான் இருக்கும்.
இவர்களில் “அ’ பிரிவு ஆசிரியர் மிகவும் அன்பானவர். அவரை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், “ஆ’ பிரிவு ஆசிரியர் கொஞ்சம் சிடுசிடுப்பானவர். அவர் வகுப்புக்குள் நுழைந்துவிட்டால் இந்த உலகமே அவரின் கீழ் உள்ளதை போன்று நினைத்துக் கொண்டு மாணவர்களை அதட்டி உருட்டுவார்.
இதனால் மாணவர்களும் பயந்து படிப்பதுபோன்று (அவருக்காக) நடிப்பார்கள் (சிலர் தூங்கிக் கொண்டும் இருப்பார்கள்). அவரும் ஏதோ சாதனை படைத்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்.
ஆனால், அந்த ஆண்டின் இறுதித் தேர்வில் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களில் 60 சதவீதம் பேர் அந்த குறிப்பிட்ட ஆசிரியர் எடுத்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அருகில் இருந்த, “அ ‘ பிரிவில் உள்ள மாணவர்களில் 100 சதவீதம் பேர் அதே பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அப்போது “ஆ’ பிரிவு ஆசிரியர், “அ’ பிரிவு ஆசிரியரிடம் “நானும் நன்றாகத்தானே பாடம் நடத்தினேன், அப்புறம் ஏன் என் வகுப்பில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்தது’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு “அ’ பிரிவு ஆசிரியர், “நீங்கள் பாடத்தை மட்டுமே நடத்தினீர்கள். நான் மாணவர்களின் மனதிற்குள் பாடத்தை கொண்டுச் சென்றேன்’ என்றார். “அது எப்படி’ என்றார் “ஆ’ பிரிவு ஆசிரியர்.
“அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அன்றாடம் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் சிரித்தும், மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டும் பாடத்தை நடத்தும்போது அவர்கள் தங்களுக்கு எது தேவையோ, அதனை மனத்திற்குள் நிறுத்திவிடுவார்கள்.
மேலும், மாணவர்களுடைய மனதும், உடலும் வலிமையாகி புத்துணர்வுடன் இருப்பார்கள். அதன்பிறகு நாம் நடத்தும் எவ்வித கடினமான பாடமாக இருந்தாலும், அதனை எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்றார்.
சிரிப்பின் தேவையை உணர்ந்தவர்கள் (வெளிநாட்டிலும், நம்மூரிலும்) சிலர் ஓரிடத்தில் ஒன்றுகூடி வாய்விட்டு சிரித்து மகிழ்வார்கள்.
இதுபோன்று நாம் ஒன்றுகூடிதான் சிரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால் போதுமே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment