Saturday, 15 February 2014

இரவில் பல இளசுகள் மிக 'ஆக்டிவ்வாக' ஆன்லைனில் - அதிர்ச்சி தகவல்



 ஒரு நாள் இரவு தூக்கம் வராமல், சமூக வலைத் தளத்தை சற்று உலா வரலாம் என்று அதனுள் சென்ற எனக்கு ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. என் நண்பர்கள் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பல இளசுகள் மிக 'ஆக்டிவ்வாக' ஆன்லைனில் இருந்தனர். சரி, நம்மை போல தூக்கம் வராமல் இணையதளத்தில் உலாவருவதாகவே அப்போது எண்ணினேன். ஆனால் இவர்களுடன் சாட் (Chat) செய்தபோதுதான் புரிந்தது விஷயம். இந்த இளைஞர் கூட்டம் தினமுமே இரவு தொடங்கி விடியற்காலை வரை விழித்து கொண்டு ஆன்லைனில் இருப்பது தெரிந்தது.

பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் 'பொழுதோடு தூங்கி காலை பொழுதோடு எழுந்திரு' என்ற அறிவுரை தான் என் நினைவுக்கு வந்தது. இவ்வாறு இரவு முழுதும் விழித்திருந்து என்ன செய்கிறது இந்த இளைஞர் கூட்டம்? சற்று ஆராய்ந்தால் உண்மை புரிகிறது... சமூக தளங்களிள் ஆன்லைனில் இருப்பதால் இவர்கள் வெட்டி அரட்டை மட்டும் அடித்து கொண்டிருப்பதாக நினைத்து விட முடியாது. சரி, அப்படி வேறு என்ன தான் செய்து விடுகிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

இளைஞர்கள் பலரும் தங்களையும் தங்கள் நேரத்தையும் மறந்து, அறிவை வளர்க்கும் வலைதளங்களை மணிக்கணக்கில் படித்து கொண்டும், தம் எண்ணங்களை வெளிப்படுத்தி 'ப்ளாக்ஸ்' எழுதுவதிலும் இரவு நேரத்தை செலவிடுகின்றனர். பல மாணவர்களோ, தம் கற்பனைத் திறனைக் கொண்டு குறும்படம் தயாரித்தல், பாட்டுக்கு மெட்டு அமைத்தல், ஓவியம், கிராபிக்ஸ் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப என்னென்னமோ பரிட்சித்து பார்த்துகொள்கின்றனர். உடனுக்குடன் ஆன்லைனில் உள்ள தமது நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு இரவு நேரம் போவது தெரியாமல் மெய்மறந்து விடுகின்றனர்.

சரி, எல்லா இளசுகளுமா இரவை இப்படி கணினியில் உருப்படியாக கழிக்கிறார்க்ள்? அப்படி ஒன்றும் சொல்லிவிடமுடியாது. பலர் தங்கள் விருப்ப பாடல்களை கேட்டுக்கொண்டும், சினிமாக்களை டௌன்லோட் செய்து, கணினியில் பார்த்துக்கொண்டும், சமூக வலையில் தெரியாதவர்களிடம் சாட் அடித்து கொண்டும் தம் தூக்கத்தையும் மறந்து நேரத்தை போக்குகின்றர்.

இது பற்றி எழுதும்போது எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது. ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் பயிற்சி ஆசிரியராக நான் பணிபுரிந்த போது, மதிய வகுப்புகளுக்கு கூட மாணவர்கள் தாமதமாகவே வருவது வழக்கம். ஒரு முறை சற்று கடிந்து கொண்டு நேரத்தோடு வர சொன்னதற்கு, ஒரு மாணவி என்னிடம் சொன்னாள் “மேம் நீங்க பேசாம வகுப்புகளை இரவு நேரத்திற்கு மாத்திடுங்க.. நாங்க சரியான நேரத்துக்கும் வருவோம், இப்படி தூங்கியும் வழியாம பாடங்களை அற்புதமா கவனிப்போம்..” என்று. தூக்கிவாரிப் போட்ட எனக்கு அதைப் பற்றி யோசித்த போதுதான் அதில் உள்ள உண்மையும் புரிந்தது.

வகுப்பில் நான் பல முறை கொடுக்கும் எழுத்து மற்றும் பட தயாரிப்பு பயிற்சி வேலையை சரி வர செய்ததை விட, வீட்டில் இரவு முழுதும் ஆராய்ச்சிசெய்து தயாரித்து வந்தவை மிக அற்புதமான, கற்பனை வடிவுடன் கூடிய படைப்புகளாகவே இருந்துள்ளதை என்னால் மறுக்கமுடியாது.

என்னதான் இந்த இரவு நேரம் முழித்திருக்கும் பழக்கத்தில் நன்மை இருப்பது போல் இருந்தாலும், இந்த புது வித பழக்கத்தால் பல எதிர்மறைகளும், சிக்கல்களும் இருப்பதை இளைஞர்கள் ஒதுக்கிவிட முடியாது.

இரவு முழுதும் உறங்காமல், விடியற்காலை தூங்கி, அவசரஅவசரமாக காலை எழுந்து தாங்கள் செய்ய வேண்டிய வேலையை தவறவிடும் இளைஞர்களாகவே ஆகிவிடுகின்றனர். இன்று மாணவர்களாக இருக்கும் இவர்கள் நாளை பணிக்கு செல்லும் இடத்தில் இவ்வாறு நடக்கதான் முடியுமா? காலையில் செய்ய வேண்டிய அலுவலக வேலையை வீட்டில் இரவில் முடிப்பேன் என்று சொல்லத்தான் முடியுமா? பி.பி.ஓ, ஐ.டி., மற்றும் சில துறைகளிள் இரவு நேர ஷிப்ட் வசதி இருந்தாலும் எல்லா துறைகளுக்கும் இந்த பழக்கம் சாத்தியப்படாது.

அமெரிக்கா, ஐரோப்பா, ல்ண்டன், சீனா போன்ற நாடுகளிள் பொதுவாகவே நம்மை விட காலை சீக்கிரம் அலுவலகம் செல்லும் பழக்கமே உள்ளதால் இரவு பொழுதோடு தூங்கும் பழக்கத்தையே கொண்டுள்ளனர். பல நாடுகளில் கடைகள், மால்களை கூட மாலை 6 மணிக்கு மூடிவிட்டு, இரவு சாப்பாட்டையும் பொழுதோடு முடித்துக்கொண்டு உறங்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இளைஞர்களுடன் இது பற்றி விவாதித்தால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரவில் தான் பல அற்புத மெட்டுக்களை அமைத்தார் என்றும், பிரபல எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பலரும் இரவிலேயே பணிகளை வெற்றிகறமாக செய்ததை எடுத்துக்காட்டாக கூறி வாயை அடைத்துவிடுகின்றனர். சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களை பாராட்டினாலும், இந்த இரவு விழிக்கும் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்பை மறுத்துவிடமுடியாது.

இரவு தொடங்கி விடியற்காலை மூன்று, நான்கு மணிவரை முழித்து, பின்னர் தூங்கி காலை எழமுடியாமல் எழுந்து கல்லூரிக்கும், அலுவலகத்திற்கும் ஓட வேண்டியுள்ளதால், காலை டிபனை சாப்பிடாமல், பகல் 12 மணி சுமாருக்கு மதிய உணவையும் சேர்த்து 'ப்ரன்ச்' (Brunch) என்ற பெயரில் சாப்பிடுவது தங்கள் உடலை எந்த அளவு பாதிக்கும் என்று அறியவில்லை இளவட்டங்கள்.

தூக்க கலக்கத்தோடு பணிபுரியும் இவர்கள் தங்கள் முழுத்திறமையை காட்டத் தவற விடும் நிலைதான் உருவாகிறது. மன சோர்வு, உடல் சோர்வு ஏற்படுத்தும் இப்பழக்கம், இளைய சமுதாயத்தின் வளர்ச்சியையே பாதித்துவிடுமோ என்ற அச்சம் தான் நமக்கு எழுகிறது.

எனவே ஆந்தையை போல இரவில் விழித்திருக்கும் இளைஞர்களே, சற்று யோசித்து நடந்து கொள்ளுங்கள்! உங்கள் இந்த இரவு வாழ்க்கையை வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தொடருங்கள்.. தினம் இரவு கண்களுக்கு ஓய்வுகொடுத்து காலை பொழுதை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா