குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. அதிலும் அவர்களை நம் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது மிகவும் கடினமானது. ஆகவே குழந்தைகள் நம் பேச்சை கேட்க மறுக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை மிரட்டுவதோ, அடிப்பதோ அல்லது அவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்தால் மட்டும் குழந்தைகளை நம் வழிக்கு கொண்டு வர முடியாது.
child and parentsமாறாக, இதனால் குழந்தைகளின் மனதில் கெட்ட அபிப்பிராயத்தைத் தான் பெற முடியும். பின் பிற்காலத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள்.
ஆனால் குழந்தைகளிடம் பொறுமையாகவும், அன்பாகவும், அவர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொண்டு அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் நிச்சயம் காதைக் கொடுத்து கேட்டு புரிந்து கொண்டு நடப்பார்கள். மேலும் இதனால், குழந்தைகள் தங்கள் பெற்றோரை அளவுக்கு அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பதோடு, அவர்களுக்கு நெருங்கிய நண்பனாகவும் ஆக முடியும்.
ஏனெனல் அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்க முடியும். அதுமட்டுமின்றி, எப்பேற்பட்ட குணமுடையவரையும் பணிய வைக்க முடியும். இங்கு குழந்தைகள் பெற்றோர்களின் சொல் பேச்சை கேட்டு நடக்க வேண்டுமானால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றி, உங்கள் குழந்தைக்கு பிடித்த பெற்றோராக இருங்கள்.
குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்கும் போது, அவர்களிடம் சத்தமாகவோ, மிரட்டும் படியாகவோ சொல்லக் கூடாது. இதனால் குழந்தைகளின் மனம் தான் அதிகமாக கஷ்டப்படும். ஆகவே பொறுமையை கையாண்டு, மென்மையாக சொல்ல வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் வெளிப்படையாக பேசினால், அவர்களது மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பதோடு, அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருக்க முடியும். அதுமட்டுமல்லாமல், அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒருவேளை அவர்களிடம் அப்படி இல்லாவிட்டால், அவர்கள் உங்களிடம் எதையும் பகிராமல், அவர்களுக்கு தோன்றுவதே சரி என்று செய்ய ஆரம்பிப்பார்கள்.
எப்போதுமே உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம். இது அவர்களது மனதில் பெரிய வடுவாய் அமைந்து, அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும். மேலும் இவ்வுலகில் அனைத்து குழந்தைகளுமே ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு எந்த ஒரு கட்டளை இடுவதாக இருந்தாலும், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மென்மையான முறையில் சொல்ல வேண்டும். அதை விட்டு, பாடம் எடுப்பது போல் எதை எதையோ சொன்னால், அவர்களுக்கு கடுப்பு வந்து, பின் உங்கள் வார்த்தையை மதிக்கக்கூட மாட்டார்கள்.
குழந்தைகளிடம் பழகும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றவாறு யோசித்து, அவர்களைப் போலவே சிந்தித்து, அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும். இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.
குழந்தைகள் விருப்பப்பட்ட எதற்கும் வேண்டாம் என்று சொல்லாமல், சரி என்ற சொல்லிப் பாருங்கள். இதன் மூலம் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் வார்த்தையை மதிப்பதோடு, நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அன்பையும், அக்கறையையும் புரிந்து கொண்டு, எந்த ஒரு தவறான பாதைக்கும் செல்லமாட்டார்கள். இப்படி சிறு வயதிலிருந்தே நடந்து கொண்டால், பிற்காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும்.
குழந்தைகள் ஏதேனும் ஒரு பெரிய தவறு செய்துவிட்டால், அந்த தவறைப் பற்றி எப்போதும் பேசாமல், அவர்களிடம் கூலாக இனிமேல் அந்த தவறை செய்யாதே, அதை மறந்துவிடு என்று மன்னிக்கும் குணத்துடன் பேசிப் பாருங்கள். பின் உங்கள் குழந்தைகள் உங்கள் மீது எவ்வளவு பாசம் வைத்து, உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள் என்று புரியும்.
தற்போதுள்ள குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எதற்கும் காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள். எனவே அவர்களை ஒரு விஷயம் செய்யதே என்று சொல்வதாக இருந்தால், அந்த விஷயத்தை செய்வதால் ஏற்படும் தீமைகளை விரிவாக சொல்லுங்கள். இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதனை செய்யவேமாட்டார்கள்.
உங்கள் குழந்தை ஏதேனும் சிறு விஷயத்தை வெற்றிகரமாக முடித்தாலும், மிகுந்த சந்தோஷப்பட்டு அவர்களை வாழ்த்த மறக்க வேண்டாம். இப்படி வாழ்த்துவதன் மூலம், அவர்களுக்கு உங்கள் அன்பு வெளிப்பட்டு, உங்கள் மீது பிரியம் அதிகரித்து, உங்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள்.
பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கும் நம் மூளைக்கு எட்டாத ஒருசில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆகவே அவர்களது பேச்சுக்கும் மதிப்பு கொடுத்து கேட்டால், அவர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடப்பார்கள்.
No comments:
Post a Comment