Thursday, 20 February 2014

மியூகோபாலிசாக்கரைடோசஸ் நோயால் வெளிவந்த நட்பு...!



கர்நாடக மாநிலத்தில் அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு மாணவரை அவரது நண்பர்கள் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர்.
கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தாவரநாயக் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சவான்(16). தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சவான் ஒரு அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

15 வயது வரை சவான் பிற குழந்தைகளை போல ஓடி, ஆடி இருந்துள்ளார். திடீரென்று ஒரு நாள் இடுப்பு வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அந்த வலி அதிகமாகி அவரால் நடக்கவே முடியாமல் போனது.

அசோக் சவானுக்கு என்ன நோய் என்பதை கண்டறிய பெங்களூர், ஹைதராபாத் மற்றும் திருப்பதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ரூ.1 லட்சம் செலவு செய்ததாக அவரது தந்தை தர்மா சவான் தெரிவித்துள்ளார்.

சோலாபூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அசோக் சவானை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் தான் சவானுக்கு மியூகோபாலிசாக்கரைடோசஸ்(Mucopolysaccharidoses) என்ற அரிய வகை நோய் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த நோய் வந்தால் எலும்புகள் பலவீனமாகிவிடும். அதிலும் குறிப்பாக இடுப்பு மற்றும் மூட்டு பகுதி எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடுமாம்.

மகனுக்கு நடக்க முடியாமல் போனதை அடுத்து அவரை தந்தை தர்மா தான் தினமும் பள்ளிக்கு தூக்கிச் சென்றார். ஆனால் அவரது மனம் மகனை சுமக்க தயாராக இருந்தாலும் அவரது வயது இடம் கொடுக்கவில்லை.

தர்மா படும் கஷ்டத்தை பார்த்த அசோக் சவானின் நண்பர்கள் தங்கள் நண்பனை ஒரு குழந்தையை போன்று தினமும் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர்.

சிறந்த மாணவர் என்று அசோக் சவானை ஆசிரியர்கள் புகழ்கிறார்கள். சவானுக்கு ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பது தான் கனவு ஆகும். அவரது கனவை நனவாக்க நண்பர்கள் பக்கபலமாக உள்ளனர்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா