Monday 17 February 2014

ஆகாயத்தில் அரங்கேறிய அத்துமீறல்....!



 கிண்டல், கேலி, உள்நோக்கத்துடன் உரசுதல், தகாத வார்த்தைகளால் உடல் அமைப்பை வர்ணனை செய்தல் என்று பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் ஆண்களின் கைவரிசை அலுவலகம், சாலை, பேருந்து போன்ற இடங்களைத் தொடர்ந்து ஆகாயத்திலும் அரங்கேறி வருகிறது.

சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் விமானப் பணிப்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு விமானத்துறை அமைச்சகம் சார்பாக அளிக்கப்பட்ட பதில் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸில் பணிபுரியும் விமானப் பணிப் பெண்கள் மீதுதான் அதிக அளவில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்தி வெளியானது.

பணிப் பெண்கள் மற்றும் விமானச் சேவைக் குழுவிலுள்ள பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 84 வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனத்தில் 48 வழக்குகளும், இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில் 19 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்முகமும் வன்முறையும்

விமானப் பணிப்பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் உள்ளிட்ட வன்முறைகள் உலகம் முழுவதும் சகஜமாக இருப்பது பல செய்திகள் மூலம் புலப்படுகிறது. பயணிகளை அவரவர் இடத்தில் வசதியாக உட்காரவைத்துவிட்டு அவர்களை உபசரித்துக் கவனித்து உதவுவதே ஒரு பணிப் பெண்ணிண் கடமை.

பயணத்தின்போது பயணிப்போருக்கு எந்தத் தேவை ஏற்பட்டாலும், சீட்டைச் சாய்த்து ஹாயாக உட்காரவைப்பது முதல் கழிப்பறைக்கு வழி சொல்வது வரை இன்முகத்துடன் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆண்கள் பலர் தங்கள் காமவெறியை இந்த அப்பாவிப் பணிப் பெண்கள் மீது பிரயோகிக்கின்றனர். இது போன்ற பெரும்பாலான சம்பவங்களில் முக்கியப் புள்ளிகளும், அரசியல்வாதிகளும், வயதில் மூத்தவர்களும் ஈடுபடுகிறார்கள்.

2010ஆம் ஆண்டு, கோவாவைச் சேர்ந்த மூன்று கால்பந்து வீரர்கள் மும்பை வழி விமானத்தில் பணிப் பெண் ஒருவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்ததை அடுத்து, மும்பை போலீசார் அம்மூவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

விமானப் பணிப் பெண்ணிடம் போதையில் அத்துமீறியதற்காகவும் விமானத்தில் புகைபிடித்து அவமானப்படுத்தியதற்காகவும் கனடாவைச் சேர்ந்த பிரபலப் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரை நியு ஜெர்ஸி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

2004ஆம் ஆண்டு, தாய் விமான நிறுவனப் பணிப் பெண்ணிடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தவறாக நடந்துகொண்ட சம்பவத்தில் பிரிவு 354இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

பிரபலங்கள் மட்டுமல்ல, பைலட்டுகளும்கூட விமானப் பணிப் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு செய்து வழக்குகளில் சிக்கியுள்ளார்கள். 2010இல் தனியார் விமான நிறுவன பைலட் ஒருவர் தவறாக நடந்து கொண்டதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இப்படிப் பல வழக்குகள் அவ்வப்போது செய்தியாக வந்துகொண்டிருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தவறு இழைத்தவர் தண்டனையின்றித் தப்பித்துவிடுகிறார்.

கண்டுகொள்ளாத நிர்வாகம்

விமானத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவை என்று சொல்லிவிட முடியாது.

பணிப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் விமானச் சேவை நிறுவனம், விமான நிலைய மத்தியப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் குற்றவாளியை ஒப்படைத்துவிடுவது வழக்கம்.

பல நேரங்களில் தவறு செய்தவரை வெறுமனே எச்சரித்துவிட்டு, விமான நிலைய அதிகாரிகள் வெளியே விட்டுவிடுகின்றனர்.

உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள விசாகா வழிகாட்டு நெறிமுறையின்படி இந்திய விமானக் கட்டுப்பாட்டு துறையில் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைப் புகார்களை விசாரிக்கும் குழு அமைக்கத் தவறியதற்குக் கடந்த ஆண்டு கடும் கண்டனம் எழுந்தது.

 விமானச் சேவை நிறுவனங்களும் இது போன்ற புகார்களை ஒப்புக்கு எடுத்துக்கொள்வதாகவும், தண்டனை அளிப்பதையோ, காவல்துறையிடம் வழக்கை ஒப்படைப்பதையோ விரும்புவதில்லை என்றும் அத்துறையைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் கருதுகிறார்கள்.

விமானத்துக்குள் பயணிகளால் ஏற்படும் சிறுசிறு அத்துமீறல் சம்பவங்களைப் பணிப் பெண்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவது நல்லது என்றே நிறுவனங்கள் விரும்புவதாகவும் தெரிகிறது.

ஏனெனில், ஒவ்வொரு முறை இது போன்ற செய்தி வரும் போதும், விமான நிறுவனப் பெயரும் வெளிவருவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவப்பெயர் உருவாகி வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுவதே இதற்குக் காரணம்.

பல சம்பவங்களைப் பெரிதாக்க விரும்பாத நிறுவனங்கள் பணிப் பெண்களுடன் பேசித் தீர்த்துவிடுவதாகவே பெண் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். உணவுடன் மதுவும் வழங்கப்படுவதால், பன்னாட்டு விமானங்களில் பாலியல் அத்துமீறல்கள் பல மடங்கு அதிகமாக உள்ளன என்பதும் நிஜம்.

வேலையின் ஒரு பகுதியாக, அரிதாரம் பூசி, சிரித்த முகத்துடன் எல்லாரையும் சகித்துக்கொள்ளும் விமானப் பணிப் பெண்களைப் போகப் பொருளாகவே நினைக்கும் ஆண்கள் ஆகாயத்தில் என்ன செய்தாலும் தவறில்லை என்று நினைத்துவிட்டார்களா?

வெளியில் புன்னகையோடும் உள்ளே குமைச்சலோடும் இருந்த பணிப் பெண்களை, இதுபோன்ற அத்துமீறல்கள் தற்கொலை வரை தூண்டிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இந்த அத்துமீறலுக்கு அரசும் விமானச் சேவை நிறுவனங்களும் முடிவுகட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா