விந்தணுக்கள் நுண்ணறிவுத் திறனை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லுமா? சென்னையைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர்.
விந்தணுவைத் தர விரும்புபவருக்கு அழகு, உயரம், தீய பழக்கவழக்கங்கள் இல்லாத சிறந்த உடல்நலம் ஆகியன இருக்கவேண்டும் என்று கூறியுள்ள அந்த விளம்பரம், இந்தியாவின் தலையாய தொழில்நுட்பக் கல்விக்கூடங்களான ஐஐ.டி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பக்கழகங்களில் படிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்பதையும் தகுதியாக கூறியிருந்தது.
இந்தத் தகுதிகள் இருக்கும் நபரின் விந்தணுவுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் இந்த விளம்பரத்தில் கூறியிருக்கிறார்கள்.
இந்த விளம்பரம் இப்போது இந்தியாவில் ஊடகங்களிலும் சமூக இணைய தளங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஐ.ஐ.டி மாணவனின் விந்தணு தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுக் கூறியிருப்பது, அறிவு என்பது மரபணு மூலம் அடுத்த தலைமுறைக்கு மாறும் என்ற நம்பிக்கை சமூகத்தில் இருப்பதைக் காட்டுகின்றது.
‘மருத்துவ ஆதாரங்கள் இல்லை’
இந்த நம்பிக்கைக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது மரபணு விஞ்ஞான ரீதியாகவோ அடிப்படை ஏதும் இருக்கிறதா என்று சென்னை செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் செயற்கை கருத்தரிப்பு மருந்தியல்துறை தலைவருமான டாக்டர் என்.பாண்டியனிடம் கேட்டபோது, இவ்வாறான நம்பிக்கைகளுக்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லையென்று அவர் தெரிவித்தார்.
நுண்ணறிவுத் திறன் என்பது தந்தையிடமிருந்து பிள்ளைக்கு விந்தணுமூலம் மாறுகிறது என்ற நம்பிக்கை ஆதாரமற்றது என்றும் ஐஐடித் துறைச் சார்ந்தவர்கள் திறமையானவர்கள், மற்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்று கருதுவது தவறான அபிப்பிராயம் என்றும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
சொந்த முயற்சி, சூழல் மற்றும் அனுபவங்கள் மூலம் மட்டுமே நுண்ணறிவுத் திறமையாளர்கள் உருவாவார்கள் என்பதற்கான ஆதரங்களே உள்ளதாகவும் டாக்டர் கூறினார்.
No comments:
Post a Comment