Thursday, 20 February 2014

7 பேர் விடுதலை:சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு!



ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்வது தொடர்பாக விளக்கம் கேட்கும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

அதில் ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில், அதனை தமிழக அரசு விடுவிக்க முடியுமா? என்று கேட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை அண்மையில்சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது.அத்துடன் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தது.

இந்நிலையில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யப்படும் என்றும் தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.

மேலும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்வதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில் மாநில அரசு விடுவிக்க முடியுமா?

என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மோகன் பராசரன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், நண்பகல் 12.45 மணிக்கு விவாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா