ஆபரேஷனுக்கு முன் ஒரு வாரம் உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் கண்டுபிடிப்பு இந்திய டாக்டர் சாதனை:-
உடல் உறுப்புகளை ஒரு வாரம் பாதுகாத்து வைக்க உதவும் புதிய ரசாயன திரவம் ஒன்றை இந்திய டாக்டர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே. இப்போது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார்.
தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது. கடந்த 20 ஆண்டு கால முயற்சியின் பலனாக தற்போது சோமா என்ற புதிய ரசாயன கலவையை டாக்டர் ஹேமந்த் கண்டுபிடித்துள்ளார்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. தானமாக பெறப்படும் உறுப்புகளை சில மணி நேரங்களில் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தி விட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். விபத்துகளில் உயிரிழந்தோர், மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குகின்றனர்.
அந்த உறுப்புகளை சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு பொருத்த முடிவதில்லை. இதனால் உறுப்புகள் தானமாக கிடைத்துள்ள நோயாளிகளுக்கு பலன் இல்லாமல் போய் விடுகிறது. இந்த பிரச்னைக்கு டாக்டர் ஹேமந்த் கண்டுபிடித்துள்ள புதிய ரசாயன கலவை தீர்வாக அமைந்துள்ளது.
தானமாக பெறப்படும் உறுப்புகளை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை சோமா ரசாயன கலவையில் பாதுகாத்து வைக்க முடியும். தற்போது இருதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் புதிய கண்டுபிடிப்பான சோமா என்ற திரவத்தில் வைத்து பாதுகாக்கலாம். உறுப்புகளை தானமாக பெற்றவுடன் நோயாளிக்கு பொருத்த வேண்டிய நிர்பந்தம் இருக்காது. இந்த புதிய ரசாயனம் ஒரு வாரம் வரை உறுப்புகளை பாதிப்பில்லாமல், திசுக்கள் அழியாமல் அதே நிலையில் வைக்கும். சாதாரண வெப்ப நிலையிலேயே இந்த ரசாயனத்தில் உறுப்புகளை போட்டு வைக்கலாம்.
இதுகுறித்து டாக்டர் ஹேமந்த் கூறுகையில், கடந்த 20 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக 21 ரசாயன கலவைகளை உள்ளடக்கிய புதிய சோமா என்ற திரவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளை சாவு அடைந்த ஒருவரது உறுப்புகளில் இருதயம், நுரையீரல் உள்ளிட்டவற்றை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 முதல் 6 மணி நேரத்துக்குள், சிறுநீரகத்தை 24 மணி நேரத்துக்குள் பொருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அது முடியாத பட்சத்தில் உறுப்புகள் பயனற்றதாகி விடுகின்றன.
இந்த பிரச்னையை தீர்க்க புதிய ரசாயன கலவை பயன்படும். இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து நீண்ட தூரம் எடுத்து சென்று உறுப்புகளை மற்றவர்களுக்கு பொருத்துவது எளிது. பன்றிகளின் உறுப்புகளை புதிய சோமா திரவத்தில் வைத்து பரிசோதித்ததில் வெற்றி கிட்டியுள்ளது. இது விரைவில் பயன்பாட் டுக்கு வர உள்ளது.
இவ்வாறு டாக்டர் ஹேமந்த் கூறியுள்ளார்.
இவருடைய கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, 25 February 2014
ஆபரேஷனுக்கு முன் உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் - இந்திய டாக்டர் சாதனை..!
Labels:
அனுபவம்,
உடல்நலம்,
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment